விண்ணோடும் முகிலோடும் விளையாடும் சி.எஸ்.ஜெ!

By வா.ரவிக்குமார்

சி.எஸ்.ஜெயராமன் நூற்றாண்டு

‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்….’, ‘இன்று போய் நாளை வாராய்…’, ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’ போன்ற பாடல்களில் இசையின் மேன்மையையும் பாடல்களில் வெளிப்படும் வளமான கற்பனையையும் மீறி வசீகரிக்கவைக்கிறது சி.எஸ்.ஜெயராமனின் குரல்.

தியாகராஜ பாகவதருக்கு இரண்டு ஆண்டுகள் இசைப் பயிற்சி அளித்தவர் சி.எஸ்.ஜெ. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ வரை பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் ‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன் தான்.

கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் தெலுங்கில் என்.டி.ஆருக்கும் எண்ணற்ற திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை சி.எஸ்.ஜெ. பாடியிருக்கிறார். மிகச் சிறப்பான பாடகர்; இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, சி.எஸ்.ஜெ. டேபிள் டென்னிஸ், கேரம் போன்ற விளையாட்டுகளில் நிபுணத்துவமும் பெற்றிருந்தார். குறிப்பாக கேரம் விளையாட்டுப் போட்டிகளில் சி.எஸ்.ஜெயராமன் இருமுறை தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.

இந்த அரிய கலைஞரின் நூற்றாண்டு இது.1917-ம் ஆண்டு தை மாதம் 6-ம் நாள் சி.எஸ்.ஜெயராமன் பிறந்தார். சி.எஸ்.ஜெ. பற்றிப் பல பிரபலங்கள் எழுதியிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பை ‘ஓர் அரிய இசைப் பயணம்’ என்னும் நூலாக சி.எஸ்.ஜெயராமனின் மகள் சிவகாமசுந்தரி சமீபத்தில் வெளியிட்டார். தந்தையின் நினைவுகள் குறித்தும் பல பிரமுகர்கள் தந்தையைக் குறித்து அவரிடம் பகிர்ந்துகொண்ட முக்கியமான சம்பவங்களைக் குறித்தும் சிவகாமசுந்தரி நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து…

தமிழ்ப் பற்றும் தேசப் பற்றும்

இசையிலும் தமிழிலும் ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்டவர். திருக்குறளுக்கு இசையமைத்து மேடையில் பாடியிருக்கிறார். மற்ற மொழிப் பாடல்களையும் பாடினால் நிறைய வாய்ப்புகள் வரும் என்ற நிலை இருந்த அந்த நாளிலும், தமிழ் மொழிப் பாடல்களையே மேடையில் பாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு தேசபக்தி அதிகம். அந்நாளில் ‘வெள்ளையனே வெளியேறு’ பாடலை ஒரு நாடகத்தில் பாடியதற்காக ஆங்கிலேய அரசால் கைதுசெய்யப்பட்டார். கச்சேரி மேடைகளில் ‘வாழிய செந்தமிழ்’ பாடலைப் பாடித்தான் கச்சேரியை முடிப்பார். ஒரு முறை சிதம்பரத்தில் மாலை 6 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிவரை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார்.

கேரம் டபுள்ஸ்

நாகசுர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்னம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், தங்கவேலு ஆகியோர் அவளுக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள். எங்களின் வீட்டுக்கு அவர்கள் வந்துவிட்டால் திருவிழா போல்தான் இருக்கும். இசைப் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருந்தாலும் எங்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். அதிலும் என்னைத்தான் அவருடைய இசை நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிச் செல்வார். இசையைப் போன்றே அப்பாவுக்கு விளையாட்டிலும் அதிக ஆர்வம் இருந்தது. கேரம்போர்டு விளையாட்டில் சாம்பியனாகவே இருந்தார்.

ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்த கலைவாணர், மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கேரம்போர்டில் டபுள்ஸ் ஆடினர். கலைவாணரும் மதுரமும் ஒரு செட். எம்.எஸ்.சுப்புலட்சுமியும் அப்பாவும் ஒரு செட். அப்பாவிடம் ஸ்டிரைக்கர் வந்தால் அடுத்து இருப்பவருக்கே வாய்ப்பு இருக்காதாம். அவரின் ஆட்ட நேர்த்தியைப் பார்த்து எம்.எஸ்.சுப்புலட்சுமி “என்ன மாயம்னா இது” என்று பாராட்டினாராம்.

அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்படித்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர் அப்பாதான். 8 கார்கள், பல ஏக்கரில் வீடு, தோட்டம் என இருந்தாலும், அவருக்கு ஏழை - பணக்காரன் வித்தியாசம் எல்லாம் இருந்ததில்லை. மிகப் பெரிய பிரபலமாக இருந்த அவர், தகரக் கட்டிலில் படித்துத் தூங்கிய சம்பவங்களும் உண்டு.

யார் இந்த பிரபலம்?

1982-ம் ஆண்டு. மாதம் ரூபாய் 500 மட்டுமே சம்பாதிக்கும் ஓர் இளைஞர். இதில் அறை வாடகைக்கு ரூபாய் 150 போய்விடும். சைதாப்பேட்டை, சேசாஷல முதலித் தெருவில் இருந்த மெட்ராஸ் பில்டிங்கின் அறை எண் 22-ல்தான் அந்த இளைஞர் தங்கியிருந்தார்.

ஒருநாள் பிற்பகல் 3 மணி அளவில் அந்த இளைஞரின் லாட்ஜுக்கு எதிரில் சிவப்புச் சுழல் விளக்கு பொருத்திய வெள்ளை நிற அம்பாசிடர் காரிலிருந்து பட்டு வேட்டி, பட்டு முழுக்கை சட்டை அணிந்த ஒருவர் வந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்த இளைஞருக்கு நிச்சயமாக அவர் ஒரு பிரபலம் என்பது புரிந்தது. ஆனால் யார் என்று தெரியவில்லை. காரை விட்டு இறங்கிய அந்தப் பிரமுகர் விறுவிறுவென லாட்ஜுக்கு எதிர்ப்புறத்திலிருந்த வீட்டுக்குள் விரைந்து சென்றார். அந்த இளைஞருக்கு இருப்புக் கொள்ளவில்லை. யாரென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. மெதுவாகச் சென்று கார் ஓட்டுநரிடம் விசாரித்தார். தமிழக அரசால் இசைக் கல்லூரிக்கு முதல்வராக அறிவிக்கப்பட்ட பெரிய பாடகர் அவர் என்று சொல்லியிருக்கிறார் கார் ஓட்டுநர்.

தகரக் கட்டிலில் தூக்கம்

அதற்குள் அந்தப் பிரமுகர் வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவரிடம் அந்த இளைஞர் ‘நான் உங்களின் ரசிகன்’ என்று சொல்லியிருக்கிறார். அப்படியா என்றபடி அந்த இளைஞரின் தோளில் கைபோட்டபடி, சிறிது நேரம் உரையாடியிருக்கிறார். அதன் பின், “தம்பி உங்க ரூம்ல போய்க் கொஞ்ச நேரம் உட்காரலாமா?’’ என்று கேட்டார். அந்த இளைஞருக்கோ தயக்கம். அவர் தடுமாறுவதற்குள், அந்தப் பிரமுகர் லாட்ஜுக்குள் நுழைந்துவிட்டார். அந்த இளைஞர் அவருடைய அறையைக் காட்ட, அறைக்கு உள்ளே ஒரு தகரக் கட்டில், கிழிந்த பாய், நைந்த தலையணை, அழுக்கேறிய போர்வைதான் இருந்தது. அந்த இளைஞருக்கு என்ன செய்வது என்றே தெரியாத நிலையில், “டீ, காப்பி ஏதாவது குடிக்கிறீங்களா?’’ என்று கேட்டிருக்கிறார்.

“கொஞ்சம் குடிக்கத் தண்ணி இருந்தா போதும் தம்பி’’ என்ற அந்தப் பிரமுகர், அந்த இளைஞர் வெளியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போவதற்குள் அந்தத் தகரக் கட்டிலிலேயே படுத்து உறங்கிப் போயிருந்தார். அரைமணி நேரத்துக்குப் பின் லேசான சலனத்துடன் சிறு இருமலுடன் எழுந்தார். “கொஞ்சம் அசதியாஇருந்திச்சு தூங்கிட்டேன்’’ என்றபடி, அந்த இளைஞர் எடுத்துவந்த தண்ணீரைக் குடித்துத் தாகம் தணிந்த பின், அந்த இளைஞரிடம், “தம்பி இங்க தூங்கிட்டிருந்த கொஞ்ச நேரத்துல கொஞ்சம் நிம்மதியா இருந்திச்சு. ஆட்கள் தொந்தரவு இல்ல. நட்புகளின் நச்சரிப்பு இல்ல. உறவினர்களின் அடாவடித்தனம் இல்ல. அமைதியா இருக்கு. உங்க அறையில கொஞ்ச நேரம் தூங்குனது நிம்மதியா இருந்துச்சு. இந்தப் பக்கம் வரும்போதெல்லாம் உங்க அறையில நான் ஓய்வெடுத்துக்கலாமா?” என்று கேட்டிருக்கிறார்.

நினைவுகளின் தொகுப்பு

அந்த இளைஞரும் அந்தப் பிரமுகரிடம் “எப்ப வேணாலும் வாங்கய்யா… என் அறைக்குப் பூட்டே கிடையாது. நீங்க வந்து ஓய்வெடுக்கலாம்’’ என்று சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகும் அந்தப் பிரமுகர் நான்கைந்து முறை அந்த இளைஞரின் அறையில் ஓய்வெடுத்திருக்கிறார். சில நேரங்களில் அந்த இளைஞர் இருக்கும் போதும், சில நேரங்களில் அந்த இளைஞர் இல்லாத போதும். அந்தப் பிரமுகர் என்னுடைய அப்பா சி.எஸ்.ஜெயராமன். அந்த இளைஞர் வீ.கே.டி.பாலன்.

அப்பாவின் நூற்றாண்டை ஒட்டி சிலரிடம் பேசியபோது வீ.கே.டி.பாலனைப் போல் பலரும் அப்பாவுடனான விதவிதமான சம்பவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர். என்னுடைய தந்தையின் நினைவுகளைப் பற்றி நான் எழுதுவதைவிடப் பலரின் அனுபவங்களைச் சேகரித்து ஒரு தொகுப்பாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துதான் ‘சிதம்பரம் எஸ். ஜெயராமன்: ஓர் இனிய இசைப் பயணம்’ எனும் நூலை வெளியிட்டேன்.

டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களில் இருக்கும் அப்பாவின் ரசிகர்கள் பலர் அவர் பாடி வெளிவராத பாடல்கள் சிலவற்றையும் எனக்கு அனுப்பியிருக்கின்றனர். எதிர்காலத்தில் இந்தப் பாடல்களை ஆல்பமாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது என்றார் சிவகாமசுந்தரி.

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்