சினிமாலஜி 04 - அவள் அப்படித்தானில்’ அஜித், விஜய், நயன்தாரா!

By சரா

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)

‘அவள் அப்படித்தான்' திரையிடலுக்குப் பிறகு, வகுப்பறையில் விவாதத்துக்குப் பதிலாக வாதம் தலைதூக்க ஆரம்பித்ததை உணர்ந்த விரிவுரையாளர் சலீம், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்தார்.

“நாம் இங்கே பார்த்த படம் பற்றி விரிவாக விவாதிக்கிறதுதான் முறை. அதை விட்டு, தங்களோட வாதம்தான் சரின்னு நிரூபிக்க வாய்கிழிய பேசுறதுக்கு இது ஒண்ணும் டிவி நிகிழ்ச்சி இல்லை” என்று சலீம் சத்தமாகப் பேசியதும், அப்புறம் பேசிக்கொள்ள முடிவுசெய்து ரகு வாய் திறக்கவில்லை. வகுப்பில் அமைதி நிலவியது. ’

உட்கார்ந்தபடியே பேசிய ப்ரியா, “பெண்களோட பார்வையில் காதலையும் உணர்வுகளையும் சொல்லுற படம் அரிதினும் அரிது. அந்த வகையில் 'அவள் அப்படித்தான்' படத்தை மிக முக்கியமானதா பார்க்குறேன்” என்று பார்த்தாவுக்கு பாயின்ட் எடுத்துக் கொடுத்தாள்.

“அதேதான். 'ஆட்டோகிராப்' மாதிரியே ஒரு பொண்ணு தன்னோட பழைய காதல்களைத் தேடி கல்யாணப் பத்திரிகை கொடுக்க போனா, அந்தப் படம் வெள்ளி விழா காணுமா?” - ரொம்பவே பழைய வாதத்தை வைத்தது பார்த்தாவேதான்.

“இது இன்னைக்கு வரைக்கும் தொடருதே... ‘ப.பாண்டி'யில ரேவதி கதாபாத்திரம் தன் முதல் காதலை தேடிப் போயிருந்தா எப்படி இருந்திருக்கும்?” என்று கேள்வி எழுப்பினாள் கீர்த்தி.

அப்போது குறுக்கிட்ட ஜிப்ஸி, “இப்படியே சமகால சினிமாவை நொட்டை சொல்லிட்டே போனா எப்படி? இப்பகூட பெண் கதாபாத்திரங்களை மையமா வைத்து வர்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்குது. ‘மகளிர் மட்டும்' படத்தோட ட்ரெய்லர், இந்திய அளவில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் வந்ததை கவனிச்சேன்” என்றான்.

அதற்குப் பதிலடி தரும் வகையில், “அந்த ட்ரெய்லரை நானும் பார்த்தேன். புல்லட்ல கெத்தா வந்துட்டா அது உமன் சென்ட்ரிக் மூவி ஆகிடுமா? படம் முழுக்கப் பெண்களே இருக்குறதுதான் பெண்களை மையப்படுத்தும் படைப்பா?” எனப் பொங்கினாள் கவிதா.

“அதே பிரம்மாவோட முதல் படம் ‘குற்றம் கடிதல்'. அதுவும் பெண் கதாபாத்திரத்தை முதன்மைப்படுத்திய படைப்புதான். ஒரு படம் வெளியாகுறதுக்கு முன்னாடி இப்படி பேசுறது சரியில்லை. ‘மகளிர் மட்டும்' வெளிவரும்வரை காத்திருப்போம். ‘இறைவி'ன்னு பேரு வெச்சிட்டு வந்தப் படத்துல முழுக்க முழுக்க ஆண்கள். அதுக்கு என்ன சொல்றது?” என்று தன் காரியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினான் ரகு.

“அது, ஆண்கள் ஆதிக்கம் செலுத்துற சமூகத்தில் பெண்களோட நிலைமையைப் பதிவு பண்ணின படம். உனக்குப் புரியலைன்னா அதுக்கு என்ன பண்றது?” என்று ரகுவை முடக்க நினைத்தாள் ப்ரியா.

“எல்லாத் துறையைப் போலவே சினிமாவும் எண்ணிக்கையில் ஆண்களை அதிகமாகக் கொண்டதுதான். அங்கிருந்து வர்ற படைப்புகள் எல்லாமே அப்படித்தான் இருக்கும். வாங்க, பெண்கள் பலரும் சினிமாவுக்கு வாங்க. உங்களோட கோணத்துல படம் எடுங்க. நாங்க பார்க்குறோம். கொண்டாடுறோம்” என்று லாஜிக் பேச முற்பட்டான் பார்த்தா.

சட்டென உள்ளே புகுந்த விரிவுரையாளர் சலீம், “நீங்கள்லாம் திரும்பத் திரும்ப விவாதம்ன்ற பேர்ல சண்டைதான் போடுறீங்க. ‘அவள் அப்படித்தான்’ பத்தி மட்டும் பேசுங்களேன். இறைவி பற்றி கார்த்திக் சுப்புராஜ் வர்ற அன்னைக்கு வெச்சிக்கலாம்” என்று நொந்துகொண்டார்.

“என்னா கேமரா ஆங்கிள் சார்! ஒவ்வொரு ஆங்கிளுமே சினிமா மேதமையைச் சொல்லும். க்ளோசப் ஷாட்ஸை இவ்ளோ பக்காவா வேற யாரும் யூஸ் பண்ணின மாதிரியே தெரியல. அதுவும் லைட்டிங்ஸ்... சான்சே இல்லை!” என்று ‘அவள் அப்படித்தான்’ படத்தின் திரைமொழியை சிலாகித்தான் பிரேம்.

“அதைவிட என்னை ரொம்பக் கவர்ந்தது, அந்தப் படத்தோட வசனம்தான். அதுவும் மஞ்சு, தியாகு கதாபாத்திரங்களோட உரையாடல் வேற லெவல். தன்னோட கொந்தளிப்பைக் காட்டும்போது, தானாகவே கெட்ட வார்த்தைகள் கொட்டும். அதை எழுதினதும், அதைப் படமாக்கினதும், அதை சென்சார் அனுமதிச்சதும் ஆச்சரியமா இருக்கு. சென்சார்ல அப்ப இருந்தவங்களை இப்ப இருக்குறங்க ஃபாலோ பண்ணணும்” என்றான் மூர்த்தி.

“அதே காலகட்டத்தில் பாலச்சந்தரும் பெண்களை மையப்படுத்தி முக்கியமான படைப்புகளைக் கொடுத்ததையும் பதிவு செய்தே ஆகணும்” என்று எடுத்துக் கொடுத்தார் விரிவுரையாளர் சலீம்.

“உண்மைதான் சார். நான் ரொம்ப நாளா 'அவள் அப்படித்தான்' படமும் பாலச்சந்தர் எடுத்ததுன்னு நினைச்சிட்டு இருந்தேன். அவரோட படங்கள்ல மிகைப்படுத்துதல் அதிகமா இருக்கும்னு தோணுது. இயல்புத் தன்மை குறைவு. ரித்விக் கட்டக்கோட ‘மேக தக்க தாரா' படத்தைக் கலைச்சிப் போட்டு ‘அவள் ஒரு தொடர்கதை'யில சிதைச்சதையெல்லாம் தயவுசெஞ்சு யோசிக்க வைக்காதீங்க சார்” என்று குமுறினான் பார்த்தா.

“ஓகே... அதை இன்னொரு நாள் வெச்சுப்போம்” என்று மட்டும் சொன்னார் சலீம்.

“1978-ல் வெளியான ‘அவள் அப்படித்தான்' பேசியவை எல்லாமே நம் சமூகத்துக்கு இப்போதும் கச்சிதமாகப் பொருந்தும் என்பதைக் காட்ட நான் கொஞ்சம் விரிவாகப் பேச நினைக்கிறேன்” என்றாள் ப்ரியா.

அனைவரும் ஆர்வத்துடன் அனுமதித்தனர்.

ரஜினி சொல்வார்: “...இந்தப் பொண்ணுங்களுக்கு ரெண்டு வெறி இருக்கக் கூடாது. ஒண்ணு காம வெறி, இன்னொன்னு தன் காலிலேயே நிக்கணுங்குற வெறி. லேடீஸ் ஆல்வேஸ் டிப்பண்டன்ட். இந்த ரெண்டு வெறியும் பிடிச்ச பொண்ணுதான் மஞ்சு. இவங்களெல்லாம் குடும்பத்துக்கே லாயக்கு இல்லை...”

இந்த மனோபாவம் இருக்குற ஆண்களோட எண்ணிக்கைதான் இன்னைக்கும் அதிகம். ஆனாலும், தன்னை இந்தச் சமூகம் எப்படிப் பார்த்தாலும் பரவாயில்லை, இயல்பை மாற்றிக்கொள்வதில்லை என்ற மஞ்சுவைப் போன்ற பெண்கள் இப்ப நிறைய பேரு இருக்குறது ஆறுதல். ஆனா, அவங்க வாழ்க்கை முழுக்க போராட்டமாவே போயிடுது. இன்னும் அவங்களை நாம முழுசா புரிஞ்சிக்க முடியல.

இதைவிட கொடுமை, கமல் நடிச்ச அருண் கதாபாத்திரம். பேசுறது ஒண்ணு; எழுதுறது ஒண்ணு தன்னை போராளிகளா வெளிப்படுத்துற இவங்கள இப்ப சமூக வலைதளங்களில் நிறையவே பார்க்கலாம். பெண்ணியம் அது இதுன்னு பேசிட்டு கடைசில சரிதா கேரக்டர் மாதிரியானவங்களைக் கல்யாணம் பண்ணிட்டு இந்த மாதிரி அடக்கமான பொண்ணுதான் நமக்குப் பாதுகாப்புன்னு போயிடுவாங்க” என்றாள் ப்ரியா.

அப்போது குறுக்கிட்ட ரகு,

“அதேபோல 'வித்தியாசமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்'னு ஒரு டயலாக் வரும். அது வெறும் கவன ஈர்ப்புக்காக மஞ்சு மாதிரி மாறத் துடிக்கும் பெண்களுக்கும் பொருந்தும்” என்று கடகடவெனச் சொன்னான்.

மீண்டும் தொடர்ந்த ப்ரியா, “மொத்தத்துல கலாச்சாரம்ன்ற பேருல நாம பண்ற அலப்பறைகளை அப்பட்டமா காட்டிச்சு. ஆண்களின் நிஜ முகங்களை அம்பலப்படுத்துச்சு. முற்போக்கு சிந்தனைகளில் பெரிதும் ஆர்வக்கோளாறாதான் இருக்கும், உண்மையான ஆர்வம் அரிதுன்றதையும் தோலுரித்துக் காட்டிச்சு. இப்ப மட்டும் இல்லை, இன்னும் முப்பது ஆண்டுகள் ஆனாலும் எப்பவுமே இப்படித்தான்னு தோணுது. அதனால, ‘அவள் அப்படித்தா’னுக்கு இப்போதைக்கு எக்ஸ்பைரி டேட்டே கிடையாது” என்று மூச்சுவிடாமல் சொல்லி முடித்ததுடன் திரையிடல் - விவாத வகுப்பு முடிந்தது.

அப்போது பார்த்தா பகிர்ந்துகொண்ட ஃபேஸ்புக் பதிவு:

“இப்போதும் வியக்கத்தக்க திரைக்கதை வடிவத்தைக் கொண்டிருக்கும் ‘அவள் அப்படித்தான்' படத்தை செல்வராகவன் ரீமேக் செய்து இயக்க, அஜித், விஜய், நயன்தாரா நடித்தால் எப்படி இருக்கும்?”

இந்தப் பதிவுக்கு முதலில் வந்தது, ஒற்றைக் கண்ணீர்த் துளி எட்டிப் பார்க்கும் சோக விருப்பக் குறி!

- தொடர்புக்கு siravanan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்