“காவல் துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கு இந்தப் படத்தைக் காணிக்கையாக்குகிறேன். காவலர்கள் என்பவர்கள் எங்கோ வானுலகிலிருந்து குதித்து வருபவர்கள் அல்ல. நமக்கு மத்தியிலிருந்து இந்தப் பணியை நேசித்து வரும் அவர்களிடம் நமக்குரிய எல்லா உணர்ச்சிகளும் உண்டு. ஆனால், இதை நாமும் மறந்துவிடுகிறோம், காவல் துறையிலும் பலர் மறந்துவிடுகிறார்கள். இவர்களது வலியும் வேதனையும் பதிவுசெய்யப்படவேண்டியது மிக மிக அவசரம்” எனக் குமுறலுடன் பேசத் தொடங்கிய சுரேஷ் காமாட்சி, ‘அமைதிப் படை – 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களைத் தயாரித்தவர். தற்போது ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரிடம் பேசியதிலிருந்து…
படத்தின் டீஸர் முன்னோட்டம் சமீபத்திய சம்பவங்கள் சிலவற்றை நினைவூட்டுபோல் உள்ளதே?
நான் எந்தச் சம்பவத்தையும் இந்தக் கதைக்குப் பின்புலமாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் ராதாகிருஷ்ணன் சாலையில் இடமும் வலமும் இரண்டு முன்னாள் முதல்வர்களின் வீடுகள் இருந்த நாட்களில் அந்த வழியாகப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். அப்போது கால் கடுக்க, காலை முதல் மாலைவரை உச்சிவெயிலில் நிற்கும் காவலர்களைக் குறிப்பாகச் சாலை முடியும் வரை நிறுத்தப்பட்டிருக்கும் பெண் காவலர்களைக் கண்டு உள்ளுக்குள் அழுதிருக்கிறேன்.
பாதுகாப்பு என்ற பெயரில் மணிக்கணக்கில் இவர்களை நிற்க வைப்பதன் பின்னால் தனிப்பட்டமுறையில் அவர்கள் எவ்வளவு கஷ்டங்களையும் வலிகளையும் தாங்கிக்கொண்டிருப்பார்கள் என்று யோசித்தபோது இந்தக் கதைக்கான விதை விழுந்தது. பிறகு பல காவல் சகோதரிகளை விசாரித்தபோது கொட்டித் தீர்த்தார்கள். இந்தக் கதையில் கண்ணீர் மட்டுமல்ல; அவர்களது வீரமும் வெளிப்பட்டிருக்கிறது.
என்ன கதை?
ஒரு சாமானியக் குடும்பத்திலிருந்து காவலர் பணியை நேசித்து வந்துவிட்ட காவல்துறையில் சேர்ந்த பெண் சாமந்தி. ஒரு பெண்ணாக அவள் சந்திக்கும் அன்றாட வாழ்க்கையின் தருணங்களைத் துறைரீதியான நிர்பந்தங்கள் எப்படி மனரீதியான போராட்டமாக மாறுகிறது என்பதுதான் கதை. இந்தக் கதையில் சாமந்தி வாடிப்போகும் பெண்ணா இல்லையா என்பதற்குப் படத்தில் விடை இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் பெண் காவலர்களின் ஆடை மாற்றப்பட வேண்டும் என்ற விவாதம் எழுந்தால்கூட நான் மகிழ்வேன்.
ஸ்ரீப்ரியங்காவைக் கதாநாயகியாகத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?
நாயகி ஒரு தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டியது இந்தக் கதைக்கு மிக முக்கியம். கிளாமர் இல்லாமல் யதார்த்தமான, பரிதாபத்துக்குரிய தோற்றமும் நல்ல நடிப்புத்திறனும் கொண்ட பெண் தேவைப்பட்டார். அதற்காகவே ப்ரியங்காவை தேர்வு செய்தேன். இவர் பாண்டிச்சேரி தமிழ்ப் பெண். ஏற்கெனவே நான் தயாரித்த ‘கங்காரு’, பிரபுதேவா உதவியாளர் கதிரவன் இயக்கிய ‘கோடை மழை’, இகோர் இயக்கிய ‘வந்தா மல’ என இதுவரை நடித்திருக்கும் படங்களில் கதாபாத்திரமாகத் தன்னை வெளிப்படுத்தி வந்திருப்பவர். இந்தப் படத்தில் சாமந்தியாக வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீப்ரியங்கா தவிர அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன் மற்றொரு காவல் அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்கள்.
பட வெளியீடு எப்போது?
நல்ல வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருக்கிறேன். அதற்குமுன் 300 பெண் காவலர்களுக்கு இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்ட உயர் காவல் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். அதேபோல பட வெளியீட்டின்போது எல்லா மகளிர் காவல் நிலையங்களிலும் பணியாற்றும் காவல் சகோதரிகளுக்கு அழைப்பிதழ் அனுப்ப இருக்கிறேன்.
உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
சொந்த ஊர் பரமக்குடி. கமல், விக்ரம், இயக்குநர்கள் ஐ.வி.சசி, அதியமான், எஸ்.ஏ. சந்திரசேகரன் என எங்கள் ஊரிலிருந்து வந்து திரையில் ஜெயித்தவர்கள் அதிகம். இவர்கள் தந்த உந்துதலில் 21 ஆண்டுகளுக்குமுன் உதவி இயக்குநர் ஆகும் கனவுடன் சென்னை வந்தேன்.
தயாரிப்பாளர் ஹென்றி சாரின் ‘பங்கஜ் புரடெக்ஷன்’ நிறுவனத்தில் கம்பெனி உதவி இயக்குநராகச் சேர்ந்து ‘மறுமலர்ச்சி’,’கள்ளழகர்’,’புதுமைப் பித்தன்’ ஆகிய படங்களில் பணியாற்றினேன். அந்த அனுபவத்துடன் மலேசியாவின் அரசுத் தொலைக்காட்சியான ஆர்.டி.எம்மில் சில தொடர்களுக்கு இயக்குநராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க அங்கே சென்றுவிட்டேன். பிறகு 2013-ல் மீண்டும் சென்னை திரும்பியபோது மணிவண்ணன் ஐயா இயக்க ‘அமைதிப் படை 2’ படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை அண்ணன் சீமான் ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்பிறகு இயக்குநர் சாமி இயக்கத்தில் ‘கங்காரு’ படத்தைத் தயாரித்தேன். இந்த இரண்டு படங்களிலுமே ஒரு தயாரிப்பாளராக எனக்கு கசப்பான அனுபவங்கள் இருந்தாலும் அவைதான் என்னை இயக்குநர் ஆக்கியது என்று சொல்வேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago