கண்ணீரை மறைத்த சிரிப்பு மேதை

By பிரதீப் மாதவன்

நவம்பர் 29: கலைவாணர் பிறந்த தினம்

எத்தனை சாதனைகள் படைத்திருந்தாலும் காலம் எல்லோரையும் பொக்கிஷமாகப் பொத்தி வைத்துப் பாதுகாப்பதில்லை. நூறாண்டு தமிழ்த் திரைக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் பலமாகப் போட்டுத்தந்த ஜாம்பவான்களில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமா மறக்காத பொக்கிஷம். நகைச்சுவையைச் சமூக மாற்றத்துக்காகப் பயன்படுத்த முனைந்த முதல் முன்மாதிரி. ஒப்புமையும் மாற்றும் இல்லாத அசல் கலைஞன். ‘சிரிப்பு என்பது வியாதிகளை விரட்டும் மருந்து’ என்று மருத்துவர்கள் கண்டறிந்து சொல்லும் முன்பே, மக்களுக்குப் புரிய வைத்தவர்.

தனது முற்போக்குச் சிந்தனைகளால், கட்டியங்காரனுக்கும் கோமாளிக்கும் நாடக மேடையில் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்தவர். நாடகத்திலிருந்து திரைக்குப் பிரவேசித்ததும், அந்த ஊடகத்தின் வீச்சைப் புரிந்துகொண்டு, மூடத்தனங்களை வலிக்காமல் கிண்டி கிழங்கெடுத்தவர். இன்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை தரமிழந்து விட்டாலும் ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் கையாளும் கிண்டலும், கேலியும் கலைவாணர் போட்டுக்கொடுத்த பாதையைப் பின்பற்றித் தொடர்வதுதான்.

வறுமையும் இளமையும்

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில் நாட்டில் ஒழுகினசேரி என்ற கிராமத்தில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29 அன்று கலைவாணர் பிறந்தார். தொடக்கக் கல்வியை மலையாளப் பள்ளியில் படித்த கலைவாணர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். ஆனால் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வீட்டின் வறுமையான சூழல் ஒத்துழைக்கவில்லை. அப்பா சுடலைமுத்து நாகர்கோவில் தபால் அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். தாயார் இசக்கி அம்மாளோ வீட்டிலேயே சாப்பாட்டுக் கடை நடத்தி வந்தார். பெற்றோரின் வருமானம் மொத்தக் குடும்பத்துக்கும் போதவில்லை. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்த கலைவாணருக்கு இரண்டு அக்காள்கள், மூன்று தங்கைகள் ஒரு தம்பி எனப் பெரிய குடும்பமாக இருந்தது. பல வேளைகளில் அம்மாவுக்கும், மூத்த அக்காவுக்கும் காலை உணவு இல்லாமல் போவதைக் கண்டறிந்து உணவு உண்ண மறுத்துக் குடும்பத்துக்காக வேலைக்குச் செல்ல முன்வந்தார்.

அப்போது பலசரக்குக் கடை ஒன்றில் விற்பனைப் பையனாக அவருக்கு வேலை கிடைத்தது. மாதம் ஐந்து ரூபாய் சம்பளம். ஆரம்பத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைக்கும் ஆபத்து வந்தது. வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கொஞ்சம் தாமதமாகக் கடைக்குச் சென்றவரைத் திட்டி அவமானப்படுத்தினார் கடை முதலாளி. கடுமையாக வேலையும் வாங்கினார். கொஞ்சம் உட்கார்ந்துவிட்டாலோ கலைவாணரைப் பார்த்து “உழக்கு, கோம்பை “ ஆகிய சொற்களால் அடிக்கடி திட்டத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் மனம் கொதித்த கலைவாணர், தனது கணக்கைப் பைசல் செய்து அனுப்பும்படி கோபத்துடன் கேட்க, பயந்துபோன முதலாளி உடன் அந்த மாதத்திற்கான நாட்களைக் கணக்கிட்டு நான்கு ரூபாய் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

கம்பீரமாகச் சக ஊழியரிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினார் கலைவாணர். வேலையை விட்டது வீட்டுக்குத் தெரியக் கூடாது என்று எட்டையபுரத்தில் இருந்த தனது அக்காள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். போகும்போது கிடைத்த நான்கு ரூபாய் சம்பளத்துக்கும் சீர் பொருட்களை வாங்கிச் சென்றார் அந்தப் பதிமூன்று வயதில்! தம்பி மீது பாசம் கொண்ட அக்காவோ தம்பியைப் பிள்ளைபோல் உபசரித்ததோடு, கலைவாணரின் கோபம் குறையட்டும் என்று மிருதங்கம் கற்றுக்கொள்ள அனுப்பினார். ஆறே மாதத்தில் மிருதங்கம் கற்றுமுடித்த கலைவாணருக்கு அதன் பிறகு அங்கே கால் தரிக்கவில்லை.

பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய கலைவாணர் 14 வயதுப் பையனாக நாடகக் கொட்டகை அருகே சோடா விற்கும் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஒருநாள் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றவரை நாடக மேடை மாயம் செய்து வசப்படுத்தியது. அதன்பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கும் சிறுவனாகத் தனது வேலையிடத்தை மாற்றிக்கொண்டார். ஆனால் நாடகக்குழு முகாமை முடித்துக் கிளம்பியதும் வெறுமையை உணர்ந்தார். அடுத்த நாடகக் குழு வந்து முகாம் அமைக்கும் வரை, அம்மாவின் புடவையையே திரைச் சீலையாக்கி, தனது சக நண்பர்களுடன் நாடகம் நடித்தார். அப்படி அவர் நடித்தது புராணம் அல்ல. அவரே எழுதிய நகைச்சுவை நாடகம் என்பதுதான் ஆச்சரியமான உண்மை. அதன்பிறகு தனது 17 வயதில் வில்லுப்பாட்டுக் குழுவில் சேர்ந்தார்.

பன்முகக் கலைஞன்

இப்படித்தான் நாடகமும் கலையும் அவரை அழைத்துக் கொண்டது. எஸ்.எஸ்.வாசன் கதை எழுதி எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் 1936-ல் வெளியான ‘சதிலீலாவதி’படத்தின் மூலம், எம்.ஜி.ராமச்சந்திரனோடு அறிமுகமானர். ஆனால் இந்தப் படத்துக்கு பின்னர் கலைவாணர் நடித்த ‘மேனகா’ என்ற திரைப்படமே முதலில் வெளியானது. தமிழ் சினிமாவுக்கு ‘சிரிப்பு மேதை’ கிடைத்தார்.

என்.எஸ்.கிருஷ்ணனிடம் எண்ணற்ற கலையாளுமைகள் இருந்தன. நாடக ஆசிரியர், நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவர். தன்னுடைய மென்மையான நகைச்சுவையால், சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள், மூடத்தனங்கள், ஏமாற்றுக்காரர்கள் ஆகியோரை வன்மையான சொற்களைக்கூடப் பயன்படுத்தாமல் மென்மையாகப் பகடி செய்த சமூக விஞ்ஞானி அவர். பாடலையும் நகைச்சுவைக் காட்சியாக மாற்ற முடியும் என்ற மாயத்தைத் திரையில் முதலில் செய்துகாட்டியவர்.

‘என்.எஸ்.கே. நாடக சபா’ என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்து, 1800 காட்சிகளை நிதி திரட்டுவதற்காகவே நடத்தினார். அதில் கிடைத்த வருவாய் முழுவதையும் நலிந்த கலைஞர்களுக்காக உதவிய கருணை உள்ளம் கொண்ட கலைஞர். தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தை 1953 ஸ்தாபித்து, அதற்கு ஐந்து ஆண்டுகள் தலைவராகவும் இருந்தவர். ஒரு நடிகனால் வள்ளலாகவும் இருக்க முடியும் என்று வாழ்ந்து காட்டியவர். தன் உதவியாளரிடம் ‘என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இல்லாமல் இருக்க வேண்டும்!’ என்று கூறுவாராம். படப்பிடிப்புக்குக் கிளம்பும் முன் காலை 8 மணிக்கெல்லாம் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நின்றுவிடுவார். அப்போது அவர் சொல்லும் வார்த்தை “ ஐயா தர்மப் பிரபு…” என்பது. உடன் கலைவாணர் அவர் அருகில் போய் “ என்னைப் பிரபுன்னு சொல்லாதென்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என்று பணத்தைக் கொடுத்துவிட்டு வருவார். ‘அவர் உங்களை ஏமாற்றுகிறார்’ என்று வீட்டார் சொல்ல “என்னை ஏமாற்றி மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான்?” என்று சொல்வாராம் கலைவாணர்.

அழுதுகொண்டே சிரிக்க வைத்தவர்

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகிய தலைவர்களின் விருப்பத்துக்குரிய ஆளுமையாக இருந்த கலைவாணருக்குத் திரையுலகில் நெருங்கிய தோழராக இருந்தவர். எம்.கே.டி. லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தனது கலை வாழ்க்கையில் பிரச்சினைகள் வரிசை கட்டி நின்றபோதெல்லாம் உள்ளே அழுதுகொண்டே, தன்னை நம்பிய ரசிகர்களை சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்தார். இவரைத் தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் என்று புகழ்ந்தபோது… “ சார்லியை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!” என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார். என்.எஸ்.கே.வின் வாழ்வைத் திரைப்படமாக்கினால் சுவைக்காகக்கூடத் திரைக்கதை யில் ஜோடனைகள் செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. அத்தனை விறுவிறுப்பானது அவரது நிஜ வாழ்க்கை.

படங்கள் உதவி : ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்