திரைப் பார்வை: தேசத்தின் எதிரி அல்ல, அரசாங்கத்தின் எதிரி! - இந்து சர்க்கார் (இந்தி)

By ந.வினோத் குமார்

ந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த பலத்த அடிகளில் ஒன்று… நெருக்கடி நிலை! இதுகுறித்து நிறைய எழுதப்பட்டிருக்கிறது; விவாதிக்கப்பட்டிருக்கிறது; திரைப்படங்களாகவும் பேசப்பட்டிருக்கிறது. அந்தத் திரைப்படங்களின் வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கிறது பிரபல இயக்குநர் மதூர் பண்டார்கரின் ‘இந்து சர்க்கார்’ திரைப்படம்.

‘பேஜ் 3’, ‘டிராஃபிக் சிக்னல்’, ‘ஃபேஷன்’ உள்ளிட்ட பல முக்கியமான படங்களைக் கொடுத்தவர் மதூர் பண்டார்க்கர். அவரின் இயக்கத்தில், நெருக்கடி நிலை குறித்து படமொன்று வெளியாகிறது என்பதாலேயே ‘இந்து சர்க்கார்’ படத்துக்கு நிறைய ஊடக வெளிச்சம் கிடைத்தது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு, காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து அதிருப்தியும் வெளிப்பட்டது. இந்தப் படத்துக்குத் தடை கோரி சிலர் நீதிமன்றம் செல்ல, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால், எதிர்பார்த்த அளவு படம் இருக்கிறதா?

பொதுவாக, நெருக்கடி நிலையை, இந்திரா காந்தியின் நிலையிலிருந்து அணுகுபவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சிலர், அவருடைய மகன் சஞ்சய் காந்தியின் பார்வையிலிருந்தும் அணுகுகிறார்கள். மதூர் பண்டார்க்கரின் இந்தப் படம், சஞ்சய் காந்தியின் எமர்ஜென்ஸியைக் காட்டுகிறது.

1975-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டுவரை, சுமார் 19 மாதங்கள், இந்திய மக்கள் மீது கவிழ்ந்த நெருக்கடி நிலை, அதனால் சிதறும் ஒரு குடும்பம்… இதுதான் இந்தப் படத்தின் ஒருவரிக் கதை. அந்தக் கதையைத் திரைக்கதையாகச் சொல்வதில் நிறைய தயக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறாள் இந்தக் கதையின் நாயகி இந்து. கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட அவள், திருமணத்துக்குப் பிறகு இந்து சர்க்கார் ஆகிறாள். அவளுடைய கணவன் நவீன் சர்க்கார், மத்திய அரசின் ஊழியர்களில் ஒருவன். ‘எமர்ஜென்ஸி வந்ததுக்குப் பிறகுதான் நான் பைக்கிலிருந்து காருக்கு மாறினேன்’ என்று சந்தோஷப்படுபவன்.

04chrcj_hindu sarkar 3

இந்நிலையில், அவர்கள் வாழும் பகுதிக்குப் பக்கத்தில் உள்ள குடியிருப்பு, நகரை அழகுபடுத்தும் விதமாக அரசால் தரைமட்டமாக்கப்படுகிறது. அப்போது காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படும் கலவரத்தில் இரண்டு குழந்தைகள் சிக்கிக்கொள்கிறார்கள்.

அவர்களைக் காப்பாற்ற முயல்கிறாள் இந்து. அவளின் அந்த நல்லெண்ணமே, அவளின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதற்கும், நெருக்கடி நிலைக்கு எதிராக அவள் போராடுவதற்கும் காரணமாக அமைகிறது. அந்தப் போராட்டத்தில் அவள் வென்றது என்ன, இழந்தது என்ன என்பதை 70 சதவீதக் கற்பனையையும் 30 சதவீத உண்மையையும் கலந்து சொல்லியிருக்கிறார் மதூர் பண்டார்க்கர்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஆண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை, நகரை அழகுபடுத்த சேரிப் பகுதிகளை அழிப்பது உள்ளிட்ட சஞ்சய் காந்தியின் முக்கியமான நடவடிக்கைகளை இந்தப் படம், வசனங்கள் மூலமாகத் தொட்டுச் செல்கிறது. மாறாக, பாலிவுட்டின் பிரபலப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் நெருக்கடி நிலைக்கு எதிராகப் பேசியதால், அவரின் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்படும் நிகழ்வுகள், அவரின் பாடல்களைப் பாடுபவர்களைக் கைதுசெய்வது போன்ற நடவடிக்கைகளைக் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.

இவ்வாறு, நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் மக்கள் சந்தித்த பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசாமல், சில பிரபலங்கள் சந்தித்த பிரச்சினைகளை மட்டும் அப்பட்டமாகக் காட்டுவதன் மூலம், நெருக்கடி நிலையை ஆவணப்படுத்துவதிலிருந்து விலகி, அதை ஒரு கேளிக்கை சம்பவமாகப் படம் பிடிக்கிறார் மதூர் பண்டார்க்கர். அது திரைக்கதையின் மாபெரும் சறுக்கல்!

உணவு விடுதி ஒன்றில், ‘இங்கு அரசியல் பேசாதீர்கள். அடுத்த அறிவிப்பு வரும்வரை’ என்று நையாண்டியாக எழுதப்பட்டிருக்கும் அறிவிப்பைக் காண்பிப்பது, இந்திரா காந்தியை வெளிநாட்டு ஊடகங்கள் ‘ஹிட்லர்’ என்று வர்ணித்ததைச் சொல்வது, நெருக்கடி நிலையின்போது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கைது செய்யப்படுவது உள்ளிட்ட விஷயங்களைக் காட்டியதன் மூலம், படத்துக்கு ஒரு சமநிலையைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர்.

திக்கிப் பேசும் தன்மை கொண்ட இந்து சர்க்காராக, கீர்த்தி குல்ஹாரியின் நடிப்பு பிரமாதம். அவரின் கணவர் நவீன் சர்க்காராக தோத்தா ரே சவுத்ரி, சஞ்சய் காந்தியாக நீல் நிதின் முகேஷ் ஆகியோரின் பாத்திரத் தேர்வு அருமை.

படத்தில் இப்படி ஒரு வசனம் வரும்: ‘நான் தேசத்துக்கு எதிரானவன் அல்ல. அரசுக்கு எதிரானவன்’. அந்த ‘அரசுக்கு எதிரானவ’னின் கதையை இன்னும் காத்திரமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் சொன்னால், எங்கே தன்னை ‘தேசத்துக்கு எதிரானவனாக’ கருதிவிடுவார்களோ என்ற அச்சத்தில், மதூர் பண்டார்க்கர் அடக்கி வாசித்திருக்கிறார்.

இந்தியாவில் அரசியல் படம் எடுப்பவர்களுக்கே உரித்தான சாபமிது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்