திட்டமிட்ட பட்ஜெட்டைவிடத் தாறுமாறான செலவு எப்படி அதிகரித்தது என்று தயாரிப்பாளருக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு இயக்குநருக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. இங்கே ஒரு இயக்குநர் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்துவிட்டால் அது தயாரிப்பாளருக்குப் பெரிய வரம். படத்தின் பட்ஜெட்டில், அது எடுத்து முடிக்கப்பட்ட பிறகு அதை மக்களிடம் கொண்டுசெல்லும் விளம்பர பட்ஜெட்டும் கண்டிப்பாகச் சேர்க்கப்பட வேண்டும். மொத்த பட்ஜெட்டுக்குமான முழுமையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னரே, படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் கலக்கும் கற்பனையை ஒரு இயக்குநர் பட்ஜெட்டில் கலக்கும்போதுதான் தயாரிப்பாளர் நடுத்தெருவில் நிற்க வேண்டிவருகிறது.
எட்டு வருடங்களுக்கு முன் ஓர் அனுபவம். என் நண்பர் ஒருவர் மூலமாக ஒரு விளம்பரப் படம் எடுக்க வாய்ப்பு வந்தது. அவர் நெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நடத்திவந்தார். முதலில் அவரது தயாரிப்பின் தரத்தைத் தெரிந்துகொண்டேன். தரத்தைப் பேணுவதில் கெட்டிக்காரராகவே இருந்தார். தன்னுடைய பிராண்டைப் பிரபலப்படுத்த நடிகர்களை வைத்து ஏற்கனவே இரண்டு பாடாவதி விளம்பரப் படங்களையும் எடுத்திருந்தார். என்னிடமும் எந்த நடிகரைப் பிடிக்கலாம் என்று பேச்சை ஆரம்பித்தார்.
வழக்கம் போல நடிகர்களை வைத்து எதற்காக விளம்பரப் படம் எடுக்க வேண்டும்? அதற்கு பதிலாக உங்கள் நெய்யின் தரம் என்ன என்பதை மட்டுமே ஃபோக்கஸ் செய்தால் அது கவனிக்கப்படும், ஏனென்றால் நெய் தரமாக இருக்க வேண்டும் என்பது நமது கலாச்சாரத்துடன் பிணைந்த எதிர்பார்ப்பு என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் தரத்தை மையப்படுத்தி ஒரு விளம்பர கான்செப்ட்டை உருவாக்கிச் சொன்னேன். ஏற்றுக்கொண்டார்.
அடிப்படையில் சினிமா ஆர்வமுள்ளவர். பேசப் பேச, நெய்க்கான விளம்பரப் படம் எடுக்கப் போன எனக்கு அதே பட்ஜெட்டில் ஒரு குறும்படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துவிட்டார். ஆனால் குறும்படம் எடுக்கும் செலவிலேயே இரண்டு பத்து செகண்ட் விளம்பரப் படங்கள் எடுத்துத்தர வேண்டும் என்பது அவரது அன்பான நிபந்தனை. வழக்கமாய் ஒன்றரை லட்ச ரூபாயில் விளம்பரப் படம் மட்டுமே எடுப்பவர் அவர். நான் வெறும் அறுபதாயிரத்தில் 15 நிமிடக் குறும்படம், மற்றும் ரெண்டு விளம்பரப் படங்களை டிஜிட்டல் கேமரா மூலம் எடுத்துக் கொடுத்ததில் என் மீது அவருக்கு நம்பிக்கை வந்துவிட்டது. இன்றுபோல் டிஜிட்டல் அன்று பிரபலமாகியிருக்கவில்லை. ஆனால் அந்தக் குறும்படம் என்னை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது. தயாரிப்பாளராய் அவருக்கும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
“நாம ஏன் இதே மாதிரி சின்ன முதலீட்டில் சினிமா பண்ணக் கூடாது?” என்று எனக்கான வாய்ப்பை முன் வைத்தார். எனக்குத் தலை கால் புரியவில்லை. ஆனால் குறும்படம் எடுத்ததுபோல், படத்தை எடுக்க வேண்டுமே என்ற கவலையும் உள்ளுக்குள் தொற்றிக்கொண்டது. என்றாலும் டிஜிட்டல் சினிமா எனக்குத் தைரியம் கொடுத்தது.
ஒரு காதல் கதையை எழுதினேன். சுமார் எண்பது லட்ச ரூபாயில் தயாரிக்க முடிவு செய்தோம். அலுவலகம் போட்டு, நடிகர் நடிகைகளைத் தெரிவு செய்து, பாடல்களைத் தயார் செய்து படப்பிடிப்புக்குப் போக ஏதுவான நேரம் பார்த்துக்கொண்டிருந்தபோது தயாரிப்பாளருக்கு ஒரு பிரச்சினை. படத்திற்காக வைத்திருந்த பணத்தைச் சின்ன கொடுக்கல் வாங்கலில் போட, போன பணம் மாட்டிக்கொண்டது. இரண்டொரு மாதம் காத்திருந்தோம். பாதிப் பணம் மட்டுமே திரும்பி வர, “படம் தொடங்கிருவோம். துண்டு விழறதைப் பின்னால் ஃபைனான்ஸ் வாங்கிப்போம்” என்றார். அந்த நொடியில் என் மண்டைக்குள் அலாரம் அடித்தது.
“இல்லை சார், படத்தை டிராப் பண்ணிருவோம்” என்றேன். அவருக்கு என் மேல் பெரும் கோபம். “போய்யா நன்றி கெட்டவனே!” என்பதுபோல் என்னைப் பார்வையால் நெறித்தார்.
“தயவு செய்து இந்தத் தொழிலைப் புரிஞ்சுக்கங்க சார். நாம ஒண்ணும் வியாபாரம் ஆகுற ஹீரோவை வச்சி எடுக்கலை. ஃபைனான்ஸ் வாங்கி, வட்டி கட்டி, கொஞ்சமாவது லாபம் கிடைக்குங்கற நம்பிக்கையில புதுமுகங்களை வைச்சு எடுக்குறோம். அதுக்கு நம்ம கையில பணம் இருக்கணும். தினசரி பேப்பர்ல விளம்பரம் போட்டு அதில இயக்குநர்னு என் பேர் வர எனக்கு மட்டும் ஆசையிருக்காதா? ஆனா பாதிப்பு என்னைவிட உங்களுக்குத்தான் அதிகமா இருக்கும். ஏன்னா, சினிமா நீங்க பண்ணுற நெய் வியாபாரம் மாதிரி கிடையாது; இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு வித்துக்கலாம்ன்றதுக்கு. பாதியில படம் நின்னா போட்ட பணமும் மாட்டிட்டு, நீங்க வெளிய வர முடியாம போயிரும். இன்னைக்கு இல்லைன்னா நாளைக்குப் பணம் வந்ததும் படம் பண்ணிக்கலாம்.” என்று படத்தை நிறுத்திவிட்டு வந்தேன்.
அன்றளவில் அவருக்கு என் மேல் கோபமிருந்தாலும், பின்னாளில் சில தனியார் பால் நிறுவனங்கள் கார்பரேட்களாகக் கிடுகிடு வளர்ச்சி கண்டதில் அவரது தயாரிப்பு தரமாக இருந்தும், வியாபாரம் படுத்து நஷ்டம் வர, அதிலிருந்து அவர் வெளிவர சினிமாவுக்காக அவர் வைத்திருந்த அந்தப் பணம்தான் உதவியது. இன்றும் அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போது சொல்லிக் கொண்டேயிருப்பார். சமயங்களில் “புண்ணியகோடி...” என்று உரிமையோடு கிண்டலாக நக்கல் செய்வார். அப்போதெல்லாம் எனக்குக் கிடைக்கும் மனநிறைவே தனிதான்.
இன்று பெரும்பாலான புதிய இயக்குநர்கள் புதிய தயாரிப்பாளர்களோடு இணையும்போது தாங்கள் செய்யப்போகும் படம் பற்றிய வியாபாரம், விளம்பரம், அதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் பட்ஜெட் போடுகிறார்கள். அனுபவம் இல்லாத தயாரிப்பாளர்களும் போட்டுக்கொடுத்த பட்ஜெட்டை நம்பிக் களமிறங்குகிறார்கள். ஆனால் சொன்ன பட்ஜெட்டைவிட அதிகமாகி, உன்னைப்பிடி என்னைப்பிடி என உபரியாய் உள்ள பணத்தில் படமெடுக்கலாம் என்று வந்தவர்கள் சில பல லட்சங்கள் கடன் வாங்கியோ, அல்லது சொத்தை விற்றோ படத்தை முடித்திருப்பார்கள். படம் முடித்து நிமிரும்போதுதான் நிஜம் என்னவென்று புரிய ஆரம்பிக்கும். கோடம்பாக்கத்தின் கற்பிதங்கள் எத்தனை பெரிய மாயை என்பது தெரியவரும்.
இசை வெளியீட்டிலிருந்து, சாட்டிலைட், டிவி, பேப்பர், மீடியா, இண்டெர்நெட் கடைசியாகத் திரையரங்குவரை இன்னும் செலவு செய்யக் குறைந்தபட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால், முதல் பிரதி தயாரானதும் படத்தை வெளியிட எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைப் பற்றி இயக்குநர்கள் வாயைத் திறப்பதே இல்லை. புதிய இயக்குநர்கள் வெறும் க்ரியேட்டர்களாக மட்டும் இருந்தால் வெற்றிகரமான சினிமாவை எடுத்து முடிக்க முடியாது. நடப்பியல் தெரிந்த தயாரிப்பாளராகவும் இருக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago