சினிமாலஜி 15: உண்மை முகம் காட்டும் ‘விஸ்வரூபம்

By சரா

சி

னிமா வரலாறு தொடர்பான தியரி பாடம் முடிந்து வகுப்பில் வெறுமை சூழ்ந்திருந்தது. “சரி, புதுசா எதாவது நல்ல ட்ரெய்லர் வந்திருக்கா? நாம விவாதிக்கிற மாதிரி ஏதாவது தேறுமா?” என்று ஆரம்பித்தார் சலீம் சார்.

“ராமின் ‘தரமணி’ மூணாவது டீஸர் ரிலீஸ் ஆயிருக்கு சார். ஆண்ட்ரியா அற்புதம் சார்..!” - ப்ரேம் வாய்பிளந்தான்.

“படம் பார்த்துட்டு அதை வெச்சுக்கலாம். கோனார் நோட்ஸ் போடாமலேயே படம் புரியும்னு மட்டும் இப்போதைக்கு நம்புற மாதிரி இருக்கு சார்” என்றான் பார்த்தா.

“கதிர் நடிச்ச படத்தோட டீஸர் வந்திருக்கு. செம்மயா இருக்கு சார். வேற லெவல் படமா இருக்கும்னு நம்புறேன்” என்றாள் ப்ரியா.

“கதிர்னா ‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ ஹீரோதானே? ‘விக்ரம் வேதா’லகூட விஜய் சேதுபதி தம்பி... அந்தப் பையனோட ரூட்டே வித்தியாசமாதான் இருக்கு” என்று வியப்பை வெளிப்படுத்தினார் சலீம் சார்.

“ஆமா சார். டீஸரே வித்தியாசமா இருக்கு. திருநங்கை ரோல்னு நினைக்கிறேன். படம் நல்லா இருக்க வாய்ப்பு இருக்கு” என்றான் பார்த்தா.

“தமிழ் சினிமா யாரை உருப்படியா காட்டியிருக்கு? வழக்கம்போல அதீதமா காட்டாம இருந்தாலே பெட்டர். ‘திருநர்’களைக் கொச்சைப்படுத்தி மிகையா காட்டுறதுதான் அதிகமா நடக்குது” - இது கொந்தளிப்பு கவிதாவேதான்.

முன்வந்து பேசிய மேனகா, “ஆரம்பத்துல அப்படி இருந்திருக்கலாம். சொசைட்டில எல்லாரும் அவங்கள எப்படிப் பார்க்குறோமோ, அதையே பிரதிபலிக்கிற மாதிரி காமெடியும் காம நெடியும் கலந்து மலிவான முறையில திருநங்கைகளைக் காட்டி, மக்களுக்கும் மட்டமான ரசனையைக் கடத்தினாங்க. ஆனா, இப்போ மக்களோட பார்வையும் ரொம்பவே மாறியிருக்கு. திரையிலும் மாற்றம் தெரியுது” என்றாள்.

“எங்க மணி ஸார் அன்றைக்கே ‘பம்பாய்’ படத்துல அவங்களை ரொம்ப நல்ல விதமா காட்டியிருப்பார். கொஞ்ச சீன் வெச்சாலும் நெஞ்சைப் பிழியிற மாதிரி வெச்சுருப்பாரு” என்று பெருமிதம் காட்டிய ப்ரேமை முறைத்தான் மூர்த்தி.

“ ‘அப்பு’ன்னு ஒரு படம். அதோட ஒரிஜினல் இந்திதான். அதுல வில்லன் பிரகாஷ்ராஜ் திருநங்கை கதாபாத்திரத்துல வந்திருப்பாரு. எனக்குத் தெரிஞ்சு தமிழ்ல திருநங்கை கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது அந்தப் படம்தான்னு நினைக்கிறேன். ஆனா, அது ஓவர் நெகட்டிவ் தன்மையோட இருக்கும். திருநர்கள் (திருநங்கைகள், திருநம்பிகள்) மீதான பார்வையை இன்னும் மோசமாக்கிச்சுன்னும் சொல்லலாம்” என்று மூர்த்தி ஆதங்கப்பட்டான்.

“ரொம்ப கரெக்ட். அதை பிரகாஷ்ராஜே புரிஞ்சிக்கிட்டாருன்னு நினைக்கிறேன். பின்னால ஏதோ ஒரு பேட்டியில ‘அந்த கேரக்டர்ல நடிக்க நான் ஒத்துட்டு இருக்கக் கூடாது’-ன்னு சொன்ன மாதிரி படிச்ச ஞாபகம். ஆனா, தமிழ்ல சொல்லிக்கிற மாதிரி திருநர் கதாபாத்திரத்தை முழுமையாக யாரும் கொண்டு வரலைன்னு தோணுது” என்றான் ரகு.

“சந்தோஷ் சிவன் இயக்கத்துல 2005-ல் வெளியான படம் ‘நவரசா’. திருநர் வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான படைப்பு. கூவாகம் திருவிழா பின்னணியை நேர்த்தியா பதிவு பண்ணியிருப்பாங்க. மக்கள் எத்தனை பேரு அது மாதிரியான படத்தைப் பார்த்திருப்பாங்க. அந்த மாதிரி படம் பார்க்குற வாய்ப்புதான் ஈஸியா கிடைக்குதா? அந்தப் படம் நிறைய ஃபிலிம் ஃபெஸ்டிவல் போச்சு. நிறைய அவார்டு வாங்கிச்சு. அதோட சரி. நிறைய தியேட்டர்ல ரிலீஸ் ஆகுற வர்த்தக நோக்கு அதிகமா இருக்குற படங்கள்தானே மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துது. அதனால, கமர்ஷியலா வர்ற படங்களில் திருநர்களை எப்படிக் காட்டியிருக்காங்க என்பதைத்தான் நாம கவனமா பார்க்க வேண்டியிருக்கு. அப்படிப் பார்த்தா, ப்ரொட்டாகனிஸ்டாகூட வேண்டாம்; சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ்ல கூட சரியான அணுகுமுறை இல்லைன்னு தானே சொல்ல முடியுது.”

சற்றே விரிவாகப் பேசிய பார்த்தாவை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர். ஆனாலும் அவன் தொடர்ந்தான்.

“சமீப காலமா எடுத்துகிட்டா ‘ஆதிபகவன்’, ‘இருமுகன்’மாதிரியான படங்களில் எல்லாம் நெகட்டிவ் கேரக்டர்ஸ்ல தானே காட்டியிருக்காங்க. நடிகர்கள் ஸ்கோர் பண்றதுக்கு வேணுன்னா ஸ்கோப் இருக்கலாம். ஆனா, திருநர்கள் மீதான பார்வை மாறுவதற்கு அங்கே ஒண்ணுமே இல்லையே. எனக்குத் தெரிஞ்சு ‘அவன் இவன்’ படத்துல திருநங்கை கதாபாத்திரத்தில் விஷாலை ப்ரொட்டாகனிஸ்டா காட்டினதை வேணுன்னா பெட்டர்னு சொல்வேன்” என்றான் பார்த்தா.

“வில்லன் ரோல்கூடப் பரவாஇல்லை. வில்லத்தனத்துக்குள்ளயே ரொம்ப மட்டமா அணுகப்பட்ட ஷங்கரின் ‘ஐ’ படம் கொடுமையின் உச்சம்னு சொல்வேன். ஓஜாஸ் ராஜானியை அந்த மோசமான கதாபாத்திரத்துல நடிக்க வெச்சுதுக்குள்ளயே அரசியல் இருக்குறதா நினைக்கிறேன். அந்தப் படத்துக்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது, தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு எச்சரிக்கை மணியா இருந்திருக்கும்னு நம்புறேன்” என்று நிதானமாகச் சொன்னாள் கவிதா.

“நேரடியா ஒரு விஷயத்தைக் காட்டுறதுனால இப்படி யோசிக்க முடியுது. கமல் ஹாசன் மாதிரியான ஜீனியஸ் எல்லாம் மறைமுகமா செய்றது உங்களுக்கு எங்க தெரியப் போவுது?” என பிட்டு ஒன்றை வைத்தான் ரகு.

“என்ன சொல்ல வர்ற?” - இது கவிதா.

“விஸ்வரூபம் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கமல்ஹாசன் கதாபாத்திரத்திடம் பெண்தன்மை அதிகமா இருக்கும். அதுவே, அவங்க மனைவிக்கு வெறுப்பை ஏற்படுத்துற மாதிரி காட்டியிருப்பாங்க. ஒரு மாஸ் சீன்ல தன்னோட பெண்தன்மையைத் தூக்கிக் கடாசிட்டு பட்டையக் கிளப்புவாரு. அது செம்ம மாஸ் ஸீன். எல்லாருக்குமே ஆச்சரியமா இருக்கும். பூஜா கேரக்டரும் பூரித்துப் போயிடும். தான் ஒரு முரட்டு ஆம்பளைன்னு ‘விஸ்வரூபம்’ காட்றதுக்குத் திருநர்களின் அசைவுகளை யூஸ் பண்றது மூலமா கமல் என்ன சொல்ல வர்றாராம்? முன்பெல்லாம் மாஸ் ஹீரோக்கள் படத்துக்குள்ள கோழை, பயந்தாங்கொள்ளி மாதிரி நடிச்சுட்டு, பின்னாடி வீரத்தைக் காட்டி வியக்கவைப்பாங்க. கமல் இப்படிப் பண்ணதுக்கு அந்த க்ளிஷேவே பெட்டர்” என்று ரகு சொன்னதைக் கண்கள் விரிய அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“ஆனா, இப்போ சின்ன சின்ன ரோல்ல திருநர்களை ரொம்ப நீட்டாவே காட்றாங்க. பார்த்தா சொல்ற மாதிரியான மெயின் ஸ்ட்ரீம் படங்கள்லயும் இது நடக்குது. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘அப்பா’, ‘தர்மதுரை’ன்னு சில உதாரணங்களைச் சொல்லலாம். குறிப்பாக, திருநங்கைகள் திருநங்கைகளாகவே பயன்படுத்தப்படுறதையும் ஆரோக்கியமான விஷயமா பார்க்குறேன்” என்றாள் ப்ரியா.

“ஒத்துக்குறேன். ஆனா, ரொம்ப நல்ல எண்ணத்தோட காட்டுறேன்னு குறைச்சி மதிப்பிடுறதும் சரியில்லைன்னு தோணுது. ‘தர்மதுரை’ படத்துல நாம தினமும் பார்க்குற மாதிரியான திருநங்கை கதாபாத்திரத்தைக் காட்டுவாங்க. அவங்களுக்கு டாக்டர் விஜய் சேதுபதி வேலை போட்டுத் தருவார். அதுவரைக்கும் ஓகே. ஆனா, அந்தத் திருநங்கையை விஜய் சேதுபதி காலில் விழவைச்சு ‘நீங்கதான் தெய்வம்’ன்ற ரேஞ்சுல டயலாக் பேசவைக்கிறதும் இயல்பு மீறல்தான். தன்னோட ஹீரோவிடம் தெய்வீகத்தன்மையை உயர்த்திப் பிடிக்கவே அந்தத் திருநங்கை கேரக்டர் பயன்படுத்தப்பட்ட மாதிரி இருந்துச்சு.

எனக்குத் தெரிஞ்சு, மக்களுக்குத் திருநர்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘காஞ்சனா’. என்னதான் கமர்ஷியலான கலகலப்புப் பேய்ப்படமா இருந்தாலும் திருநங்கை கதாபாத்திரத்தை உருவாக்கிய விதமும் அதைக் காட்டிய விதமும் பாராட்டப்பட வேண்டியது. அதுவும் சரத்குமார் மாதிரியான நடிகர் அந்தக் கதாபாத்திரத்தில் நடிச்சது இன்னும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துச்சு. இந்த மாதிரியான போக்குதான் தேவைன்னு நம்புறேன்” என்று முடித்தாள் கவிதா.

“சொசைட்டில சிலர் வேறு வழியில்லாம தப்பான பாதையைத் தேர்ந்தெடுக்குறதால, ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமா தப்பா காட்டுறதை ஏத்துக்க முடியாது. அந்தச் சமூகத்தைப் பற்றிய இயல்பானவற்றை பாசிட்டிவா காட்டாதவங்களுக்கு, முழுக்க முழுக்க நெகட்டிவா காட்டுறதையும் சுத்தமா ஏத்துக்க முடியாது. முதன்மைக் கதாபாத்திரங்களா கூட வேண்டாம்; சின்ன சின்ன கதாபாத்திரங்கள்ல இயல்பா காட்டினாலே போதும்; இல்லாட்டி எதுவுமே அவங்கள பத்திப் பேச வேண்டாம். சம்திங் இஸ் பெட்டர் தேன் நத்திங்தான். அந்த சம்திங் ரொம்ப மோசமா இருக்கும்போதுதான் இப்படிச் சொல்லத் தோணுது: நத்திங் இஸ் பெட்டர் தேன் நான்சென்ஸ்!” - இதுவும் பார்த்தா தான்.

தொடர்புக்கு: siravanan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்