திருடன் போலீஸ்: திரை விமர்சனம்

By இந்து டாக்கீஸ் குழு

காலம் கடந்து அப்பாவின் அருமையைப் புரிந்துகொள்ளும் ஒரு மகனின் உணர்வுகளையும் காவல் துறையின் கடைநிலையில் இருக்கும் காவலர்களின் சங்கடங்களையும் இணைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் புது இயக்குநர் கார்த்திக் ராஜு.

கடமை தவறாத காவலர் ராஜேஷுக்குப் பொறுப்பில்லாத ஒரே பிள்ளை விஷ்வா (தினேஷ்). திடீரென ஒரு நாள் போலி என்கவுன்ட்டரில் ராஜேஷ் கொல்லப்பட, கருணை அடிப்படையில் விஷ்வாவுக்கு அப்பாவின் காவலர் வேலையைக் கொடுக்கிறார் காவல் ஆணையர். ‘சிங்கம்’ சூர்யா பில்டப்புகளோடு முதல் நாள் வேலைக்குப் போகும் விஷ்வா, துப்பாக்கி துடைப்பதும் அதிகாரிகளுக்குக் காய்கறி வாங்கி வருவதுமான எடுபிடி வேலைகளைத்தான் பார்க்க வேண்டும் என்று அறிந்து வெறுத்துப்போகிறான்.

இப்படிப்பட்ட வேலையைத்தான் தன் னுடைய அப்பா சகித்துக்கொண்டு பார்த் தார் என்பதை உணர்ந்து, அவ்வளவு நாட்களாகத் தான் தூற்றிக்கொண்டிருந்த அப்பாவை நேசிக்க ஆரம்பிக்கிறான். முதலில் வெறுத்த வேலையைப் பின்னர் விரும்ப ஆரம்பிக்கிறான். அப்பாவைக் கொன்றவர்களையும் அடையாளம் காண் கிறான். பிறகு என்ன செய்கிறான் என்பதே படம். இடையிடையே கொஞ்சம் காதல், கொஞ்சம் சண்டை, நிறைய காமெடி.

போலீஸ் மீது மரியாதையை ஏற்படுத்தும் விதமாகக் கதையை அமைத்திருக் கிறார் இயக்குநர். கூடவே அப்பா-மகன் உறவின் அருமையையும் சொல்ல முயன்றிருக்கிறார். கான்ஸ்டபிள்களின் அவதிகளையும் அம்பலப்படுத்துகிறார். முதல் பாதியைக் கொஞ்சம் சீரியஸாக நகர்த்தும் இயக்குநர், இரண்டாம் பாதியில் எல்லாவற்றிலும் நகைச்சுவைப் பொடியைத் தூவிவிடுகிறார்.

படத்தில் அபத்தங்களுக்கு எல்லையே இல்லை. போலி என்கவுன்ட்டர் காட்சிப்படுத் தப்படும் விதம் ஒரு உதாரணம். நேர்மையும் கண்டிப்பும் மிகுந்த கமிஷனருக்குத் துணை கமிஷனர் நடத்தும் தனி ராஜ்ஜியம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்பது இன்னொரு உதாரணம். கொடூரமான ரவுடிகளாகச் சித்தரிக்கப்படுபவர்கள் அடிக்கும் கோமாளிக் கூத்துகளைப் பார்த்துப் பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் இந்தக் காட்சிகளில் ஒரு குறுநகை அளவுக்குக்கூட நம்பகத்தன்மையோ முதிர்ச்சியோ இல்லை. தன்னை அடித்துத் துவைத்த கான்ஸ்டபிளுக்குப் பயந்துகொண்டு ஒரு பெரிய ரவுடியும் அவன் சகாவும் வேறு வேறு வேஷங்களில் திரிவது கேலிக்கூத்து. புலம்பிக்கொண்டே வில்லன்களை அடிக் கும் கதாநாயகனின் செயல் மகா எரிச்சல்.

சீரியஸான காட்சிகளில் நகைச்சுவை யைக் கலக்கும்போது அந்தக் காட்சியின் அடிநாதம் பகடியாக இருக்க வேண்டும். அல்லது சூழலின் அபத்தத்தை அம்பலப் படுத்துவதாக இருக்க வேண்டும். திருடன் போலீஸில் அப்படி எதுவும் இல்லை. நாயகன், அப்பாவை நினைத்து உருகுவதும் அவனது பழிவாங்கும் வேகமும் பெரும்பாலும் மேம்போக்கான நகைச்சுவையுடன் சித்தரிக்கப்படுவதால் இவை இரண்டுமே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கான்ஸ்டபிள்களின் அவல நிலையை அம்பலப் படுத்தப்படுவதுதான் படத்தின் சிறந்த அம்சம். ஆனால் அதைச் சமன்செய்வதுபோலக் காவல்துறையின் மாண்புகளை விளக்கி கமிஷனர் அடிக்கும் லெக்சரைத் தாங்க முடியவில்லை. போதாக்குறைக்கு அப்பாக்களின் அருமையை விளக்கி எஸ்.பி. பாலசுப்பிர மணியம் அடிக்கும் லெக்சர் வேறு.

கதாநாயகியைக் கறிவேப்பிலை அளவுக்குக்கூடப் பயன்படுத்த இயக்குநர் விரும்பவில்லை. காதல் அத்தியாயம் சம்பிரதாயத்துக்காகச் சேர்க் கப்பட்டதுபோல் மந்தமாக இருக்கிறது. நிதின் சத்யா படு பலவீனமான பாத்திரத்தில் அபத்தமாக வந்துபோகிறார். ‘அட்டகத்தி’, ‘குக்கூ’ போன்ற படங்களில் ஓரளவு நல்ல பெயர் எடுத்த தினேஷ் இதில் ரோபோவைப் போல நடமாடுகிறார். காவல்துறைப் பணிக்கான உடல் மொழி அவரிடம் ஒரு காட்சியில்கூட இல்லை. ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் ஜான் விஜய்யும் கொடுத்த வேலையைச் சிறப் பாகவே செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பாத்திரங்களும் அவர்களுக்கான காட்சிகளும் அதிகபட்சப் பொறுமையைக் கோருகின்றன. நாயகனின் நண்பராக வரும் பாலசரவணன், பேச்சு அதிகம் என்றாலும் கவனிக்க வைக்கிறார். ‘ஐட்டம்’ பாட்டுக்கு விஜய் சேதுபதி ஆட்டம் போடுகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை என்று டைட்டிலைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. யுவனின் அடையாளம் எதையும் காணோம். அப்பாவை நினைத்து உருகும் பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது.

இயக்குநர் சிரிக்கவைப்பதில் காட்டிய அக்கறையில் சிறு பகுதியையேனும் காட்சி அமைப்பின் வலிமையிலும் நேர்த்தியிலும் காட்டியிருக்கலாம். காட்சிகளும் திருப்பங்களும் எளிதில் யூகிக்கக்கூடியவையாக உள்ளன. திரைக்கதை செயற்கையான நிகழ்வு களாலும் முதிர்ச்சியற்ற சித்தரிப்பு களாலும் நிரம்பியிருக்கிறது. கீழ் மட்டத் தில் உள்ள காவலர்களின் அவலத்தைச் சித்தரித்திருப்பது மட்டும் கவனம் ஈர்க்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

மேலும்