தடையறத் தாக்க படம் அருண் விஜக்குப் புதிய அடையாளமாக மாறிவிட்டது. அடுத்து அவர் நடித்துவரும் ‘வா டீல்’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தொழில்முறை ‘ஸ்கை டைவர்’உரிமம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் அருண் விஜய். தனது உரிமைத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அடிக்கடி ஸ்கை டைவ் செய்து திரும்பும் அவரைச் சந்தித்தோம்.
இன்று அருண் விஜய் பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ. ஆனால் தொடர்ச்சியாக தோல்விகள் துரத்தியபோது சினிமாவை விட்டே விலகிடலாம்னு நினைச்சிருக்கீங்களா?
அப்படியொரு நினைப்பு எனக்கு வந்துடாம சுத்தியிருந்தவங்க கவனமாகப் பார்த்துக்கிட்டாங்க. அப்போ ரொம்பவே மனமுடைஞ்சு போனேன். எங்கே தோல்விகள் நமக்குப் பழகிப் போயிடுமோனு பயந்தேன். என்னைப் பார்க்குறவங்கெல்லாம் நடிக்கிறதை விட்டுட்டீங்களான்னு கேட்கிற அளவுக்கு நிலைமை போயிடுச்சு. அந்த நேரத்தில் அப்பாவும் அம்மாவும் என்னை நம்பினாங்க. எனக்கு எந்த பிரெஷரும் கொடுக்கல. உன்னோட உழைப்பை மட்டும் உண்மையா கொடுத்துக்கிட்டே இரு. அதுக்கான பலன் உன் கைகள்ல கண்டிப்பா வந்து விழும்னு அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்.. “ நல்ல உயரம், நல்ல லுக், நீ சிரிச்சா நல்லாயிருக்கு, நல்லா ஃபைட் பண்றே, நல்ல லவ் பண்ணி நடிக்கிறே இதுக்குமேல என்னடா வேணும்?”னு அம்மா கொடுத்த டானிக். “ சக்ஸஸ் லேட்டா வரலாம்டா. ஆனா கண்டிப்பா வரும்”னு நண்பர்கள் கொடுத்த உற்சாகம். இப்படி சுத்தியிருக்கிற அத்தனை பேரும் நம்ம மேல இவ்வளவு நம்பிக்கை வெச்சிருகாங்களேன்னு நினச்சப்போ அதுவே எனக்கு பயத்தை கொடுத்துருச்சு. நம்ம மேல நாம் வைக்கிறது தன்னம்பிக்கை. ஆனா மத்தவங்க நம்ம மேல வைக்கிற நம்பிக்கையை காப்பத்தணுமேங்கிற கவலைதான் என்னை இந்த இடத்துல நிக்க வெச்சுருக்கு.
இந்த ஊக்குவிப்புக்களை மீறி உங்களை இப்போது தூக்கி நிறுத்தியிருப்பவர் உங்கள் மாமனார் என்பது உண்மைதானா?
நிச்சயமா. அவரது சக்ஸஸ் ஸ்டோரியே எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். மதுரையில் ரெஜிஸ்டர்ட் மெடிக்கல் பிராக்டீஷனரா இருந்த டாக்டர் என்.எஸ். மோகன்தான் என்னோட மாமா. ஒருமுறை “ நான் உன்னை டாக்டருக்கு படிக்க வைக்கலேன்னா, நீ இப்படி உட்கார்ந்த இடத்துல இருந்துகிட்டு சம்பாதிக்க முடியுமான்னு அவங்க அப்பா ஒரு பேச்சுக்கு கேட்டிருக்கார். அதுல என் மாமாவுக்கு வைராக்கியம் வந்துடுச்சு. அதுக்குப் பிறகு டாக்டர் தொழிலை விட்டுட்டு சென்னையில வந்து, கொஞ்ச கொஞ்சமா உழைச்சு முன்னேறி, கிரானைட் தொழில்ல ஷைன் பண்ணியிருக்கார். பெரிய ஆளா வந்த பிறகு ,ஒரு பென்ஸ் கார் வாங்கிட்டுப் போய் அதை அப்பா முன்னாடி நிறுத்தியிருக்கார். அந்த மாதிரி தன்னை நம்பி ஜெயிச்சவர்.
அவர்தான் எனக்காகவே ஒரு பட நிறுவனம் ஆரம்பிச்சு மலை மலை, மாஞ்சா வேலு, தடையறத் தாக்கன்னு மூன்று படங்கள் தயாரிச்சு என்னை வெற்றிப்பட ஹீரோவா உயர்த்தியிருக்கார். எல்லா திறமைகளும் இருந்தாலும் எனக்கு என்ன தடங்கல்னு ஒரு ஆராய்ச்சியே பண்ணினார்ன்னா பார்த்துக்கோங்க. நல்ல கதைகள்ல நடிச்சா மட்டும் போதாது, அது ரசிகர்களுக்கு பிடிக்கிற பேக்கேஜ்ல இருக்கணும்னு இரண்டே படங்கள்ல இன்ஞ் இன்ஞ்சா சினிமாவைப் புரிஞ்சுகிட்டு படங்களைத் தயாரிக்க ஆரம்பிச்சுருக்கார். மூனாவதா அவர் ஓகே பண்ணின பிலிம்தான் தடையறத் தாக்க. அந்தப் படத்துக்கு அப்புறம் ரசிகர்கள் என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்க ஆரம்பிச்சுருக்காங்க. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்கிறத விதமாத்தான் இப்போ ’வா டீல்’ படம் உருவாகியிருக்கு.
வா டீல் படத்துல என்ன எதிர்பார்க்கலாம்?
வா டீல் படத்துல வெற்றிவேல்ங்கிற கேரக்டர் பண்ணியிருகேன். ஹவுசிங் போர்ட் குடியிருப்பில் அம்மாவுடன் வசிக்கும் மிடில் கிளாஸ் பையன். அப்பாவை சின்ன வயசுலயே இழந்தவன். நண்பர்கள்தான் அவன் உலகம். நண்பர்கள் சாவல் விட்டு டீலுக்கு கூப்பிட்டா அதுல ஜெயிச்சிட்டு வந்து நிக்கிறவன். இதை மட்டும் செய்யாதே, அதனாலதான் உங்க அப்பாவ இழந்தேன்னு அம்மா சொல்றாங்க. ஆனா அதைத்தான் அம்மாவுக்குத் தெரியாம அவன் செய்றான். இந்த மாதிரி சமயத்துல அவன் வாழ்க்கையில் காதலும் ஒரு டீலுக்குள்ள வந்தா என்ன ஆகும்கிறதுதான் முடிச்சு. ஆனால் ஒரு காட்சியைக் கூட நீங்க யோசிக்க முடியாது. இரண்டரை மணிநேரம் போனதே தெரியாம படம் நகரும். நம்ம வாழ்க்கையில நடக்கிற மாதிரி இருக்கும்.
கார்த்திகாதான் உங்கக் காதலியா?
இந்தக் கதையிலன்னு திருத்தமா சொல்லுங்க பாஸ். சான்ஸே இல்ல. பவர்ஃபுல் ஆக்டிங். சார்மிங் லுக்ஸ், அவுட்ஸ்டாண்டிங் டான்ஸ். காதல் காட்சிகள்ல அசத்தியிருக்காங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹீரோ - ஹீரோயினை வச்சு கலர்புஃல் சாங் கான்செப்ட் பண்ணியிருக்கோம். ரொம்ப டீசென்டா இருக்கும். பயமில்லாத ஒரு இளைஞனோட துடுக்குத்தனமும், அவனோட கபடமில்லாத காதலும்தான் இந்தப் படம். தடையறத் தாக்க படத்தை விட பல மடங்கு பிரமாண்டமா வரணும்னு செலவு செஞ்சிருக்கோம். கடந்த ரெண்டு வருஷமா இந்தப் படத்துக்கு மட்டுமே உழைச்சிருகேன்.
கௌதம் மேனன் இயக்கத்துல அஜித் கூட நடிக்கிறீங்களே?
ரொம்ப முக்கியமான கேரக்டர், ஸ்ட்ராங்கான கேரக்டர் கொடுத்துருக்கார். இந்தக் கேரக்டருக்கு அருண் விஜய் பொருத்தமா இருப்பான்னு என்று என் மேல நம்பிக்கை வெச்ச இயக்குநர் கௌதம் மேனனுக்கு நான் நன்றி சொல்லியே ஆகணும். தடையறத் தாக்க படம் என் மேல அவர் நம்பிக்கை வைக்க காரணமா இருந்திருக்கும்னு தோணுது. கௌதம் மேனன் இயக்கத்தில் நடிப்பது என் கனவு. அது அஜித் கூடவும் சேர்ந்து நடிக்கிற பெரிய சர்ப்பிரைஸா அமையும்ன்னு எதிர்பார்க்கல. நீங்களும் அஜித்தும் சேர்ந்து நடிச்சா எப்படியிருக்கும்னு இப்பவே கற்பனை பண்ணிப் பார்க்கிறோம் ரொம்ப பெப்பா இருக்குனு பேஸ் புக்ல ஆயிரக்கணக்குல கமெண்ட் போட்டு , லைக்ஸ் கொடுத்து கலக்குறாங்க அஜித் ரசிகர்கள். இது என்னோட கரியர்ல பெரிய படம்.
சினிமா நடிப்புக்கு மத்தியில ஸ்கை டைவிங் பண்ண முடியுதா?
ஒவ்வொரு முறை ஸ்கை டைவிங் பண்ணும்போதும் நாம புதுசா பிறந்து வர்ற மாதிரி ஒரு உணர்ச்சி வரும். நாமதான் கிங்னு தோண வைக்கும். ஓவ்வொரு மூணு மாசத்துக்கு ஒருமுறை குறைஞ்சது பதினாலாயிரம் அடி உயரத்துலேர்ந்து குதிச்சுக் காட்டனும். அப்போதான் உங்க ஸ்கை டைவிங் லைசென்ஸ் ஆக்டிவா இருக்கும். இல்லேன்னா இன்வேலிட் ஆயிடும். என்னோட லைன்சென்சை இழக்க எனக்கு விருப்பம் இல்ல. நான் குதிச்சுகிட்டேதான் இருப்பேன். சமீபத்துல லண்டன்ல பதினெட்டாயிரம் அடி உயரத்துல இருந்து குதிச்சேன். எனக்குக் கிடைச்ச அனுபவம் என் ரசிகர்களுக்கும் கிடைக்கட்டும்தான் படத்துல அந்தக் காட்சியை ரியலா வெச்சோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago