ஒரு படத்தில் இருந்தது போல ஏழு காட்சிகள் காப்பியடித்த படத்தில் தொடர்ந்து இல்லையென்றால் அது காப்பிரைட்டில் வராது என்னும் நம்பிக்கை காலம் காலமாகப் பலரையும் கதை திருடும் சோம்போறிகளாக்கியிருக்கிறது.
கதைத் தாக்கம், கதை உருவல், கதைத் தழுவல் என்று கதைத் திருட்டுக்குப் பல்வேறு பட்டப் பெயர்கள் சூட்டப்பட்டாலும் சுட்டகதை வெட்டவெளிச்சமாகும்போது பாதிக்கப்பட்டவருக்குக் கடைசிவரை கடுக்காய் கொடுக்கப் போராடுவதற்கு முக்கியக் காரணம் இருக்கிறது. திருடப்பட்ட கதையில் உருவான படம் வெற்றிபெற்றுவிட்டால் மற்ற மொழிகளின் ‘ரீமேக் உரிமை’ பல லட்சங்கள், கோடி என்று விலைபோவதால், அதில் பலனடையப்போவது முழுக்கவும் கதையின் காப்பிரைட்டை வைத்திருப்பவர்தான்.
அப்படியிருக்கும்போது இது என் சொந்தக் கதை என்று சொல்லி திருடியவர்கள் பாதிக்கப்பட்டவர் நிரூபிக்கும்வரை தில்லாலங்கடி காட்டுவார்கள். இதைவிடக் கொடுமை நிஜமாகவே கதை, திரைக்கதை, வசனமும் மூன்றையும் எழுதிக் கொடுத்துவிட்டு, ஆரம்பத்தில் கிடைத்த அல்ப சொல்ப தொகையோடு பெயர்கூடக் கிடைக்காமல் அல்லாடும் கோடம்பாக்கத்தின் அப்பாவி ஆவி எழுத்தாளர்களின் (அதாங்க.. கோஸ்ட் ரைட்டர்) கண்ணீர்க் கதை தனி அத்தியாயம். அடியேனும் அப்படியொரு ஆவி அனுபவம் உண்டு.
ஆரம்ப காலங்களில் பல நண்பர்களின் கதை விவாதங்களில் கலந்துகொண்டு சில திரைப்படங்களுக்குத் திரைக்கதை எழுதிய அனுபவமும் இருக்கிறது. அப்போதெல்லாம் நான் முழு நேர சினிமாக்காரனல்ல. சினிமாவின் மீதான அளப்பரிய ஆர்வத்தால் பல உதவி இயக்குநர்களின் கதை தயாரிப்புக்கு ஃபைனான்ஸியராய்க்கூட இருந்திருக்கிறேன். பின்னாளில் சினிமாவில் முழுமூச்சாய் நுழைந்த பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாய் விளம்பரப் படம் எடுத்துக்கொண்டிருந்த நண்பரொருவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருப்பதால், ஒரு மாதத்திற்குள் கதை, திரைக்கதை எழுதி கொடுத்து ஓகேவானால் உடன் கமிட்மெண்ட் என்றார்.
நானும் இன்னொரு உதவி இயக்குநரும் அவருடைய கதையைக் கேட்டோம். அக்கதையைத் திரைக்கதையாக்கும் வேலைக்கு எங்களைப் பணித்தார். ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாகவும் கொடுத்தார். சென்னையிலிருந்து பாண்டிக்குச் செல்லும் கார் பயணத்தில் அக்கதையின் திரைக்கதை வடிவம் பேச ஆரம்பித்து, திரும்ப வரும் போது ஓரளவுக்கு சீன்களைப் பிடித்தி ருந்தோம். பின்பு ஒவ்வொரு காட்சியையும் பேசிப் பேசி எழுதி, அதை மெயிலில் அவருக்கு அனுப்பிவிடுவேன். பிரபல சேனல் ஒன்று அதைத் தயாரிப்பதாக இருந்து, ஏனோ கடைசி நேரத்தில் நின்றுபோனது.
ஆனால் அதே நேரத்தில் எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரித்த பிரபல பட நிறுவனம் ஒன்றில் அக்கதையைச் சொல்லும்வரை என்னிடம் தொடர்பிலிருந்த இயக்குநர், அட்வான்ஸ் வாங்கிய நிமிடம் முதல் எனது தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விட்டார்.
கதை ஓகே ஆகவில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் நண்பர் ஒருவர் மூலம் அவர் ஆபீஸ் போட்டிருப்பது தெரிந்தது. மனது ஆறவேயில்லை. உடனடியாய் அவரைத் தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை. இடம் கண்டுபிடித்து அவரது அலுவலகத்துக்குப் போனேன். நான் வந்திருப்பதை அறிந்தும் என்னை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காக்க வைத்தார். பொறுத்துக்கொண்டு காத்திருந்தேன். அழைத்தபோது கோபப்படாமல் “என்னங்க இப்படிச் சொல்லவேயில்லை?”
“திடீர்னு அழைச்சு கன்பார்ம் பண்ணிட்டாங்க” என்றார்.
“சரி, எப்ப வேலை ஆரம்பிக்கிறோம். எனக்கு எப்ப அக்ரிமெண்ட்?” என்றேன்.
“படத்திற்குத் திரைக்கதை வசனம் எல்லாம் நானுன்னு சொல்லிட்டேன். முத படம் பாருங்க. அதனால உங்களுக்கு அக்ரிமெண்ட் பண்ண முடியாது” என்றார். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
“நம்ம அக்ரிமெண்டே டைட்டில்ல போடுறது தானே” என்றபோது அவரிடமிருந்து பதிலில்லை. என் முகத்தைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தார். “அட்லீஸ்ட் திரைக்கதை உதவின்னாவது போட முடியுமா?’ எனக் கேட்டேன்.
“இல்லை ஜி.. அதான் காசு தந்திட்டேனில்ல!? அப்புறம் இலவசமாவா வேலை செய்தீங்க?’ என்று குரல் உயர்த்தினார்.
“உங்க படத்துக்கு யாருங்க மியூசிக்?” என்ற என் கேள்வியின் அர்த்தம் புரியாமல் பெயரைச் சொன்னார்.
“அவருக்குச் சம்பளம் கொடுத்துட்டு உங்க பேரைப் போட்டுக்கிறீங்களா? இந்தத் திரைக்கதை என்னோடதுன்னு எப்படி ப்ரூப் பண்றதுன்னு எனக்குத் தெரியும்” என்று கோபமாய்க் கிளம்பி விட்டேன். என்னிடமிருந்த ப்ரூப் ஒவ்வொரு காட்சியின் ஒன்லைனுடன் திரைக்கதையை அவருக்கு இமெயில் செய்திருந்தேன். தேதிவாரியாய். யோசித்து புரிந்துகொண்டவர். நேரில் வந்து முதல் படம் தயவு செய்து விட்டுவிடுங்கள் என்றார். அதன் பிறகு நான் அதைப் பற்றிப் பேசவேயில்லை.
ஆனால் அந்தப் பறக்கும் படத்தை அவரால் இயக்க முடியவில்லை. படப்பிடிப்பு ஆரம்பித்து மூன்று நாட்களில் ஏதோ ஒரு பிரச்சினையில் அவருக்குப் பதிலாய் வேறொரு இயக்குநர் பொறுப்பேற்று அவரிடம் கதையை மட்டும் எழுதி வாங்கிக் கொண்டு, அனுப்பிவிட்டார்கள். இன்றுவரை அவர் இயக்குநராக வில்லை. இச்சம்பவத்தை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஏன் கதையை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வில்லை? ஏன் சினி ரைட்டர்ஸ் அமைப்பில் மெம்பராகவில்லை? என்றெல்லாம் ஆளாளுக்குக் கேள்வி கேட்கிறார்கள். ஒவ்வொரு கதைக்கும் பணம் செலவு செய்யும் அளவுக்கு கதாசிரியர் யாரும் வசதி படைத்தவர்களாய் இருப்பதில்லை.
அப்படிப்பட்ட நிலையில் இமெயில் பெரிய சாட்சியாகப் பயன்படும் என்ற எண்ணத்தில்தான் அப்படி அனுப்பியிருந்தேன். இன்றுவரை என் ஸ்கிரிப்டை யாருக்கு அனுப்பினாலும், அதை மெயிலில் அனுப்புவதையே பழக்கமாக்கியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த காப்பி ரைட் பாதுகாப்பு முறை இது.
நண்பரொருவர் சில வருடங்களுக்கு முன்பு ஒரு தயாரிப்பாளரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார். பிரபல எழுத்தாளர் ஒருவரது கதையைச் சொல்லி அக்கதையை உரிமை வாங்கிப் படமாக்கலாம் என்று சொன்னதற்குக் கதை உங்களோடது இல்லைன்னா, அப்ப டைரக்டருக்கு என்ன வேலை என்று கேட்டிருக்கிறார் அவர். என்ன பதில் சொன்னா இவருக்குப் புரியும்னு எனக்குத் தெரியலை என்று புலம்பினான் நண்பன். ஹாலிவுட், தெலுங்கு, இந்திப் படங்களில் திரைக்கதை, வசனத்தை இயக்குநர்கள் எழுதுவதில்லை.
தமிழில்தான் கதை, திரைக்கதை வசனம் இயக்கம் எல்லாவற்றையும் ஒருவரே செய்வது வழக்கமாயிருக்கிறது. ஷங்கர், மணிரத்னம், கே.வி.ஆனந்த் போன்றவர்கள் சுஜாதா, பாலகுமாரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் மற்ற படங்களில் எழுத்தாளர்களின் பங்களிப்பைச் சிறிது காலமாய்த்தான் பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். நிச்சயம் வரும் காலங்களில் நல்ல மாற்றம் வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்போது அப்பாவி ஆவிகளுக்கு சாபவிமோசனம் கிடைக்கலாம்.
தொடர்புக்கு: sankara4@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago