அது ஒரு மாலை நேரம். சூரியன் சற்று இளைப்பாற, பரபரப்பாக இருந்தது காபி ஷாப். பார்த்தா, ரகு, ப்ரியா, கவிதா ஆகியோர் அரட்டை அடித்துக்கொண்டிருந்தனர். எதிரே இருந்த டேபிளில் தனியாக உட்கார்ந்திருந்தவரை உற்றுப் பார்த்தான் பார்த்தா.
“ப்ரியா, அது டைரக்டர் நலன் குமாரசாமிதானே?”
திரும்பிப் பார்த்த ப்ரியா, “ஆமாம் அவரேதான்!” என்றாள்.
“பேசலாமா?” என்றான் பார்த்தா.
“வேணாம். அது அவ்வளவு நல்லா இருக்காது” என்று தடைபோட்டாள் கவிதா.
பார்த்தா சட்டென எழுந்து நலன் குமாரசாமி அருகே சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். அங்கிருந்து அவன் அழைக்க, அனைவரும் நலன் குமாரசாமியைச் சூழ்ந்து அமர்ந்தனர்.
“எங்களை மாதிரி சினிமா ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இன்ஸ்பிரேஷன்ஸ்ல நீங்களும் ஒருத்தர் சார். உங்களோட ‘சூது கவ்வும்' நிறைய நம்பிக்கையை கொடுத்துருக்கு” என்று ஆரம்பித்தான் ரகு.
“ஒரே ஒரு நிமிஷம்...” என்று கேட்டுக்கொண்ட நலன் குமாரசாமி தன் செல்போனில் பேசினார்.
“தலைவா... இங்க திடீர்னு வேறொரு கமிட்மென்ட். வர்றதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகும்” என்று அவர் சொன்னபோது நால்வரின் முகத்திலும் மகிழ்ச்சி.
“தம்பி, அதுக்கு நான் மட்டுமே காரணம் இல்லை. என் டீம். குறிப்பாக, என் ஸ்கிரிப்ட்டை புரிஞ்சுகிட்டு என் மேல நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கு” என்று நிதானமாகச் சொன்னார் நலன்.
“அதேதான் சார்... அந்தப் படத்தோட கதையைச் சொல்லி, தயாரிப்பாளரை ஏத்துக்க வெச்சதை நினைக்கும்போது ஆச்சரியமா இருக்கு. ஏன்னா, அந்தக் கதையை விவரிக்கிறதே கஷ்டமான விஷயம்னு நினைக்கிறேன்” என்றாள் ப்ரியா.
“அதேபோல ப்ளாக் ஹுயூமர், பொலிட்டிகல் சட்டையர், க்ரைம் த்ரில்லர், சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட்... இப்படி எல்லாத்தையும் ஒரே படத்துல அணுக முடிஞ்சுது” என்று ஆர்வம் பொங்கினான் ரகு.
“எல்லாத்துக்குமே தனித்தனியா கவனம் செலுத்தணும்னு அவசியமே இல்லை. ஒரு மையக் கதை எடுத்துக்கணும். அதன் கதாபாத்திரங்களை தெளிவா வடிவமைச்சு திரைக்கதை பண்ணினா, அந்தக் கதைக்கு தேவையான எல்லாமே தானாவே உள்ளே வந்துடும். என்னோட தயாரிப்பாளருக்கு சினிமா பற்றிய புரிதல் நல்லாவே இருந்துச்சு. முழு ஸ்கிரிப்டையும் வாசிச்சார். எல்லாமே அமைஞ்சுது” என்றார் இயல்பாக.
“நீங்க திரைக்கதையில் வலுவானவர். இப்போதைய தமிழ் சினிமாவை எடுத்துக்கிட்டா நல்ல கதைக்கும் திரைக்கதைக்கும்தான் பஞ்சம்னு நினைக்கிறேன்?” என்றாள் ப்ரியா.
“அது உண்மைதான். இங்க கதை, திரைக்கதை மேல உரிய கவனம் செலுத்துறது அரிதாகத்தான் நடக்குது. நான் ரொம்பவே டைம் எடுத்துப்பேன். ஒரு கதையைப் பிடிக்கிறதுக்கும், அதையொட்டி திரைக்கதை அமைக்கிறதுக்கும் போதுமான நேரம் தேவைப்படுது. ஆனா, இங்க உடனுக்குடன் படம் பண்ணனும்ற தேவையில்லாத நெருக்கடியும் இருக்கு. ஓர் இயக்குநரே எழுத்தையும் கவனிக்கணும்னு அவசியம் இல்லை. நல்ல கதைகளையும் திரைக்கதைகளையும் அவர் சிறப்பாகப் படமாக்கினாலே போதும். சினிமாவுக்கான மொழியில மட்டும் இயக்குநர்கள் கவனம் செலுத்தினா இன்னும் சிறப்பா இருக்கும்.
சினிமாவுக்கு ஒரு கதையோ அல்லது திரைக்கதையையோ உருவாக்குறதுன்றது சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு பெரிய ப்ராசஸ். நிறைய வாசிக்கணும். நிறைய அனுபவம் இருக்கணும். அதுக்கான வடிவத்துல தெளிவு இருக்கணும். இன்னைக்கு திரைக்கதையை எத்தனையோ புத்தகங்கள் எளிதா சொல்லித் தருது. நம்ம ஊருல நமக்குக் கிடைச்ச அனுபவத்தையும் எழுத்துத் திறமையையும் பின்புலமா வெச்சு திரைக்கதைகள் எழுதப்படணும். அது ஓரளவு இங்க நடத்துட்டுதான் இருக்கு. ஆனா, அது போதாது” என்றார் விரிவாக.
“எல்லாம் சரிதான் சார். ‘சூது கவ்வும்’ பார்த்துட்டு, அதே மாதிரியான சினிமா அனுபவம் தரும்னு நம்பி போனேன். ‘காதலும் கடந்து போகும்' கவுத்திடிச்சே. ரொம்ப மெதுவா கடந்து போன ஃபீலிங்...” என்று இழுத்தான் பார்த்தா.
அப்போது குறுக்கிட்ட ரகு, “நீ இன்னும் வளரணும் பார்த்தா. ‘சூது கவ்வும்' ஒரு மாதிரியான பாய்ச்சல்னா, 'காகபோ' வேற லெவல் பாய்ச்சல். எனக்கு ரெண்டுல ‘காகபோ'தான் ஃபேவரிட். 2010-ல் வெளியான ‘மை டியர் டெஸ்பிராடோ' என்கிற கொரிய திரைப்படத்தின் உரிமையை விலை கொடுத்து வாங்கி, அதை அதிகாரபூர்வமாகத் தமிழில் கச்சிதமாக ரீமேக் செய்ததை நேர்மையான அணுகுமுறையா பார்க்குறேன். உனக்கு ஸ்லோ மூவிக்கும், போரிங் ஃபிலிமுக்குமான வித்தியாசம் தெரியலை. பரபர ஃபாஸ்ட் மூவி பலருக்கு போரிங்காக இருக்கலாம். அதே நேரத்தில், ஒரு தாத்தா நடந்து போறதை நாலரை நிமிடம் காட்டும் ‘வீடு' போன்ற படங்கள் பலருக்கு அற்புத அனுபவம் தரலாம். அப்படி ஒரு செம்ம படம் இது...” என்றதும் கவிதா சேர்ந்துகொண்டாள்.
“கரெக்ட். கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நம்ம வாழ்க்கை மெதுவாகத்தானே நகருது. ஆனால், போர் அடிக்கிறதா? நம் அன்றாட வாழ்க்கையே மெதுவாகச் செல்லும்போது, அதை சினிமா எனும் கலை வடிவில் பார்க்கும்போது பெரும் பரபரப்பாக இருப்பதுபோல் காட்டுவதும், அப்படித்தான் இருக்கணும்னு நினைக்கிறதும் எவ்வளவு பெரிய அபத்தம்? ‘காகபோ’ திரைக்கதையும் இயல்பான வேகத்தில் மெதுவாகவே நகர்கிறது. ஆனால், எந்த இடத்திலும் அலுப்பு ஏற்படல. ரசிக்க முடிஞ்சுது” என்றாள் கவிதா.
“சரி... ரொம்ப சூடா டிஸ்கஷன் பண்றீங்க. நான் காபி வாங்கிட்டு வரேன்” என்று எழுந்த நலன், நால்வருக்கும் தானே காபி வாங்கி வந்து கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.
“தம்பி... என்னோட படங்களைப் பாக்க முன்முடிவோட தியேட்டருக்கு ரசிகர்கள் வர்றதை விரும்பல. இப்படித்தான் இருக்கும்னு கணிக்கிற அளவுக்கு ஒரே மாதிரியான படங்கள் தர்றதுல என்ன இருக்கு? எனக்கு எல்லா விதமான ஜானர்லயும் படம் பண்ண பிடிக்கும். அதைத்தான் ‘சூது கவ்வும்’ படத்துக்கு அப்புறம் ராம்-காம் ட்ரை பண்ணினேன். எனக்கு அதுல திருப்திதான்!” என்று காபி அருந்தியபடியே மிக நிதானமாகச் சொன்னார் நலன் குமாரசாமி.
“ராம்-காம்னா?” - இது பார்த்தா.
“ரொமான்டிக் காமெடிடா. இதுகூடத் தெரியாதா?” என்று சின்ன இடைவெளியில் கலாய்த்தான் ரகு.
“தமிழ் சினிமாவுக்கே உரிய முக்கியமான ஜானர் - மசாலா படம். அது உங்களால முடியுமா?” என்று பார்த்தா கிண்டலாகக் கேட்டான்.
அதற்கும் சிரித்த முகத்துடன் பதிலளித்த நலன், “தம்பி, மசாலா படம் எடுக்குறதும் ரொம்ப கஷ்டம். அதை ஒரு ஜானர்னே வெச்சுக்குவோம். அதுக்குள்ள எவ்ளோ மெனக்கெடல் இருக்கு தெரியுமா? ஆனா, நம்ம தமிழ் சினிமாவுல தரமான மசாலா படம்ன்றதே ரொம்ப அரிதா இருக்கு. ஒரு உருப்படியான மசாலா படம் கொடுக்குறதுக்கும் தனித்திறமை வேணும். 'தளபதி'யும் ஒரு சூப்பரான மசாலா படம்தான். ஒரு மசாலா படத்துக்கு உரிய எல்லா அம்சமும் அதுல இருக்கு. ஆனா, ரொம்ப நேர்த்தியா எடுக்கப்பட்ட படம். நீங்க சொல்ற மாதிரி நானும் ஒரு மசாலா படம் எடுக்க தயாராகிட்டு இருக்கேன். அந்த ஜானர்லயும் எடுப்போமே... செம்ம எங்கேஜிங்கா எல்லா பொழுதுபோக்கு விஷயங்களும் இருக்குற பக்காவான மசாலா படத்தை எடுத்துதான் காட்டுவோமேன்னு தோணுது. பார்க்கலாம்” என்றபோது சற்றே வியப்படைந்தார்கள் நால்வரும்.
“என்ன சார்... ஒரு பக்கம் மாஸ், மசாலான்னு தமிழ் சினிமா போவுது. உங்களை மாதிரி படைப்பாளிகள்தான் வலுவான திரை மொழியோட நல்ல படங்கள் கொடுக்கிறீங்கன்னு பார்த்தா நீங்களுமா?” என்று கேட்டாள் ப்ரியா.
“அதிலென்ன தப்பு?” என்று இன்னும் சற்று விளக்கம் அளிக்க முற்பட்டார் நலன் குமாரசாமி.
- தொடர்புக்கு siravanan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago