திரை விமர்சனம்: சண்டி வீரன்

By இந்து டாக்கீஸ் குழு

இரண்டு ஊர்களுக்கிடையே இருக்கும் பகை, ஒரு சிலரின் சுயநலத்தால் குடிநீருக்கு வரும் சோதனை ஆகியவற்றோடு, ஒரு காதல் கதையை இணைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

தஞ்சை மாவட்டத்தில் அருகருகே உள்ள இரண்டு கிராமங்கள்தான் கதைக் களம். சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும் பொறுப் பில்லாத இளைஞர் அதர்வா, இங்கேயும் அப்படியே இருக்கிறார். பிழைக்கும் வழி யைப் பார்ப்பதைவிட, அந்த ஊரில் ரைஸ் மில் நடத்தும் லாலின் மகள் ஆனந்தியைக் காதலிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனந்தியும் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். இந்த நேரத் தில்தான் பக்கத்து ஊர் மக்களின் குடிநீர் பிரச்சினை எந்தளவுக்கு அவர்களை பாதித்து இருக்கிறது என்பதையும், அதற்கு முக்கியக் காரணம் தன் காதலியின் தந்தை லால் கொண்டிருக்கும் வன்மம்தான் என்பதையும் அறிகிறார் அதர்வா. பக்கத்து ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் அதர்வாவைத் தன் விரோதியாகப் பார்க் கிறார் லால். போதாக்குறைக்கு தனது மகளின் காதல் விவகாரமும் அறிந்து கொதித்துப்போகிறார். குளத்துப் பிரச்சினை இரு ஊர்களுக்கும் இடையே கலவரமாக வெடிக்கும் சூழல் உருவாகிறது. அதைத் தடுத்து நிறுத்த அதர்வா என்ன செய்கிறார்? அவர் காதல் கைகூடியதா?

சிங்கப்பூர் சிறையில் மொட்டை அடிக்கப் பட்ட நாயகன் பீதியூட்டும் பின்னணி இசை யுடன் கட்டி இழுத்து வரப்படுகிறார். அவருக் குப் பிரம்படி தரப்படுகிறது. நாயகன் மீது அனுதாபம் ஏற்படுத்தும் இந்தக் காட்சி நாயகன் ஊருக்குத் திரும்பியதும் படு பயங் கரமான கேலிக்கு உள்ளாகிறது. சிங்கப் பூரில் சட்டவிரோதமாகத் தங்கி அடி வாங்கிக்கொண்டு வருவது அந்த ஊருக் குப் பழக்கம்தான் என்பது மிக சகஜமாக காட்சிகளில் வெளிப்படுகிறது.

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பிட்சுக்குப் பக்கத் தில் இரண்டு குச்சிகள் நடப்பட்டுள்ளன. அவற்றுக்குக் குறுக்கே இன்னும் இரண்டு குச்சிகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு மொபைல் போன் பொருத்தப்பட்டிருக்கிறது. அதில் வீடியோ கேமரா ஓடிக்கொண்டிருக் கிறது. பக்கத்தில் ‘தேர்ட் அம்பேர்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

கிராமங்கள் தங்கள் சுயத்தை இழந்து, கிரிக்கெட், மொபைல் போன் உட்பட நகர நாகரிகத்தின் சகல அடையாளம் மற்றும் அவசரங்களுடனும் மாறிப் போயிருப்பதை நுட்பமாகப் பதிவுசெய்வதில் தன் தேர்ச் சியை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சற்குணம். பம்பு செட்டில் குளிக்கும்போது பெண்கள் பேசிக்கொள்வது, ஊரில் நடக்கும் விளை யாட்டுப் போட்டிகள் என்று பல காட்சிகளில், கிராமங்களின் மாறாத தன்மைகளும் உயிர்ப்போடு இருக்கின்றன. படம் முழுவதும் வியப்புகளை ஏற்படுத்திக்கொண்டே இருக் கிறார். ஆனால் ஆதார அம்சத்தில் கூடுதல் வலு சேர்க்கத் தவறியிருக்கிறார்.

ஒரு ஊரின் மக்கள் பக்கத்து ஊருக்கு எதிராக இவ்வளவு மோசமாக நடந்துகொள் கிறார்கள் என்றால் அது மிகுந்த நம்பகத் தன்மையோடு சித்தரிக்கப்பட வேண்டாமா? இரண்டு கிராமங்களும் இந்தியப் பெருங்கடலின் நடுவே இருக்கும் தீவுகளா என்ன? உள்ளாட்சி அமைப்புகளைத் தாண்டி மாவட்ட நிர்வாகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என்று எதுவுமே இல்லையா, இதைத் தட்டிக் கேட்பதற்கு? அப்படியே தட்டிக் கேட்க ஒரு போலீஸ் அதிகாரி வந்தாலும், அவரை இத்தனை அலட்சியத்தோடு காயப்படுத்தி, பயமுறுத்தி அனுப்பிவிட முடியுமா? (ஆனாலும், போலீஸ் ஜீப்பை ஊர்க்காரர்கள் உருட்டி தண்ணீருக்குள் தள்ளுவது சரியான திடுக்!)

திரைக்கதை ஈர்க்கவே செய்கிறது. காதல் காட்சிகள், வாழ்வியல் பதிவுகளில் புதுமையான பார்வையும் ஈர்க்கிறது. மோதலுக்கான முஸ்தீபுகளும், அவற்றை முறியடிக்க அதர்வா மேற்கொள்ளும் முயற்சிகளும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. முகம் சுளிக்க வைக்கும் ‘கவர்ச்சி’க்கு இடம் தராதது இன்னொரு நல்ல விஷயம்.

தஞ்சை கிராமங்களின் வாழ்வையும், பேச்சு வழக்கையும் அச்சு அசலாகச் சித்தரிக்கும் இயக்குநர், வன்முறைப் போக்கை இத்தனை விவரமாகக் காட்டி இருக்க வேண்டுமா? அதர்வாவையும் அவரது நண் பரையும் தவிர கிராமத்தின் மற்ற ஆண்கள் எல்லோரையுமே, வாய்ப்பு வந்தால் அரிவாளும், நாட்டு வெடிகுண்டும் தூக்குபவர்களாக காட்டியிருக்கிறார். அதோடு, ஊரே கலவரத்துக்குத் தயாராகிக்கொண் டிருக்க, அது நன்றாகத் தெரிந்திருந்தும் காதலர்களை நடு ராத்திரியில் டூயட் பாட வைத்திருப்பது பொருந்தாத கற்பனை.

அதர்வா மிகையில்லாமல் நடித்திருக்கிறார். காதல், விளையாட்டுத் தனம், பக்கத்து ஊரின் பிரச்சினைக்காகக் களம் இறங்கும் தீவிரம் என்று ரொம்பவே துறுதுறு.. ஆனந்தியின் தோற்றமும் குறும்புத்தன மான நடிப்பும் மென் சாரல்கள். லால் காட்டும் உக்கிர நடிப்பும் பலே காரம். என்றாலும் பல படங்களில் அவரை இதேபோல் பார்த்தாகிவிட்டது.

புதுமுகம் அருணகிரியின் இசையில் மூன்று பாடல்களும் கேட்க நன்றாக உள்ளன. ‘தாய்ப்பாலும் தண்ணீரும்’ என்ற பாடல் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சபேஷ் முரளியின் பின்னணி இசை பரவாயில்லை. மோதல் காட்சிகளில் வாத்தியங்களின் இரைச்சலைக் குறைத்திருக்கலாம். ஏ.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் உயிரோட்டத்தைக் கூட்டுகிறது.

வாழ்வாதாரப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு, அதையொட்டிய பதற்றத்தையும் பரிதாபத்தையும் பார்ப்பவர்கள் மனதுக்குள் பதிய வைப்பதில் கொஞ்சம் தடுமாறி இருந்தாலும்... கலகலப்பிலும் வாழ்வியல் பதிவுகளிலும் படத்தைக் காப்பாற்றி இருக்கிறார் சற்குணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்