திரைப்பார்வை: ரமன் ராகவ் 2.0 (இந்தி)- பூனைகளால் ஓசை எழுப்பத்தான் முடியும்!

By என்.கெளரி

இயக்குநர் அனுராக் கஷ்யப் ‘ரமன் ராகவ் 2.0’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனக்குப் பிடித்த ‘டார்க் திரில்ல’ருக்குத் திரும்பியிருக்கிறார். 1960-களில் 41 கொலைகள் செய்து மும்பையை உலுக்கிய ‘சீரியல் கில்லர்’ ரமன் ராகவ் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம். படம் ஆரம்பிக்கும்போதே இது ‘ரமன் ராகவ்’ பற்றிய படமல்ல எனச் சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

ரமன் ராகவ்வை காப்பியடித்து மும்பையில் கொலைகள் செய்யும் ஒரு சமகாலக் கொலைகாரன் ரமன்னா (நவாஸுத்தீன் சித்திக்கி). அவனைத் தேடும் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையான காவல்துறை உதவி ஆணையர் ராகவேந்திர சிங் உப்பி (விக்கி கவுஷல்). இவர்கள் இருவரும் கொலை செய்வதை, அதனூடான வன்முறையை எப்படிக் கொண்டாட்டமான செயலாகக் கையாளுகிறார்கள் என்பதை எட்டு அத்தியாயங்களில் பதிவுசெய்கிறது படம்.

ஒரு கொலைகாரன், அவனைத் தேடும் காவல்துறை அதிகாரி இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைத் துல்லியமான திரைக்கதையுடன் விளக்குகிறது இந்தப் படம். இயக்குநர் அனுராக் கஷ்யப், வாசன் பாலாவுடன் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கிறார். அனுராக் கஷ்யப்பின் ‘அக்லி’ (Ugly), ‘தட் கேர்ள் வித் யெல்லோ பூட்ஸ்’ (That Girl with Yellow Boots) ஆகிய அவரது முந்தைய படங்களில் சாயலை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது. ஆனால், கதாபாத்திரங்கள், சம்பவங்கள், படத்தின் மனநிலை போன்றவை இந்தப் படத்தில் இன்னும் குரூரமானதாக மாறியிருக்கின்றன. அவ்வளவுதான்.

இந்தப் படத்தில் கொலைகள் நடப்பதற்கான காரணங்களைத் தேட முடியவில்லை. ஒருவன் தனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதற்காகக் கொலைகள் செய்கிறான். இன்னொருவன் தன் அதிகார மமதையால் கொலைகள் செய்கிறான். இருவருமே மனித இயல்பின் இரண்டு கோர முகங்களைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் அனுராக் கஷ்யப் பயன்படுத்தியிருக்கும் அவல நகைச்சுவை (black humour) படத்தை மேலும் கடினமான திரையனுபவமாக மாற்றுகிறது. ஒரு கொலை நடப்பதற்கு முன் திரையரங்கில் எழும் சிரிப்பலையை அனுராக் கஷ்யப் தன் படைப்பின் வெற்றியாக ரசிக்கலாம்.

ஆனால், வன்முறையை ரசிக்கப் பழகிக்கொண்ட பார்வையாளரின் ரசனையை எப்படி எடுத்துக்கொள்வது? படத்தில் வன்முறைக் காட்சிகள் பல நேரங்களில் நேரடியாகச் சித்தரிக்கப் படவில்லை. ஆனால், அந்தக் காட்சிகளுக்கான ஒலியும் இசையும் அதன் தாக்கத்தை மனதுக்குள் தீவிரமாகப் பதிவேற்றுகின்றன. பெண் கதாபாத்திரங்களான ரமனின் தங்கை (அம்ருதா சுபாஷ்), ராகவின் ‘கேர்ள் ஃபிரண்டு’ சிம்மி (சோபிதா) இருவரின் பாத்திரங்களும் ஆணாதிக்கச் சமூகக்கொடூரத்தின் வீச்சைப் புரிந்துகொள்ள வைக்கின்றன.

நவாஸுத்தீனுக்கு ‘ரமன்’ கதாபாத்திரம் ஒன்றும் புதிதல்ல. ‘கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்’, ‘பதளாபூர்’போன்ற படங்களில் ஏற்கெனவே அவரை ‘டார்க் கிரிமின’லாகப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் படத்தில் ரமன்னாவாக நவாஸுத்தீனின் நடிப்பு அசாதாரணமான ஒன்று. தங்கை குடும்பத்தை ஒட்டுமொத்தமாகக் கொன்றுவிட்டு சிக்கன் சமைத்துச் சாப்பிடுவது, கடவுளிடம் பேசிவிட்டுத்தான் கொலை செய்கிறேன் என்று காவல்துறை அதிகாரிகளிடம் படு கேஷுவலாகச் சொல்வது எனப் பல காட்சிகளில் நடிப்பால் மிரட்டுகிறார்.

‘மசான்’படப் புகழ் விக்கி கவுஷல், ராகவ் கதாபாத்திரத்துக்குச் சிறந்த தேர்வு. குரூரமான காவல்துறை அதிகாரியின் பிம்பத்தைத் திரையில் அப்படியே கொண்டுவந்திருக்கிறார். படத்தின் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களும் நேர்த்தியாகச் சித்தரிக்கப் பட்டிருந்தாலும், அவர்களின் வன்முறை உளவியலுக்கான பின்னணி படத்தில் விவாதிக்கப்படவில்லை. அதனால், படத்துடன் முழுமையாக ஒன்றமுடியவில்லை.

ராம் சம்பத்தின் இசை, ஆர்த்தி பஜாஜின் படத்தொகுப்பு, ஜே ஒஸாவின் கேமரா என எல்லாமே படத்துக்கு வலிமை சேர்த்திருக்கின்றன.

ரமன் ராகவ் வாழ்க்கையைத் தழுவித் தமிழில் எடுக்கப்பட்ட‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் வருவதைப்போலவே இந்தப் படத்திலும் பூனை ஒரு முக்கிய அம்சமாகப் படம் முழுவதும் பல்வேறு டெசிபல்களில் ‘மியாவ்’கிறது . எமன் கதாயுதத்தைத் தூக்கித் திரிவதுபோல் ரமன்னா இரும்பு ஸ்டியரிங் கம்பியைச் சுமந்து தெருவெல்லாம் திரிந்து கொலைகளை நிகழ்த்திச் செல்கிறான்.

ரமன்னா செய்யும் கொலைகளையெல்லாம் பார்த்தபடி பூனைகள் அமைதியாகக் கடந்து செல்கின்றன. ஓரிரு மியாவ் ஒலிகளை எழுப்புவதைத் தவிர அவற்றால் செய்ய முடிந்தது எதுவும் இல்லை. நமது சமூகத்தில் நடக்கும் கொலைகளை, வன்முறைகளை நாமெல்லாம் நெட்டை மரங்களென நின்று புலம்பிவிட்டுக் கடந்து செல்கிறோமே , அதுபோல!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்