மலேசியத் தலைநகரில் இருக்கும் இந்தியத் தூதரகம் நம்ப முடியாத விதத்தில் அடித்து நொறுக்கப்படுகிறது. இந்திய அரசின் உளவுப் பிரிவான ‘ரா’, தாக்குதலின் காரணத்தைத் துருவத் தொடங்குகிறது. இதை விசாரிக்கும்படி, இடைநீக்கத்தில் இருந்துவரும் ‘ரா’ அதிகாரி அகிலனை (விக்ரம்) கோருகிறது. முதலில் மறுக்கும் அவர், இதில் சம்பந்தப்பட்டது ‘லவ்’ என்பவன் என்றதும் உடனே ஒப்புக்கொள்கிறார். லவ், அகிலனின் மனைவி மீராவின் (நயன்தாரா) மரணத்துக்குக் காரணமானவன். விக்ரமுடன் துணை உளவு அதிகாரியாக செல்கிறார் நித்யா மேனன்.
விசாரணையில் அதிபயங்கர ஊக்க மருந்தின் ஆபத்தான முகம் வெளிப்படுகிறது. அப்படியொரு மருந்தை தயாரித்து தீவிரவாத அமைப்புகளுக்கு உலகம் முழுவதும் விற்க முயலும் இரக்க மற்ற வில்லன்தான் ‘லவ்’. மலேசியாவில் இருக்கும் வில்லனை விக்ரமால் நெருங்க முடிந்ததா? நயன்தாரா என்ன ஆனார்? ‘லவ்’வின் பேரழிவுத் திட்டத்தை தடுக்க முடிந்ததா? இதுதான் இருமுகன்.
விறுவிறுப்பான திரைக்கதை, தரமான மேக்கிங் ஆகியவற்றால் கவனிக்க வைத்த ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் எழுதி, இயக்கியுள்ள படம். அதிபயங்கர விளைவை உருவாக்கும் ஊக்க மருந்து ஒன்றை முக்கியக் கதாபாத் திரங்களோடு பிணைத்து த்ரில்லர் கதையை எழுதியிருக்கிறார்.
ஊக்க மருந்துக்கு அவர் தரும் முஸ்தீபான சித்தரிப்புகள், அதை எடுத்துக்கொள்பவர்களின் விஸ்வரூபம், அதை வைத்து நாயகனும் வில்லனும் ஆடும் அதிரடி ஆட்டம் என அத்தனையும் படமாக்கப்பட்டுள்ள விதத்தால் கவர்கின்றன.
சஸ்பென்ஸை தக்கவைத்திருக் கும் முன் பாதி வேகமாக நகருகிறது. பாத்திர வார்ப்புகள், தனிப்பட்ட உணர்ச்சிகள், மனித இனத்துக்கு எதிரான குற்றம் ஆகியவை சுவாரஸ்யம் சேர்க்கின்றன. ஆனால் முக்கியமான திருப்பங்களில் நம்பகத்தன்மை இல்லாததால் படம் பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைக்க தவறுகிறது.
கொடூரமான வில்லனின் கையில் பலமுறை சிக்கும் நாயகன் பத்திரமாக வந்துவிடுவது சிரிப்பை வரவழைக்கிறது. வில்லனை அடைத்து வைத்திருக்கும் மலேசிய ஜெயில் அநியாயத்துக்கும் டம்மியாக இருக்கிறது. அங்கிருந்து வில்லன் ‘லவ்’ தப்பிக்கும் வழிமுறை அபத்தங்களின் அபத்தம். மலேசியக் காவல் துறையின் அம்மாஞ்சித்தனத்துக்கு திரையரங்கில் சிரிப்பலைதான் எழு கிறது.
மருத்துவமனைக்குள் நடக்கும் திருப்பங்களும் காமெடி பஞ்சத்தைப் போக்குகின்றன. ரசாயன வாயு மூலம் நரம்பு மண்டலம் முடக்கப்படும் நாயகன் அடுத்த நிமிடமே மின்னல் வேகத்தில் கார் ஓட்டுகிறார். இப்படி நீளும் கட்டுக்கதைகளால் கிளம்பும் கொட்டாவிகளுக்குப் பொருத்தமான முத்தாய்ப்பு கிளைமாக்ஸ்.
அகிலன், ‘லவ்’ என இரண்டு கதாபாத்திரங்களுக்கான வேறுபாட்டை அனாயாசமாகக் கொண்டு வந்துவிடுகிறார் விக்ரம். அகிலனின் தீவிரம், ‘லவ்’வின் அலட்டிக்கொள் ளாத வில்லத்தனம் இரண்டையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். நயன்தாராவுக்கு காதல், டூயட்டோடு முடிந்துவிடாத வேடம். ஆனால், திரைக்கதையின் ஓட்டைகள் இவரது பாத்திரத்தையும் பாதிக்கின்றன. நயன்தாராவின் திரை ஆளுமை வசீகரிக்கிறது என்றாலும் அவர் பல காட்சிகளிலும் ஒரே மாதிரி நடிக்கிறார். நித்யாமேனனுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வேடம் இல்லை. நாசர் விஷயமும் அதே. சிரிக்கவைப்பதில் திரைக்கதையின் திருப்பங்களுடன் தம்பி ராமையாவால் போட்டிபோட முடியவில்லை.
நயன்தாராவின் ஆடைகளும் பாடல் காட்சிகளில் அவரது தோற்றங்களும் கவர்கின்றன. பாதி கலை இயக்கம், மீதி கிராஃபிக் மென்பொருளில் உருவான ‘செட் டிசைன்’ என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
காட்சிகளுக்கும் பாத்திரங்களுக்கும் ஏற்ப உருமாறும் வண்ணங்களில் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரின் கற்பனை பளிச்சிடுகிறது. சேஸிங் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் கேமரா துடிப்பாகச் செயல்படுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஹெலனா’ பாடல் மட்டும் ஈர்க்கிறது. பின்னணி இசையில் பல படங்களின் எதிரொலி கேட்கிறது.
இருமுகனில் ஒப்பனை அதிகம். கற்பனை குறைவு!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 mins ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago