இறந்து பிழைத்த இசக்கி அண்ணன்
பெருந்துறையில் வங்கியில் பணியாற்றியபோது சக ஊழியனாக ராஜு அறிமுகம் ஆனான். சேலம் ஆத்தூருக்கு அருகில் இருக்கும் கங்கவல்லியைச் சேர்ந்தவன். அந்த ஊரைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறான்.
கங்கவல்லி கொல்லிமலை அடிவாரத்துச் சிற்றூர். நிறைய குடிசை கள். சில செங்கல் வீடுகள். மக்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறாதவர்கள். அன்றாடம் காய்ச்சிகள். சில படித்த ஆண்களை மட்டும் அலுவல கங்கள் தத்து எடுத்திருந்தன.
அடிவாரத்திலிருந்து மேலேறினால் காட்டுப் பன்றிகள், காட்டெருமைகள், முயல்கள், கரடிகள், நரிகள் நிறைந்த அடர்ந்த காடு. ரேஞ்சர் கண்ணில் படாமல் பெண்கள் சுள்ளிப் பொறுக்கி விற்பார்கள். ஆண்கள் சில இரவுகளில் வேட்டைத் துப்பாக்கிகளுடன் ரகசிய மாகக் காட்டுக்குள் ஊடுருவி முயல், காட்டுப் பன்றி, காட்டெருமை, அதிர்ஷ்டமான சமயங்களில் கரடியைக் கூட வேட்டையாடி தோளில் சுமந்து வருவார்கள். மாமிசம் கூறு போடப்பட்டு கிராமத்தின் அத்தனை அடுப்புகளிலும் கொதிக்கும். கங்கவல்லியையும், காட்டையும் ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா என்றிருந்தது.
ஒருநாள் காலை 11 மணி. ராஜுவை போன் அழைத்தது. ரிசீவரில் ராஜு, “நெஜம்ம்மாவா? உடனே ஊருக்கு வர்றேன்…’’ என்று வியப்புடன் கூவினான்.
என்னிடம் ஓடி வந்தான். “இருவது வருஷத்துக்கு முன்னால செத்துப் போன இசக்கி அண்ணன் உயிரோட திரும்பி வந்திருக்காராம்...” என்றான்.
பேருந்தில் கங்கவல்லி நோக்கிச் சென்ற போது ராஜு, இசக்கி அண்ணனைப் பற்றிச் சொன்னான். “நான் ரெண்டாவது படிக்கிறப்ப இசக்கி அண்ணன் எனக்குப் பழக்கமானாரு. ஊர்ப் பசங்க அத்தனைப் பேருக்கும் அண்ணனைப் புடிக்கும். காட்டுல கைடா வேலை பாத்தாரு. எப்பவும் காக்கிச் சட்டை, காக்கி டிராயருதான். ஆபீஸருங்க வந்தா, கெஸ்ட் ஹவுஸுக்குக் கூட்டிட்டுப் போவாரு. ருசியா சமைச்சிக் கொடுப்பாரு. ஜீப் ஃபுட்போர்டுல நின்னுக்கிட்டு அருவிக்குக் கூட்டிட்டுப் போவாரு. கரடி, காட்டெருமை எல்லாம் காட்டுவாரு. எங்களை உக்கார வெச்சி கதை சொல்வாரு. பனம் பழம், பனங்கெழங்கு சுட்டுத் தருவாரு. பனை ஒலைக் காத்தாடி செஞ்சித் தருவாரு.
அண்ணனுக்கு பானு அக்காவோட கல்யாணம் ஆச்சி. பானு அக்கா அவ்ளோ அழகு! மூணு மாசம் கூட ஆயிருக்காது. ஒருநாள் காட்டுக்குள்ள வேட்டைக்குப் போன இசக்கி அண்ணன் திரும்பி வரவே இல்ல. அஞ்சாவது நாள் அவர் பொணம்தான் கெடைச்சுது.
சிறுத்தையா, கரடியா… எது அடிச்சதுன்னு தெரியல. கழுகும், நரியும் தின்னதுல மூஞ்சி மொகரை எதுவும் மிச்சம் இல்ல. காக்கிச் சட்டையையும், டிராயரையும், துப்பாக்கியையும் வெச்சித்தான் அடையாளம் கண்டுபுடிச்சோம். காட்டுலயே பொதைச்சோம். அதுக்கப்புறம் பானு அக்காவை டவுன்ல வேலை செய்ற முத்தண்ணன் கட்டிக்கிட்டு, சேலத்துக்குக் கூட்டிட்டுப் போனாரு. போன வருஷம்தான் அக்கா கிட்னி ஃபெயிலியர்ல செத்துப் போச்சி. இப்ப என்னடான்னா… இசக்கி அண்ணன் உயிரோட இருக்காராம்...”
கங்கவல்லி! நரைத்த முடி முன் நெற்றியில் புரண்ட அவரைப் பார்த்து விட்டு ராஜு வியப்பின் எல்லைக்குப் போனான். “இசக்கி அண்ணே” என்று அவரைக் கட்டிப் பிடித்தான்.
“எப்படிண்ணே.?”
இசக்கி அண்ணன் ஒரு தனிமைப் பொழுதில் சாராயத்தைச் சப்பியபடி, சொன்னார்:
“நான் செத்திருந்தாத்தான, ‘இப்ப எப்படி உயிரோட வந்தேன்’னு கேக்கலாம். அது ஒண்ணுமில்ல மாப்ளே… பானுவைக் கட்டுனதிலேருந்து அது மூஞ்சைத் தூக்கியே வெச்சிட்டிருந்தது. துருவித் தோண்டி விஷயத்தைத் தெரிஞ்சிக்கிட்டேன். அதுக்கு முத்து மேல பிரியம். அவன் கூடத்தான் அது சந்தோஷமா இருக்கும்னு தெரிஞ்சுது. இப்ப என்ன பண்றது?
அன்னிக்கு வேட்டைக்குப் போனப்ப, கைதி டிரெஸ்ல இருந்த ஒருத்தனைக் கரடி அடிச்சி செத்துக் கெடந்தான். ரெண்டு மூணு கழுகுங்க ஒடம்பைக் கொத்திக் கொதறிக்கிட்டு இருந்ததுங்க. யோசிச்சேன். என் டிரெஸ்ஸை அவனுக்கு மாட்டினேன். துப்பாக்கியை அங்கயே போட்டுட்டு வேற பக்கமா எறங்கி முதுமலைக்குப் போய்ட்டேன். அப்பப்ப வந்து பானுவை அவளுக்குத் தெரியாமப் பாத்துட்டுப் போய்டுவேன். இப்ப அவளே போய்ட்டா. இனிமே எதுக்குச் செத்தவனா இருக்கணும்னு திரும்பி வந்துட்டேன். ஊர்ல வேற கதை சொல்லியிருக்கேன். போட்டு ஒடைச்சிராதே...’’ என்றபோது, இசக்கி அண்ணனின் குரல் தழுதழுத்தது.
‘180’
திரைப்படத்தில் கதாநாயகன் அஜய்க்கு (சித்தார்த்) மரணம் துரத்தும் புற்று நோய். செய்தி அறிந்து அவனது காதல் மனைவி ரேணுகா (ப்ரியா ஆனந்த்) துடித்துப்போவாள். அவன் பாதிக்கப்பட்டதை விட அவள்தான் நிறைய பாதிக்கப்படுவாள். சாப்பிட மாட் டாள். வேலைக்குப் போக மாட்டாள். காதலி நரக வாழ்க்கை வாழ்வது கண்டு அஜய் துடிப்பான். அவள் முகத்தில் எப்படியாவது சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்று பரிதவிப்பான்.
அதனால், தான் நதி வெள்ளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி விட்டு, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிடுவான். ஏறக்குறைய 6 மாதம் கழித்து மீண்டும் அமெரிக்காவுக்குச் சென்று, அவள் அறியாமல் அவளைப் பார்ப்பான். ரேணுகா துக்கத்திலிருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கை வாழ்வதையும், அவள் முகத்தில் மீண்டும் சிரிப்பு மலர்ந் திருப்பதையும் மனநிறைவுடன் பார்த்து விட்டு, அவள் அறியாமலேயே அவளிட மிருந்து மீண்டும் விலகிப் போவான்.
இந்தத் திரைப்படத்தைப் பார்த்த பெண்கள் அனைவருக்கும் அஜய்யை மிகவும் பிடித்துப் போனது. காதல் மனைவிக்காக அவன் செய்த தியா கத்தை நெகிழ்வுடன் பாராட்டினார்கள்.
எங்களுக்கோ இசக்கி அண்ணனின் சிரித்த முகம்தான் நெஞ்சில் நிழலாடியது.
- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிரிந்துகொள்ள: dsuresh.subha@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago