திரை வெளிச்சம்: அலைய வைத்த திரை விழா!

By ஆர்.சி.ஜெயந்தன்

பதினான்காவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா. “இம்முறை சம்பிரதாயமாக நடந்து முடிந்துவிட்டது” என்று திரை ஆர்வலர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சென்னை சர்வதேசப் பட விழா கடந்த பல ஆண்டுகளாகக் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்ததால் உலக சினிமாப் பிரியர்கள் கோவா, திருவனந்தபுரம் படவிழாக்களுக்குச் செல்வதை தவிர்க்கத் தொடங்கியிருந்தார்கள். அதற்கு முக்கியக் காரணம், இவ்விரு படவிழாக்களில் ரசிகர்களின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெறும் பல படங்கள் சென்னைப் படவிழாவில் தவறாமல் இடம்பிடித்து வந்ததுதான்.

திட்டமிடல், விளம்பரப்படுத்துதல், திரையரங்குகளின் எண்ணிக்கை, படத்தேர்வுகளில் தரம், பிரம்மாண்ட தொடக்க விழா, இந்திய, உலக சினிமா ஆளுமைகளைப் பங்கேற்கச் செய்தல் என ஒவ்வொரு அம்சத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வந்தது சென்னை சர்வதேசப் பட விழாவை ஒருங்கிணைந்து நடத்திவரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன். அப்படியிருக்க இந்த ஆண்டு மட்டும் ஏன் சலசலப்பும் முணுமுணுப்புகளும் எழுந்தன.

கிடைக்காத முதன்மை வளாகம்

சென்னை ராயப்பேட்டையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் உட்லேண்ட்ஸ் திரையரங்கம், திரைப்பட விழாவின் முதன்மை வளாகமாகச் செயல்படும். இங்குள்ள இரண்டு திரையரங்குகளில் சுமார் 900 பார்வையாளர்கள் ஒரேநேரத்தில் படம் பார்க்க இருக்கை வசதியும், பரந்துவிரிந்த பார்க்கிங் வசதியும் இருந்ததால் பெரும்பாலான பார்வையாளர்கள் உட்லேண்ட்ஸில் குவிந்துவிடுவார்கள். ஆனால் இம்முறை உட்லேண்ட்ஸ் திரையரங்கு கிடைக்கவில்லை.

முதல்வரின் இறப்பு, வார்தா புயல் உள்ளிட்ட காரணங்களால் டிசம்பரில் நடந்திருக்க வேண்டிய திரைவிழாவை ஜனவரி மாதத்துக்குத் தள்ளிப்போட வேண்டிய கட்டாயம் உருவானது. ஆனால் உட்லேண்ட்ஸ் திரையரங்க நிர்வாகம் ஜனவரி முதல் வாரம் முதல் புதிய தமிழ்ப் படங்களை வெளியிட விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தம் செய்திருந்ததால், திரைவிழாவுக்கு அவர்களால் அரங்கைத் தர இயலாத சூழ்நிலை உருவாகிவிட்டது என்கிறார்கள். இதனால் முதன்மை வளாகமாக கேஸினோ திரையரங்கு மாறியது.

சிதறிய திரையரங்குகள்

உட்லேண்ட்ஸ் திரையரங்கு, அதன் அருகிலிருந்த ஐநாக்ஸ், ரஷ்ய கலாசார மையத் திரையரங்கு ஆகியன அருகருகே இருந்ததால், ஒரு படம் பிடிக்காவிட்டால் உடனடியாக அடுத்த 15 நிமிடங்களில் அருகிலிருக்கும் மற்ற திரையரங்குகளுக்கு ரசிகர்கள் விரைந்து சென்று பார்க்க வசதியாக இருந்தது. உட்லேண்ட்ஸ் வளாகம் இல்லாமல் போனதில் ரசிகர்கள் மிகவும் தடுமாறித்தான் போனார்கள்.

தெரிவு செய்யப்பட்ட 7 திரைகளில் மூன்று திரையரங்குகள் வடபழனியில் அமைந்துபோனதால் திரைவிழாவை முழுமையாக உணரமுடியவில்லை; படங்களைத் தேடி வடபழனிக்கும் அண்ணாசாலைக்கும் போக்குவரத்து நெரிசலில் சென்று வந்ததில் கடும் அலைச்சல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. வரும் ஆண்டுகளில் திரையரங்குகளை இப்படிச் சிதறடிக்காமல் இருந்தால் முழுமையான திரைவிழா அனுபவம் கிடைக்கும்” என்கிறார்கள் ரசிகர்கள் பலர். இன்னும் சில ரசிகர்கள் “பத்துப் படம் பார்த்தால் அதில் மூன்று படங்கள்தான் சொல்லிக்கொள்ளும்படி இருந்தன. அந்த அளவுக்குப் படத்தேர்வு டல்லடித்தது” என்று குறிப்பிடுகிறார்கள்.

மால் திரையரங்குகளின் கெடுபிடி

விழா மையமான கேஸினோவில் சில முக்கிய படங்களுக்கும், நிகழ்ச்சிகளும் நடந்ததில், அங்கு பெரும் கூட்டம் கூடிய தினங்களில் இருக்கை வசதியும் பார்க்கிங் வசதியும் போதுமான அளவுக்கு இல்லாததால் பலர் இன்னலுக்கு ஆளானார்கள். “தி இந்து இணையத்தில் தினமும் வெளியாகி வந்த திரைப்பட விழா தொடர்பான அட்டவணை, கதைச்சுருக்கம் ஆகியவற்றைப் படித்துவிட்டு, இன்று இந்தப் படத்துக்கு போவோம் என்று வடபழனி பலாஸோ அல்லது ஐநாக்ஸ் திரையரங்குகளுக்கு சென்றுவிட்டால் அவ்வளவுதான். அங்கு நமக்கு முன்னரே பலர் நீண்ட வரிசையில் கீழ்த்தளம்வரை காத்திருந்தார்கள்.

நமக்கும் இடம் கிடைக்கும் என்ற ஆர்வத்துடன் கால் வலிக்க வரிசையில் காத்திருந்து முன்னே சென்றால் இருக்கை நிறைந்துவிட்டது என்று கதவைச் சாத்திவிடுவார்கள். இருந்தும் எங்களைப் போன்ற ரசிகர்கள் தரையில் அமர்ந்து படம் பார்க்கத் தயாராக இருந்தோம். ஆனால் மால் திரையரங்கினர் எங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார்கள். அது எவ்வளவு பெரிய மனவருத்தத்தை எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்” என்கிறார் ஊடகம் பயிலும் மாணவர் ஒருவர்.

தேசிய கீதமும் மாறிய படங்களும்

இருக்கைக்கான சலசலப்பு ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் திரையிடலுக்கு முன் தேசியகீதம் ஒலிக்கும்போது பல பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியதில் கூச்சலும் கைதுகளும் நடந்துவிட்டது உண்மையான சினிமா ஆர்வலர்களுக்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தியது. இதனோடு அட்டவணையில் அறிவித்த பல படங்களைத் திடீரென்று மாற்றியது ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

“ கடந்த ஆண்டுகளில் இதுபோன்ற குளறுபடிகள் இல்லை. படமாற்றம் பற்றிய தகவலை முதல் நாளோ அல்லது இரண்டு காட்சிகளுக்கு முன்னதாகவோ விழாக் குழு தெரிவிக்க வேண்டும். அதுதான் ஏமாற்றத்தைத் தவிர்க்க உதவும்” என்கிறார் மூத்த சினிமா ஆர்வலர். இந்த விமர்சனங்கள் குறித்து சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவின் ஃபெஸ்டிவல் டைரக்டர், இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் திரைப்பட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.தங்கராஜின் கவனத்துக்கு எடுத்துச் சென்றபோது நம்மிடம் பேசினார்.

“இம்முறை சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்த 50-க்கும் அதிகமான படங்களை நாங்கள் தேர்வு செய்திருந்தோம். பட்டியலைப் பார்த்தாலே தெரியும். அதேபோல மற்ற படங்கள், இந்தியன் பனோரமா, தமிழ்ப் படங்களின் போட்டிப் பிரிவு, தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் படைப்புகளுக்கான இடம் என எதையும் நாங்கள் தவறவிடவில்லை. எதிர்பாராத காரணங்களால் திரைவிழா தள்ளிப்போனதால் உட்லேண்ட்ஸ் வளாகம் கிடைக்காமல் போனது. வரும் ஆண்டில் அப்படி இருக்காது என்று நம்புகிறோம்.

மேலும் கோவா, திருவனந்தபுரம் படவிழாக்களை அந்தந்த மாநில அரசுகளே பத்துக் கோடிக்குக் குறையாத செலவில் நடத்துகின்றன. ஆனால் நாங்கள் இங்கே அரசின் பங்களிப்போடும் ஸ்பான்சர்களின் உதவியோடும் நடத்துகிறோம். எனவே கோவா, திருவனந்தபுரம் படவிழாக்களோடு நம்மை ஒப்பிட்டுக்கொள்வது சரியாக இருக்காது. கோவா படவிழாவில் ஒரு படத்துக்கு ‘ஸ்கிரினிங் ஊக்கத் தொகையாக’ இந்தியப் பணத்துக்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம்வரை கொடுக்கிறார்கள். ஆனால், நாம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம்தான் கொடுக்க முடிகிறது.

திரைவிழாவை நடத்த நிதி தொடர்ந்து பெரும் சவாலாக இருக்கிறது. எங்களுக்கு அரசு தரும் தொகை குறைந்தது ஒரு கோடியாக இருந்தால் இன்னும் சிறப்பான படவிழாவை நடத்த முடியும். அதேபோல் அந்தத் தொகை திரைவிழாவுக்கு ஒரு மாதம் முன்னதாகக் கிடைத்தால் படங்களைத் துணிந்து தேர்வு செய்து படவிழாவுக்கு அழைக்கமுடியும்.” என்கிறார். 1,500 ரசிகர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து உலகத் தரத்திலான திரையிடல் வசதி மூலம் படங்களை ரசிக்க ஏதுவாக புதிதாகவும் பிரம்மாண்டமாகவும் கட்டப்பட்டிருக்கும் கலைவாணர் அரங்கம் அடுத்த சென்னை சர்வதேசப் பட விழாவின் முதன்மை வளாகமாக அமையவிருக்கிறது என்று அரசு வட்டாரங்களிலிருந்து நமக்குக் கிடைத்த தகவல் மட்டுமே இப்போதைக்கு இனிப்பானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்