திரைவிழா முத்துகள்: ஊழல் தண்டவாளங்களில் நசுங்கும் நேர்மை

By ரிஷி

சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு பார்த்த உருப்படியான படங்களில் ஒன்று ஸ்லாவா. இது ஒரு பல்கேரியத் திரைப்படம். இதன் ஆங்கிலத் தலைப்பு க்ளோரி. இரட்டை இயக்குநர்கள் கிறிஸ்டினா குரொஸொவா, பீட்டர் வல்சனவ் இயக்கிய திரைப்படம் இது. இருவரும் இணைந்து அநேகக் குறும்படங்களை இயக்கியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து 2014-ல் ‘த லெஸன்’ என்னும் முதல் படத்தை இயக்கினார்கள். செய்தித் தாள்களில் இடம்பெறும் செய்திகளின் அடிப்படையில் சமூக, அரசியல் பார்வையுடன் மூன்று திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்தில் படங்களை இயக்கிவருகிறார்கள். ‘க்ளோரி’ இரண்டாவதாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

இரு துருவங்கள்

படத்தின் பிரதான பாத்திரம் சாங்கோ பெட்ரோவ் என்னும் ரயில்வே ட்ரேக்மேன். மத்தியதர வயதைக் கடந்து, முதுமையின் படியில் கால்வைத்திருக்கும் அவர், தனியே ஒரு வீட்டில் வசித்துவருகிறார். அவருடைய துணை கரிசனத்துடன் அவர் வளர்த்துவரும் முயல்கள்மாத்திரமே. அதிகமாக யாருடனும் பேசாமல், நிதானமான வாழ்வை மேற்கொள்பவர் அவர். அவருக்கு நேர் எதிரானது, போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் செய்தித்தொடர்பாளராகப் பணியாற்றும் ஜுயா ஸ்டேகோவா என்னும் பாத்திரம். அவர் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். இவர்கள் இருவரையும் ஒரே கோட்டில் இணைத்து அதன் மூலம் பல்கேரியாவின் சமூக, அரசியல் சூழலை விமர்சித்திருக்கிறார்கள் இந்த இயக்குநர்கள்.

தண்டவாளத்தில் பணம்

ரயில்வே தண்டவாளங்களைக் கண்காணித்துச் செப்பனிடும் பணியைத் தினந்தோறும் செய்துவரும் சாங்கோ பெட்ரோவ், ஒரு நாள் தண்டவாளத்தில் நடந்து செல்லும்போது பணத் தாள் ஒன்று கிடப்பதைப் பார்க்கிறார்.அதை எடுத்துக்கொள்ளும் அவர் சிறிது தூரம் சென்ற பின்னர் மற்றொரு தாள் கிடைக்கிறது. இரண்டையும் தன் பையில் செருகிக்கொள்கிறார். தொடர்ந்து சென்றவருக்கு அதிர்ச்சிதரும் வகையில் ஏராளமான பணத் தாள்கள் சிதறிக்கிடக்கின்றன.

அவர் அரசுக்குத் தகவல் தெரிவிக்கிறார். ஊடகங்கள் வறுத்தெடுக்கும் போக்குவரத்துத் துறையின் ஊழலிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்கு இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார், செய்தித் தொடர்பாளர் ஜுயா ஸ்டேகோவா. நேர்மையான மனிதரான சாங்கோவுக்கு அமைச்சரின் தலைமையில் பரிசளித்துக் கவுரவித்து நாட்டின் மானத்தைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளால் மனிதநேயம் எவ்வளவு மலினப்படுத்தப்படுகிறது என்பதை இயல்பான திரைமொழியில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள்.

கை நழுவும் கடிகாரம்

பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் சாங்கோ பிரமாதமாகக் கவனிக்கப்படுகிறார். அவருக்குப் புதிய உடைகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பான காட்சிகள் அனைத்துமே எள்ளல் மிக்கவை. அவருடைய பழைய மணிக்கட்டுக் கடிகாரத்தைக் கழற்றிக்கொடுக்குமாறு அவரை வற்புறுத்தும் ஜுயா அவருக்குப் புதிய மணிக்கட்டுக் கடிகாரம் அமைச்சரால் அணிவிக்கப்படும் என்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருடைய பழைய கடிகாரத்தைத் தந்துவிடுவதாகவும் கூறுகிறார். வேறு வழியின்றி தன் தந்தை தனக்குப் பிரியமாக அளித்த கடிகாரத்தை ஜுயாவிடம் தருகிறார் சாங்கோ. ஆனால் வழக்கம்போல் அரசு நிர்வாகம் மெத்தனமாகச் செயல்படுகிறது. ஜுயா சாங்கோவின் பிரியத்துக்குரிய கடிகாரத்தைத் தவறவிட்டுவிடுகிறார். சாங்கோ தன் கடிகாரத்தை மீண்டும் பெற்றுவிடப் போராடுகிறார். இதனிடையே ஊடகங்கள் வேறு தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றன.

மாறும் காட்சிகள்

பரிசளிப்பு விழாவில் அமைச்சரிடம் தனியே பேசும் வாய்ப்புப் பெற்ற சாங்கோ தங்களது சம்பளப் பாக்கி எப்போது வரும் என்று கேட்கிறார். அது மட்டுமல்ல போக்குவரத்துத் துறையில் நடக்கும் சில ஊழல்கள் குறித்துத் தனக்குத் தெரியும் என்றும் அதில் ஈடுபடுபவர்களைப் பற்றியும் தன்னால் சொல்ல முடியும் என்றும் கூறுகிறார். அமைச்சர் திக்குமுக்காடிப் போகிறார். நேர்மையான மனிதரின் எளிய கேள்விகளுக்கு விடைசொல்ல முடியாமல் ஊழல் கறை படிந்த அமைச்சர் நழுவுகிறார். சாங்கோ பற்றி அறிந்துகொண்ட ஊடகர் ஒருவர் அவரைக் காட்சி ஊடகம் ஒன்றின் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குகொள்ளச் செய்கிறார். அதில் அரசின் ஊழலை அம்பலப்படுத்துகிறார் சாங்கோ. இப்போது அரசு நிர்வாகம் தான் நாயகன் என முன்னிறுத்திய நேர்மையான மனிதரை விரோத மனப்பானமியுடன் அணுகுகிறது. அவரை மிரட்டுகிறது. அவரே தான் சொன்னது உண்மையல்ல எனச் சொல்லவைக்கிறது.

அரசாங்கம் தன் ஊழலை மறைக்கத் தனி நபரின் நேர்மையை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதையும் அதன் வழியே தனி மனித உணர்வுகள் எந்த அளவுக்கு நசுக்கப்படுகின்றன என்பதையும் துயரார்ந்த நகைச்சுவைச் சம்பவங்கள் வழியே உணர்த்தியிருக்கிறார்கள் இயக்குநர்கள். நமது நாட்டு அரசியல் சூழலோடு பொருந்திப்போவதால் இப்படத்தை மிக நெருக்கமானதாக உணர முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்