அமெரிக்காவில் உருப்பெற்று உலகம் முழுவதும் பிரபலமான காமிக்ஸ் கதாபாத்திரங்கள் பல உண்டு. ‘வலேரியன்’ கொஞ்சம் ஸ்பெஷல்! பிரெஞ்சு தேசத்தில் உருவாகி அமெரிக்காவில் அதிக ரசிகர்களைச் சம்பாதித்த ஒரு காமிக்ஸ் இது. கடந்த 25 ஆண்டுகளாக இருபதுக்கும் மேற்பட்ட கதைத் தொடர்களாக வெளியாகி இன்றுவரை காமிக்ஸ் விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.
பியரே கிறிஸ்டினின் விசாலமான கற்பனையில் விரியும் அயல் கிரகங்களின் உலகுக்கு, ஜீன் கிளாட் மேசியர்ஸ் என்ற ஓவியர் உயிர்கொடுத்தவிதம் இதற்குக் கோடிக்கணக்கான வாசகர்களை உலகம் முழுவதும் உருவாக்கியது. அயல் கிரகங்களின் உயிர் வாழ்க்கையை ‘ஸ்டார் வார்ஸ்’ பிரம்மாண்ட கற்பனையில் பேசிவந்த நிலையில் வலேரியன் அதை மீறி எழுந்து அறிவியல் புனைவுக் கற்பனைகளின் எல்லைகளை உடைத்தெறிந்தது என்றே கூறிவிடலாம். இந்த வெற்றியைக் கண்ட ஹாலிவுட் இயக்குநர்கள் ‘இதற்கு எப்போது திரைவடிவம் கொடுக்கலாம்’ என்று திட்டமிட்டார்கள்.
சிலர் முன்முயற்சிகளையும் எடுத்தார்கள். ஆனால், முந்திக்கொண்டவர் புகழ்பெற்ற பிரெஞ்சு இயக்குநர் லக் பெஸ்ஸன் (Luc Besson). ஹாலிவுட்டுக்கே ஆக்ஷன் சினிமா பாடம் நடத்தும் கில்லாடி பெஸ்ஸன், 80-களிலிருந்து பிரெஞ்சு சினிமாவில் கவனிக்கத்தக்க திரைக்கதை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் புகழ்பெற்றுவிளங்கி வருபவர். ‘தி புரபெஷனல்’, ‘பிப்தி எலிமெண்ட்’, ‘லூஸி’என வாய் பிளக்க வைத்த பல படங்களைத் தந்தவர்.
வலேரியன் காமிக்ஸின் கதை, ஓவியம் இரண்டுமே இவரைத் தூங்கவிடாமல் செய்ய,1991-ல் ஓவியர் ஜீன் கிளாட் மெசியரெஸை அழைத்துத் தனது புதிய அறிவியல் புனைவுத் திரைப்படத்துக்கான செட் டிசைனை வரைந்து தரும்படி கேட்டார். ஜீன் அப்போது வலேரியன் காமிக்ஸின் ‘தி சர்க்கிள் ஆப் பவர்’ கதைக்கு ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தார். அந்தப் பணியை வேகவேகமாக முடித்துவிட்டு பெஸ்ஸான் படத்துக்காகக் களமிறங்கினார். பெஸ்ஸானோ சீனின் ஓவியங்களை மிஞ்சும் விதமாகப் படத்தை இயக்கியிருக்கிறார். அதுதான் உலகம் முழுவதும் விரைவில் வெளியாகவிருக்கும் ‘வலேரியனும் ஆயிரம் கிரகங்களின் நகரமும்’ (Valerian And The City Of A Thousand Planets) என்ற விண்வெளி அறிவியல் புனைவுத் திரைப்படம்.
இருபத்து மூன்றாம் நூற்றாண்டில், ஆயிரம் கிரகவாசிகள் அன்புடனும் தோழமையுடனும் அமைதியாக வாழும் அல்பா நகரத்தின் ராக்கெட் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகிறான் மனித இனத்தைச் சேர்ந்த நாயகன். வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த மனிதப் பெண்ணுடன் காதல் கொள்ளும் அவனுக்கு டூயட் பாட நேரமில்லை. அல்பா நகரத்தை அச்சுறுத்தும் அறியப்படாத கிரகங்களின் படையெடுப்பு. காதலியுடன் இணைந்து அயல் கிரக அச்சுறுத்தல்களை எப்படிக் கையாண்டு பின்னர் ஆல்பா நகரத்தைக் காப்பாற்றுகிறார்கள் என்பதை மையமாக்கிய கதைதான் இந்த வலேரியன்.
அயல் கிரகக் குடியேற்றங்கள், எதிர்கால நகரங்களின் கட்டமைப்புகள், விண்கலங்கள், ஆய்வுக் கூடங்கள், கேளிக்கை மையங்கள், வானில் சுழலும் விவசாய நிலங்கள் என ஓவியர் ஜீன் வரைந்து தள்ளிய எதுவொன்றையும் விட்டுவிடாமல் காட்சி வடிவம் கொடுத்திருக்கிறாராம் பெஸ்ஸான். அதில் உச்சபட்ச ஹைலைட் பறக்கும் போலீஸ் கண்காணிப்பு வாகனம். ஸ்டார் வார்ஸ் வரிசைப் படங்களைக் கொண்டாடிய ரசிகர்கள் , கற்பனையின் எல்லைக்கு அப்பால் பயணித்திருக்கும் ‘வலேரிய’னை வாரி அணைத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறார் இயக்குநர் பெஸ்ஸான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago