நாற்பதுகளின் தொடக்கத்தில் பேசத் தொடங்கியிருந்த தமிழ் சினிமா, நாடக மேடையின் விரல்களைப் பிடித்துக்கொண்டு நடைபழகிக்கொண்டிருந்தது. ஆனால் திரைப்படம் என்பது காட்சிகளின் கலை என்பதைத் தமிழர்களுக்கு புரியவைத்தார் ஓர் அமெரிக்கர். குளோஸ் -அப் காட்சிகளை அர்த்தபூர்வமாக அவர் அறிமுகப்படுத்தினார். லாங் ஷாட், ட்ராலி ஷாட், டாப் ஷாட், . சிம்பாலிக் ஷாட், ஒளியமைப்பு உத்தி, ஒப்பனை உத்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி கதாபாத்திரங்களின் மனநிலையைக் காட்சியின் கோணத்திலும் ஒளியின் கட்டுப்பாட்டிலும் வடித்தெடுத்தார்.
கையைப் பிடித்துக்கொண்டாலே பெரிய நெருக்கம் என்று பார்க்கப்பட்ட காலத்தில், நாயகன், நாயகி இருவரும் கட்டியணைத்துத் தழுவிக்கொள்ளும் நெருக்கமான காதல் காட்சிகளைத் துணிவுடன் அறிமுகப்படுத்தினார். ‘தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுக்கும் அந்நியன்’ என்ற கண்டனங்களைப் பெற்றுக்கொண்டார். அவர்தான் தமிழ் சினிமாவின் காட்சி மொழிக்கும் பேச்சு மொழிக்கும் மடை திறந்துவிட்ட எல்லீஸ் ஆர் டங்கன்.
ஒளிப்பதிவு மாணவர்
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம் பார்ட்டன் நகரில் 1909-ம் ஆண்டு மே 11-ல் பிறந்தவர். பள்ளிப் பருவம் முதலே ஒளிப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த டங்கன், ஹாலிவுட் சினிமாவின் பிறப்பிடமான கலிபோர்னியாவுக்குச் சென்று, திரைப்பட ஒளிப்பதிவுக் கலையைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாகப் பயின்றார். ஒளிப்பதிவுடன் நின்றுவிடாமல் ஒரு திரைப்படம் உருவாகும் எல்லாத் துறைகளையும் விருப்பத்துடன் கற்றுக்கொண்டார். தெற்கு கலிபோர்னியா பல்கலையில் இவருடன் ஒளிப்பதிவு பயின்ற இந்திய மாணவரான மாணிக் லால் டாண்டன், சக அமெக்க மாணவரான மைக்கேல் ஓம்லே ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.
படிப்பு முடிந்ததும் டாண்டன் இந்தியா திரும்பியபோது தன் தந்தை தனக்காக சினிமா ஸ்டூடியோ தொடங்க இருப்பதாகக் கூறி இருவரையும் 1935-ல் இந்தியா அழைத்துவந்தார். அப்போது பெரும்பாலான தமிழ்ப் படங்கள் பம்பாயிலும் கல்கத்தாவிலும் தயாராகிவந்தன. இந்தியா வந்தவேகத்தில் ‘நந்தனார்’ என்ற தமிழ்ப் படத்தை இயக்கினார் டாண்டன்.
‘நந்தனார்’ படத்தில் நண்பனுக்கு உதவினார் டங்கன். ஆனால், மைக்கேல் ஓம்ளே பொறுமையின்றி அமெரிக்கா திரும்பினார். இந்த நேரத்தில் டாண்டனுக்கு மேலும் ஒரு தமிழ்ப் படத்தை இயக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அந்தப் படத்தை இயக்கத் திறமைகளின் மொத்த உருவமாக இருந்த தன் நண்பன் டங்கனை அழைத்துச் செல்லும்படி தன்னை அழைத்த தமிழ்ப் பட முதலாளி ஏ.என்.மருதாச்சலம் செட்டியாரிடம் பரிந்துரைத்தார் டாண்டன். அதன் பிறகு கோயமுத்தூர் வந்து ‘சதி லீலாவதி’(1936) திரைப்படத்தை இயக்கி தமிழ்த் திரையுலகில் புதிய போக்கு உருவாக வழிவகுத்தார் டங்கன்.
பாதையை அமைத்துத் தந்த மேதை
டங்கன் வரும்வரை பரதநாட்டியம் தமிழ் சினிமாவின் முக்கிய அங்கமாக இருந்தது. அதை டங்கனின் துணிவு மாற்றிக்காட்டியது. இந்தியப் பெண்கள் என்றாலே பண்பாட்டைக் கட்டிக் காப்பதில் கண்கள் என்ற பார்வையே ஆதிக்கம் செலுத்தி வந்த அன்றைய சினிமாவில் மதுக் கோப்பைகளைக் கையில் ஏந்திய இந்திய மங்கையர் கவர்ச்சி நடனம் ஆடும் கிளப் டான்ஸ் பாடலைத் தனது முதல் படமான ‘சதி லீலாவதி’யில் அறிமுகம் செய்தார். டங்கனுக்குக் கண்டனங்கள் குவிந்தாலும் ரசிகர்கள் இந்த மாற்றத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.
இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிற்காலத்தில் ஜாம்பவான்களாக மிளிர்ந்த இருவர் தங்கள் முதல் அடியை வைத்தார்கள். ஒருவர் எஸ்.எஸ். வாசன். இவர் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கதையே ‘சதி லீலாவதி’ ஆனது. இந்தப் படத்தில் ஒரு துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ராமச்சந்தர் பின்னாளில் எம்.ஜி.ஆர். எனும் சாகச நாயகனாக உருவெடுத்தார். டி.எஸ். பாலையா, எம்.கே.ராதா ஆகியோரையும் இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார் டங்கன்.
ஒளிப்பதிவு, ஒளியமைப்பு, இயக்கம் நட்சத்திரத் தேர்வு ஆகியவற்றில் மட்டுமல்ல; திரைக்கான நடிப்பையும் மாற்றியமைத்தார். நாடக நடிகர்களிடமிருந்த மிகையான உடல் மொழி, உரக்கப்பேசும் குரல்மொழி இரண்டையுமே களைந்தெறிய விரும்பினார். இதற்காக நாடக பாணி நடிப்பை மாற்றி நடிகர்களின் முகபாவனைகள், விழியசைப்பு, அளவான உடல் மொழி, வசன உச்சரிப்பு என நடிப்பின் பரிமாணத்தைத் திருத்தி அமைத்து தமிழ் சினிமாவுக்குப் புதிய பாதைகள் போட்டுத் தந்தார் இந்த மேதை.
காதல் மன்னனும் கனவுத் தாரகையும்
டங்கனின் நான்காவது படமான ‘அம்பிகாபதி’1937-ல் வெளிவந்தது. எந்தச் சூழ்நிலையிலும் கதாநாயகியுடன் நெருங்கி நடிப்பதில்லை என்ற கொள்கையைக் கடைபிடித்துவந்தார் தியாராகராஜ பாகவதர். அப்படிப்பட்ட பாகவதரையே ‘அம்பிகாபதி’ படத்தில் எம்.ஆர். சந்தானலட்சுமியுடன் நெருக்கமாக நடிக்கவைத்தார் டங்கன். இசையும் காதலும் நாயகன் நாயகியின் எல்லை தாண்டாத நெருக்கமான நடிப்பும் டங்கனின் இயக்கமும் சேர்ந்து மிகப் பெரிய வெற்றிப் படமாக ‘அம்பிகாபதி’யை ஆக்கியன.
இந்தப் படமே எம்.கேடி.யை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. அதுமட்டுமல்ல; அதுவரை ‘பாட்டுக்கொரு பாகவதர்’ என்று கொண்டாடி வந்த திரையுலகம், எம்.கேடி.க்குக் ‘காதல் மன்னன்’ என்ற பட்டத்தை அளித்தது. காதல் காட்சிகளில் தனிக் கவனம் செலுத்திவந்த டங்கன், மாடர்ன் தியேட்டர்ஸுக்காக இயக்கிய ‘பொன்முடி’ படத்தில் பி.வி.நரசிம்ம பாரதி, மாதுரி தேவி இருவரையும் நிஜக் காதலர்கள் போலவே சித்தரித்தது கலாச்சாரக் காவலர்களைக் கிடுகிடுக்கச் செய்தது.
எம்.கே.டி. எனும் இசை நட்சத்திரத்துக்குக் காதல் மன்னன் பிம்பத்தை உருவாக்கிய டங்கன், எம்.எஸ். சுப்புலட்சுமியை ‘மீரா’ படத்தின் மூலம் தமிழகம் தாண்டி தேசமே கொண்டாடும் அகில இந்திய நட்சத்திரமாக்கினார். எம்.எஸ். நடித்த முதல் மூன்று படங்களின் வெற்றிகளைத் தூக்கிச் சாப்பிட்ட ‘மீரா’ வெளியான திரையரங்குகள் அனைத்திலும் அலையலையாக மக்கள் வெள்ளம்.
எம்.எஸ்.ஸின் குரலுக்கும் அவரது வசீகரத்துக்கும் மட்டும் கூடிய கூட்டமல்ல அது. அதுவரை தமிழ் சினிமாவில் இல்லாதவண்ணம், குளோஸ்-அப் ஷாட்களை அர்த்தபூர்வமாக அந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார். திரை முழுவதும் தெரிந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்தார்கள் ரசிகர்கள், இதனால் திரும்பத் திரும்பத் திரையரங்குக்கு வந்தார்கள். சினிமா மீது காதல் கொண்டார்கள். மரியாதைக்குரிய ‘கனவுத் தாரகை’ என்ற பிம்பம் எம்.எஸ்.மீது படிந்தது.
திரையே மொழி
அந்நிய நாட்டின் மொழி, கலாச்சாரம், கலைகள், ரசனை, மக்களின் மனம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டு இயங்கிய டங்கன், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 20-க்கும் குறைவான படங்களே இயக்கியிருந்தாலும், “எனக்கு மொழி தடையில்லை; திரையே என் மொழி” எனத் தமிழ் சினிமாவுக்கு ஊட்டம் தந்தார். இந்த முன்னோடி இயக்குநர் அமெரிக்கா திரும்பிய பிறகு பல ஆங்கிலப் படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்கினார். டங்கன் தனது 92-வது வயதில் மறையும் முன் தமிழகம் வந்தார். அப்போது காதலுடன் தமிழ்த் திரையுலகம் அவரை வரவேற்று மரியாதை செய்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago