சி
னிமாலஜி சிறப்பு வகுப்பில் இயக்குநர் ராம். மாணவர்களிடம் அத்தனை ஆர்வம்.
“ ‘கற்றது தமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’... உங்க படங்களில் அதீதமும் இயல்பும் சரிவிகிதத்தில் கலந்திருக்கிறதே?” என்று கவிதா இழுத்தாள்.
“ரெண்டு படத்தை வெச்சு இப்படி ஒரு தீர்மானத்துக்கு வரக் கூடாது. இதோ மூணாவது படம் ‘தரமணி’. நானும் மார்க்கெட்டை கன்சிடர் பண்ணனும். சர்வைவலுக்கு இது முக்கியம். நாலாவதா ‘பேரன்பு’ எடுக்குறேன். அஞ்சாவதா, ஆறாவதா படம் பண்ணும்போதுதான் எனக்குப் பிடிச்சதை முழுசாத் தமுடியும்னு தோணுது.”
“உங்க படங்களில் பெசிமிஸ்டிக் அதிகமா இருக்கே?” என்று கேட்டான் பார்த்தா.
“நீங்க கதையைத் தட்டையா பார்க்குறீங்களோன்னு தோணுது. டார்க்னஸ் அதிகமா இருக்குன்னு கேட்க வர்றீங்களா?”
“யெஸ்... அதைத்தான் தப்பாக் கேட்டுட்டேன்.”
“என் கதையில் வில்லன் இல்லை. ஹீரோவை உருவாக்கி கதை பண்றதுல உடன்பாடு இல்லை. என் திரைக்கதை ‘தீஸிஸ்’ அடிப்படையிலானது. இந்த ஊர்ல இந்தக் காலகட்டத்துல இது நடக்குது; இந்த தீஸிஸ்ல இருந்து ஒரு கான்ஃபிளிக்ட் உருவாகுது. எனவே, சூழல்தான் என் படத்துக்கு வில்லனா உருவெடுக்குது. நான் பார்த்த, படிச்ச உலகமயமாக்கல் ஏற்படுத்தின தாக்கத்தை வெச்சுதான் ‘கற்றது தமி’ழை உருவாக்கினேன். அது டார்க்னஸ்தான். ஆனா, ‘தங்க மீன்க’ளுக்கு அப்படி இல்லை. அது ஒரு ஃபீல் குட் மூவி. ‘தரமணி’ சட்டயரிக்கான படம். ‘பேரன்பு’ ஃபீல் குட் மாதிரி தோணலாம்; அப்படி இல்லாம வேறொரு அனுபவமும் கிடைக்கலாம்.
ஒரு படத்தைப் பார்க்கும்போது முன்தீர்மானம் கூடாது. ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் நான் எப்படி இருக்கேனோ, அது என் படைப்பிலும் எதிரொலிக்கும். ஒரு படைப்பை மதிப்பீடு செய்யலாம். ஆனால், ஒரே ஒரு படைப்பை வெச்சு படைப்பாளியை ஜட்ஜ் பண்றதை ஏத்துக்க முடியாது.”
“சரி, திரைக்கதையில் உங்களோட அணுகுமுறைதான் என்ன?” என்ற ப்ரியாவின் கேள்விக்குச் சுருக்கமாக ராம் சொன்ன பதில்:
“ஃபர்ஸ்ட் ஆக்ட், செகண்ட் ஆக்ட், தேர்டு ஆக்ட் முறையில் எனக்கு விருப்பம் இல்லை. நான் ஃபிலாஸபி - தீஸிஸ்ல இருந்து எழுதுறேன். இது மதில் மேல் பூனை நிலைதான். இதை முழுசா எட்டுறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஒரு ஹீரோ, வில்லன், சிக்கல்கள், முடிவு... இந்த மாதிரியான போக்குல ஈடுபாடு இல்லை.”
“இந்திய சினிமாவுக்கு சென்சார் முறை தேவையா?” என்று விஷயத்துக்கு வந்தான் ப்ரேம்.
“கண்டிப்பாகத் தேவை. பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் இருக்கக்கூடியதும், சிறுபான்மையினர் மிகுதியாக இருக்கக் கூடியதும், சாதிப் பிரச்சினைகள் நிறைந்து இருக்கக் கூடியதுமான நாட்டில் சினிமாவைக் கவனமாக அணுகணும். நிறைய வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், மக்கள் கூடிப் பார்க்கும் சினிமாவைக் கவனமாகக் கையாளவில்லை என்றால் சிக்கல்கள் உண்டாகும். அந்த அடிப்படையில் சென்சார் தேவைதான்.
யு, யு/ஏ, ஏ சான்றிதழ் தரக்கூடிய அமைப்பா இருக்குற சென்சார் அமைப்பு செயல்படும் விதம் இனி பெரிய ஆபத்தை விளைவிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏன்னா, எல்லாமே டெல்லியோட பார்வைக்குப் போகணும் என்ற சூழல் அதிகம். இதனால், தமிழ் சினிமா மாதிரி மாநில மொழித் திரைப்படங்களுக்குப் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். ஒற்றை ஆட்சி - ஒற்றை அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சி நடக்குது. மூணு, நாலு வருஷம் கழிச்சி ஜனநாயகக் குரல் இல்லாமல் போகும். எதிர்காலத்தில் தமிழ் பிரச்சினைகள், தமிழக அரசியல் பிரச்சினைகள், தமிழகச் சிக்கல்கள் பேச முடியாமல், அசல் தமிழ் சினிமாவைத் தர முடியாத நிலையும் ஏற்படலாம்.”
“இன்னும் கொஞ்சம் ஷார்ப்பா சொல்லலாமே” என்று பார்த்தா கேட்க, “மத்தியில் ஆளும் கட்சியின் பிரதிநிதியாகவும், பொதுப்புத்திக்குப் பங்கம் வராமலும், இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டும்தான் சென்சார் அமைப்பு எப்பவும் இயங்குது. இப்படி இல்லாமல், ஜனநாயகத்துடன் சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். முழுக்க முழுக்க குழப்பங்களும் விதிகளில் தெளிவின்மையும்தான் இப்ப இருக்கு” என்றார் ராம்.
“நவாஸுதீன் சித்திகி நடிப்பில் ‘பாபுமோஷய் பந்தோக்பாஸ்’ என்ற படத்துக்கு வன்முறை, பாலுறவு நெருக்கக் காட்சிகளை முன்வைத்து ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதோடு, 48 இடங்களில் கட் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ‘ஏ’ கொடுத்த பிறகு ஏன் கட் என்று கேட்டால், அந்தப் படத்தை தியேட்டரில் குழந்தைகளும் பார்க்க வாய்ப்பிருக்கேன்னு சொல்லியிருக்காங்க. ‘ஏ’ சான்றிதழ் படத்துக்கு தியேட்டரில் குழந்தைகள் அனுமதிக்கப்படுறதைக் காரணமா சென்சார் அமைப்பினரே சொல்றது அபத்தம். உங்களோட அனுபவம் இதுல எப்படி?” என்று ப்ரியா கிளறினாள்.
“என் படத்துக்கு ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. அதோட ‘எஃப் வேர்டு’ கெட்ட வார்த்தைகளை கட் பண்ணச் சொன்னாங்க. ஒரு பெண், ஒரு ஆணை எதிர்த்துப் பேசுவது தப்பில்லை. பெண்களை ஆண்கள் கிண்டலடிப்பதற்கு ‘யு/ஏ’ தர்றாங்க. ஆனால், ஒரு பெண், ஆண்களை எதிர்த்துச் சண்டையிடும்போது கூறும் கெட்ட வார்த்தைகளை ‘ஏ’-வாகக்கூட அனுமதிக்கலை. லிவிங்-டுகெதர் என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானதுன்னு ‘ஏ’-ன்னு சொன்னாங்க. அப்படின்னா ‘ஓ காதல் கண்மணி’க்கு மட்டும் எப்படி யு/ஏ கொடுத்தீங்கன்னு கேட்டா, அது வேற குழு கொடுத்துச்சுன்னு சொல்றாங்க. சென்சார் அமைப்பு விதிமுறைகள், ஒவ்வொரு குழுவுக்கு ஏத்த மாதிரி மாறுது. இதெல்லாம் வேடிக்கையா இருக்கு” என்று சிரித்தார் ராம்.
“நீங்க சொல்றதைப் பார்த்தா, படம் எடுக்கும்போதே சென்சாரை மைண்டல வெச்சுட்டுதான் ஷூட் பண்ணனும் போல இருக்கே” என்றாள் கவிதா.
“நிச்சயமாக. அதனாலதான் நிறைய காட்சிகளை நான் எடுக்கவே இல்லை. நாம பேச விரும்புற அரசியல எல்லாம் மறைமுகமாகத்தான் வைக்கணும். சென்சார் பற்றிய புரிதலும் புரிதலின்மையும் படைப்பில் தாக்கத்தை உருவாக்கும். பொலிட்டிகலி கரெக்ட் இஸ் நாட் அன் ஆர்ட். சமூகத்துக்கு எதிராக ஒரு ஆர்ட் இருக்கலாம். சென்சார் அமைப்பும் மக்களும் அக்செப்ட் பண்ற அளவுக்குப் படங்கள் வரணும்.
தமிழ்ல கடந்த ஆறு ஆண்டுகளாக வந்த பல ‘யு’ படங்கள் ‘ஏ’ சான்றிதழுக்கு உரியவை.”
“யெஸ். உதாரணத்துக்கு ‘பாகுபலி’ யவே சொல்லலாம். வன்முறைகளும் ரத்தமும் நிறைந்த அந்தப் படம் குழந்தைகளுக்கானது அல்ல” என்று கொந்தளித்தாள் கவிதா.
“ஆமா, நான் என் குழந்தைகளை அந்தப் படத்துக்குக் கூட்டிட்டுப் போகலை. ஆனா, அந்தப் படத்தைத் தான் இந்தியக் கலாச்சாரத்தின் அடையாளம்னு நாடு சொல்லுது. அதுல கிளாமர், பழிதீர்த்தல், துரோகம், எரோட்டிஸம் எல்லாமே இருக்கு. அதைக் குழந்தைகள் பாக்கலாமான்னு கேட்டா, ‘வீடியோ கேம்ஸ்ல வயலன்ஸ் இருக்கே... அதைப் பார்க்குறாங்க. அந்த மாதிரிதான் பாகுபலியைப் பார்க்குறாங்க. அதனால பிரச்சினை இல்லை’ன்றாங்க. அதாவது, ஒருத்தர் 10 பேரை அடிச்சா, அது பிரச்சினை இல்லை. ஒருத்தரை இன்னொருத்தர் அடிச்சா குழந்தைகள் பார்க்கக் கூடாதாம். இது எவ்ளோ பெரிய அபத்தம்.
சென்சாரைவிடக் கொடுமையானது மாரல் போலீஸிங். அதுக்கும் பயப்பட வேண்டிய சூழல்ல இருக்கோம். நம்ம ஊர்ல மக்களோட பார்வையும் மாறணும்; சென்சார் அமைப்பின் அணுகுமுறையும் மாறணும். அப்பதான் உருப்படியான நிலை வரும். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு ‘ஏ’ சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. கணவன் - மனைவி சேர்ந்து பார்த்தாங்க. இப்ப அந்த நிலைமை இருக்கான்னா இல்லை. நாம பின்னோக்கிப் போறோமோன்னு தோணுது. ஆன்லைன்ல சென்சாரே இல்லை. என் படத்துக்கு ஒரு கட் கொடுக்குறாங்க. அந்த கட்டை யூடியூப்ல எடுத்துப் போடுறேன். சாட்டிலைட்டுக்கு சென்சாரே இல்லை. டிரிபிள் ஏ ப்ரோக்ராம்கூட பண்றாங்க. வேற எந்த மீடியத்தையும் கன்ட்ரோல் பண்ண முடியல. சினிமா மட்டும் மாட்டிட்டுருக்கு” என்று முடித்தார் இயக்குநர் ராம்.
தொடர்புக்கு:
siravanan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago