வசதிகள் அதிகமற்ற கிராமத்து மக்களுக்கு பண்ணையார்தான் (ஜெயப் பிரகாஷ்) எல்லாமே. கேட்கும்போது உதவி மட்டுமல்ல, தன் வீட்டில் டி.வி., போன் போன்ற எல்லாப் பொருட்களையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் அளவுக்குப் பாசக்காரப் பண்ணையார்.
அவர் நண்பர் வெளியூர் செல்லும்போது பத்மினி காரைப் பண்ணையார் வீட்டில் விட்டுச் செல்கிறார். பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல ஊரே திரண்டு வந்து பண்ணையாரிடம் உதவி கேட்கிறது. 'வண்டியை எடுங்கள்' என்று பண்ணையார் உத்தரவிடும்போது காரை ஒட்ட ஆளில்லாமல் தவிக்கிறார்கள். டிராக்டர் ஓட்டத் தெரிந்த முருகேசனை (விஜய் சேதுபதி) அழைத்து வருகிறார்கள்.
அதன் பிறகு கிராமத்தின் நல்லது கெட்டது அனைத்திலும் காரும் ஒன்றாகிவிடுகிறது. காரின் மீது பண்ணையாருக்கும் முருகேசனுக்கும் அளவு கடந்த பாசம் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு கட்டத்தில் காரைப் பிரிய நேர்கிறது. அது மீண்டும் வந்ததா, இல்லையா என்பதுதான் மீதிக் கதை.
குறும்படமாக வெளிவந்து பாராட்டைப் பெற்ற நம்பிக்கையின் அடிப்படையில் படத்தை அருண் குமார் இயக்கியிருக்கிறார். அடிதடி, வெட்டு, குத்து, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் படம் எடுத்துள்ளதற்காகவே அவரைப் பாராட்டலாம்.
கார் மீது மோகம் என்பதைத் தாண்டி அன்பைப் பொழிகிறார்கள் பண்ணையாரும் முருகேசனும். காருக்கு ஒன்று என்றால் உருகுகிறார்கள். தன் திருமண நாளுக்குள் காரை ஓட்டக் கற்றுக்கொண்டு மனைவியைக் கோயிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது பண்ணையாரின் ஆசை. கணவன் ஓட்டினால்தான் காரில் ஏறுவேன் என்பது மனைவியின் பிடிவாதம். கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தால், பண்ணையார் தன்னைக் காரிடமிருந்து பிரித்துவிடுவார் என்பது முருகேசனின் அச்சம். இந்தச் சிக்கலை நன்றாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். மூவரும் இதை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதியின் ஜோடி ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது வருவதும் போவதுமாகஇருக்கிறார். இளம் ஜோடி படத்தில் இருந்தாலும், நடுத்தர வயதைக் கடந்த பண்ணையாருக்கும் அவர் மனைவிக்குமான காதலை இளம் இயக்குநர் அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார். உடலின் ஈர்ப்பு தவிர்த்த காதலைத் தமிழ்த் திரையில் பார்ப்பது அரிது. அத்தகைய அரிதான காதலின் சிறப்பான பதிவு இது.
பண்ணையாரின் திருமண நாளுக்கு முன்பாகவே கார் கைவிட்டுப் போவதை அடுத்துச் செய்வதறியாது தவிப்பதில் ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பண்ணையாரின் வீட்டு வேலைக்காரனாகவும், காருக்கு கிளீனராகவும் வரும் பால சரவணன், பீடை என்ற கதாபாத்திரத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
கதாநாயகி தோன்றும் காட்சியை முடிந்த வரை அழகாகவும் சிரித்த முகத்துத்துடனும், மங்களகரமாகவும் அமைக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில், இழவுக் காட்சியில் அழுகை முகத்துடன் காட்டி சென்டிமெண்டை உடைத்திருக்கிறார் அருண்குமார்.
ஒரு பக்கம் இப்படி செண்டிமெண்டை உடைத்த அவர், இன்னொரு புறம் மூட நம்பிக்கையை காமெடி என்ற பெயரில் தூக்கிப் பிடித்திருப்பது முரண். பீடை.. பீடை என்று படம் முழுக்க ஒருவரைச் சொல்கிறார்கள். அவர் 'பீடை' தான் என்பதைக் காட்சிகளின் மூலம் நிரூபிக்கிறார் இயக்குநர். கடைசியில் 'நான் தொட்டால் எதுவும் விளங்காது' என்று அந்த கதாபாத்திரம் மூலமே சொல்ல வைத்திருக்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் 'எங்க ஊரு வண்டி', 'உனக்காகப் பொறந்தேனே' ஆகிய பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசையமைப்பிலும் தேர்ந்த இசைக் கலைஞராக மின்னியிருக்கிறார்.
கார் ஓட்டக் கற்பதற்காக எப்போதும் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது, பண்ணையார் மகளின் செயற்கைத்தனமாக நடவடிக்கைகள் போன்றவை அலுப்பைத் தருகின்றன. இரண்டாம் பாதி இழுக்கிறது. கிராமத்துச் சூழல் உள் முரண்கள் ஏதுமில்லாமல் தட்டையாகச் சித்தரிக்கப்பட்டிருப்பது திகட்டுகிறது. இப்படிச் சில வழுக்கல்கள் இருந்தாலும், பண்ணையாரும் பத்மினியும் நிஜ மான உணர்வுகளின் இனிய சங்கமம்.