கோடம்பாக்கத்தில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் எவ்வளவோ உண்டு. ஆனால் இப்போதைக்குத் தலையைப் பிய்த்துக் கொள்கிற அளவுக்குத் தலைதூக்கிக் கிடக்கிறது தலைப்புப் பிரச்சினை ! இதற்காக ஏகப்பட்ட மோதல்கள், பஞ்சாயத்துக்கள் நடக்கின்றன. இதன் பின்னணி என்ன? இதன் விளைவுகள் என்ன? இதைத் தீர்க்க வழி என்ன?
ஒரு படம் எடுக்க வேண்டுமானால் பட நிறுவனத்தின் பெயரையும், படத்தின் தலைப்பையும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் கில்ட் அல்லது பிலிம் சேம்பர் ஆகிய மூன்று அமைப்புகளில் ஏதாவது ஒன்றில் பதிவு செய்தால் போதும். இந்த மூன்று சங்கங்களுக்கும் இடையே பின்பற்றப்படுவதாகச் சொல்லப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, ஒரே தலைப்பு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதுதான் தற்போதைய நடைமுறை. ஆனால் மொத்தச் சிக்கலுக்கும் இதுவே முக்கியக் காரணம் என்கிறார்கள் தலைப்புப் பிரச்சினைகளால் நீதிமன்றம்வரை சென்று, படத்தை அறிவித்தபடி வெளியிட முடியாமல் திண்டாடிய சிலர்.
தலைப்பு வியாபாரம்
படமெடுக்க விரும்பும் ஒருவர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர ஒரு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். அதன் பிறகே படத்தின் தலைப்பை அங்கே இலவசமாகப் பதிவு செய்துகொள்ள முடியும். ஆனால் தயாரிப்பாளர் கில்ட், பிலிம் சேம்பர் ஆகிய இடங்களில் தலைப்பு பதிவு செய்ய 3500 ரூபாய் இருந்தால் போதும். கட்டணம் குறைவு என்பதால், ஒன்றுக்குப் பல தலைப்புகளைப் பதிவு செய்து வைக்கிறார்கள் பலர். தலைப்பு காலாவதியாகிவிடாமல் இருக்க ஆண்டுதோறும் பணம் கட்டிப் புதுப்பித்துவிடுவார்கள்.
நிஜமாகவே படத்தைத் தொடங்கிவிடும் ஒரு நிறுவனம், பொருத்தமான தலைப்பைத் தேர்வுசெய்து அதைப் பதிவு செய்ய வந்தால், அந்தத் தலைப்பை ஏற்கனவே ஒரு நிறுவனம் பதிவுசெய்து வைத்திருக்கும். ஆனால் படம் எடுக்காமல் இருக்கும். கோடிக்கணக்கில் முதலீடு செய்யும் பெரிய தயாரிப்பாளர் தலைப்புக்காகப் படம் நிற்க வேண்டாம் என்று முடிவு செய்து, ஒரு தொகையைக் கொடுத்துத் தலைப்பை வாங்கிக்கொள்வார். இப்படிக் காலம் காலமாக தலைப்பு வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது கோடம்பாக்கத்தில்.
படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும்போதே, அந்தத் தலைப்பை வைத்திருப்பவர் பேரத்துக்கு வந்துவிட்டால்கூடப் பிரச்சினையை தீர்த்துவிடலாம். ஆனால் படம் ஊடகங்களில் பெரிதாகப் பிரச்சாரம் செய்யப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும்வரை காத்திருந்து பிறகு ரிலீஸ் நேரத்தில் வழக்கு தொடுத்தால் பேரம் படியும் என்ற நோக்கத்தோடு குடைச்சல் கொடுப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
வலியவன் வாழ்வான்
இது ஒருபுறம் இருக்க, பல வருடங்களை சினிமாவில் தொலைத்த உதவி இயக்குநர்கள் பலர், தங்களது முதல் படத்தின் கதைக்கான தலைப்பையும் கனவுகளுடன் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் உதவி இயக்குநர்களின் தலைப்புகள் என்றால், எடுப்பார் கைப்பிள்ளைபோல “நாளைக்கு நீ சினிமாவில் இருக்கணுமா, வேண்டாமா ?” என்று பயமுறுத்தியே செல்வாக்குடன் இருப்பவர்கள் தலைப்பைப் பிடுங்கிக்கொள்வதும் நடக்கிறது என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத இணை இயக்குநர். இவர் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளராக இருக்கும் ஒருவரிடம் தனது தலைப்பைப் பறிகொடுத்தவர். இன்னும் பல அறிமுக இயக்குநர்கள் தலைப்பு வைத்துத் தங்கள் முதல் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போதே, அதே தலைப்பில் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் தலைப்பு வைத்துப் படத்தை விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள் பெரிய தயாரிப்பாளர்கள். சின்ன படம், சின்ன கம்பெனி என்றால் எளிதில் பணிய வைத்துவிடலாம் என்ற எண்ணம்தான் இந்த அராஜகப் போக்கிற்குக் காரணம் என்கிறார்கள் முதல்பட இயக்குநர்கள். இவர்களில் பலர் கடைசி நேரத்தில் முன்னணி நிறுவனங்களுக்குத் தலைப்பைத் தாரை வார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.
கதையும் கழுதையும்
உண்மையில் தலைப்புக்காக ஏன் கோடம்பாக்கத்தில் அடிக்கடி குழாயடிச் சண்டை நடக்கிறது என்று ஆராய்ந்தால், ரசிகர்களை ஒரே வீச்சில் சென்று அடையும் வசீகரமான படத்தலைப்புகள், தயாரிப்பாளரின் விளம்பரச் செலவைப் பாதியாகக் குறைத்துவிடுகின்றன. படத்தில் என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இவை தொடக்கத்திலேயே உருவாக்கிவிடுவதால், வசீகரிக்கும் தலைப்புகள் பிராண்ட் மதிப்பாகவே பார்க்கப்படுகின்றன.
“படத்தில் கதையும் திரைக்கதையும் அழுத்தமாக இருந்து தலைப்பை கழுதை என்று வைத்தால்கூட ரசிகர்கள் கைவிடமாட்டார்கள். அதேநேரம் துப்பாக்கி, வெடி என்றெல்லாம் தலைப்பு வைத்துவிட்டு கதையை ஊசிப் பட்டாசுபோல் வைத்திருந்தால் அந்தப் படம் புஸ்வாணம்தான்” என்று தடாலடியாகச் சொல்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.
பதிவு செய்த தலைப்பைக் கொண்டு ஒரு வருடத்துக்குள் படம் எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் தலைப்பு செல்லாது என்று அதிரடியாக ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தால் இந்த தலைப்பு பிரச்சினை இந்த அளவு இருக்காது. ஆனால் பெரிய தயாரிப்பாளர்களில் பலரே இப்படி தலைப்புகளைப் பதிவு செய்து, ஆண்டுக்கணக்கில் முடக்கிவருவதால் இதைத் தயாரிப்பாளர் சங்கத்தால் நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருக்கிறது என்கிறார் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.
உருப்படியான ஒரே தீர்வு
அப்படியானல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க என்னதான் வழி என்றால், “உருப்படியான நிரந்தரத் தீர்வுக்குக் கணினி கைகொடுக்கிறது. தலைப்புகளைப் பதிவு செய்யும் முறையை சிங்கிள் விண்டோ சிஸ்டத்துக்கு மாற்றுவதுதான் ஒரே வழி” என்கிறார் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஜனநாதன். தற்போது ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்க இவர் இயக்கிவரும் ‘புறம்போக்கு’ படத்தின் தலைப்பும் பிரச்சினையில் சிக்கிக்கொண்டது.
“கதையைச் சிந்திக்கும்போதே தலைப்பையும் சிந்தித்து உருவாக்குபவர்கள் இயக்குநர்கள்தான். அதனால்தான் இயக்குநர் சங்கத்திலும் தலைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்று சொன்னோம். இயக்குநர் சங்கம் உட்பட இந்த நான்கு இடங்களில் ஏதாவது ஓரிடத்தில் ஒருவர் பதிவு செய்துவிட்டால் அந்தத் தலைப்பை வேறு யாரும் பதிவு செய்யக் கூடாது. ஒருவர் பதிவு செய்த இ-மெயில் ஐடியை மற்றொருவர் பதிவு செய்ய முடியாது. இதே முறையைப் பின்பற்றித் தற்போது மென்பொருளை உருவாக்கிவருகிறோம். கன்னியாகுமரியில் இருப்பவர், காஷ்மீருக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதுபோல சுலபமாக ஒருவர் தலைப்பைப் பதிவு செய்துகொள்ளலாம். இதில் யாரும் குழப்பம் செய்ய முடியாது. தயாரிப் பாளர்கள் தரப்பில் முரண்டுபிடிக்காமல் இந்த நம்பகமான முறைக்கு ஒப்புக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும்” என்று தீர்வை முன்வைக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் பயன்படுத்திக்கொள்ளும் திரையுலகில், தலைப்பைப் பதிவுசெய்வ தற்கும் அதைப் பயன்படுத்திக்கொண்டால் பல பேரங்களையும் பஞ்சாயத்துகளையும் தவிர்க்கலாமே.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago