திருநெல்வேலி, கோவை மாதிரி தனித்த வட்டார பாஷை கொண்ட ஊர் கேரளத்தின் அங்கமாலி. எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஒரு சி கிளாஸ் டவுன். அந்த நகரத்தின் பாஷை, கிறிஸ்துவப் பள்ளித் திருவிழா, பிரசித்திபெற்ற உணவுகள், கோடிகள் புரளும் பன்றி வியாபாரம் போன்ற அம்சங்களைப் பின்னணியாகக்கொண்டு லிஜோ ஜோஸ் இயக்கியுள்ள படம் ‘அங்கமாலி டைரீஸ்’.
அங்கமாலியில் நடந்த நிஜக் கதைகளின், நடக்காத தொன்மக் கதைகளின் தொகுப்புதான் ‘அங்கமாலி டைரீஸ்’ எனலாம். அங்கமாலிக்காரரும் மலையாள வில்லன் நடிகருமான செம்பன் வினோத் ஜோஸ் கதை எழுதியிருக்கிறார். இயக்குநர் லிஜோ ஜோஸ் சாலக்குடியைச் சேர்ந்தவர். இருவரும் நண்பர்கள். இந்த இருவரும் தங்கள் ஊர்க் கதைகளைப் பேசிக்கொள்வதுபோலத்தான் படத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள்.
இது வரை நாயர், மேனன், நம்பூதிரி, சிரியன் கிறிஸ்டியன் என உயர் குடிகளின் வாழ்க்கையைத்தான் பெரும்பாலும் மலையாள சினிமா படம்பிடித்துள்ளது. அடித்தட்டு மக்களைப் பற்றிய படம்கூடப் பெரும்பாலும் மேல்தட்டுப் பார்வையில்தான் உருவாக்கப்பட்டுவந்தது. இந்தப் படம் அவர்களுக்கு உள்ளே இருந்து வந்துள்ளது; புலம்பலாக அல்லாமல் ஒரு கொண்டாட்டமாக எழுந்துள்ளது.
‘தர’ லோக்கல்
அங்கமாலியில் வாழ்ந்த ‘அப்பாணி’ ரவி, ‘யூகிளாம்ப்’ ராஜன், ‘டென் எம்.எல்.’ தோமஸ், ‘மரங்கொத்தி’ சிஜோ, ‘காடு’ பீமன் போன்ற அசல் மனிதர்களையே கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடன் வின்சென்ட் பெப்பே, வர்க்கி, குஞ்சோட்டி போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களை மோதவிட்டிருக்கிறார்கள். விளம்பரத்தில் சொன்னதுபோல ‘கட்ட லோக்கல்’ (தர லோக்கல்) படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.
முதல் காட்சியிலேயே கிறிஸ்து, அனுமார், கன்னியாஸ்திரி, மேரி மாதா வேடத்துடன் பாரில் மது அருந்திக் கொண்டிருக்கிறார்கள் பள்ளி அங்காடி நண்பர்கள். உள்ளே வந்து நடிகை வேடத்தில் இருப்பவனிடம் முத்தம் கேட்கிறான் எதிர் அணி நண்பன். கொடுக்கப்படும். கிறிஸ்து வேடமிட்டவனிடம் ஒரு பஃப் கேட்பான். கொடுக்கப்படும். ஆனால், கன்னியாஸ்திரி வேடமிட்டவனின் கையைப் பிடித்து முத்தம் கேட்டதும் அடி கொடுக்கப்படும். முதல் அடி கிறிஸ்து வேடமிட்டவனிடமிருந்து வரும். பின்னணியில் ‘இளமை இதோ இதோ’ பாடலின் இசை மட்டும் ஒலிக்கிறது.
86 புதுமுகங்கள்
அங்கமாலியின் ‘பன்றி வரட்டியது’, ‘முருங்கைக்காய் பன்றிக் கறி’ போன்ற உணவு வகைகள் கேரளப் பிரசித்தம். மரவள்ளிக் கிழங்குடன், பன்றியை வறுத்துப் புது உணவு வகையையும் அங்கமாலிக்காரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவை மட்டுமல்ல புரோட்டா பத்திரி, வர்க்கீஸ் கடை ஆம்லட், குஞ்சுகடை கப்பைக் கிழங்கு என உணவுத் திருவிழாவையே படத்தில் நடத்தியிருக்கிறார்கள்.
காதலின் மகத்துவத்தைச் சொல்லும்போது, ‘குஞ்சுவின் கடையில் அந்தக் காலத்தில் ஹிட் காம்பினேஷனாக இருந்த கப்பைக் கிழங்கும் முட்டையும் மாதிரி இருந்தோம்’ என்கிறான் கதாநாயகன்.
கோட்டயம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் பன்றிக் கறி வியாபாரம் நடந்தாலும் அங்கமாலி பன்றிக் கறி விசேஷமானது. இந்தப் பன்றிக் கறித் தொழில் வாரத்துக்கு ரூ.5 கோடிக்கு மேல் புழங்கக்கூடியது. இந்தத் தொழிலைச் செய்யும் அப்பாணி ரவி, யூகிளாம்ப் ராஜன் ஆகிய இருவருக்கும் ‘டென் எம்.எல்’ தோமஸ் தலைமையில் பன்றி வியாபாரம் தொடங்கும் வின்சென்ட் பெப்பே, வர்க்கீ உள்ளிட்ட நான்கு இளைஞர்களுக்குமான மோதல்தான் படத்தின் மையம்.
முழுக்க முழுக்கப் புதுமுகங்களைக் கொண்டு படத்தைத் துணிச்சலாக எடுத்திருக்கிறார் இயக்குநர். 86 புதுமுகங்கள். அவர்கள் அனைவரும் அங்கமாலி, சாலக்குடியைச் சேர்ந்தவர்கள் தாம். அப்பாணி ரவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மட்டும் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். வின்சென்ட் பெப்பே கதாபாத்திரம் ஏற்றுள்ள ஆண்டனி வர்கீஸ்தான் கதாநாயகன்.
அவரின் குரலில்தான் படமும் விவரிக்கப்பட்டுள்ளது. கதாநாயகன்தானே தவிர அவருக்கு எந்த அசாத்திய சக்தியும் இல்லை. அடி கொடுப்பதுபோல வாங்கவும் செய்கிறார். காதலிப்பதுபோல் கைவிடவும் படுகிறார். கோபம் வருவதுபோல் செல்லச் சிரிப்பும் சிரிக்கிறார். கதாநாயகனின் இந்தப் பண்புகள் படத்துக்கும் பொருந்தக்கூடியவை.
பாடல் பண்டிகை 11 நிமிட கிளைமேக்ஸ் காட்சியை ஒரே ஷாட்டாக எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரீஸ் கங்காதரன். ஒரு பெரிய கிறிஸ்துவத் திருவிழாவில் பல கதாபாத்திரங்கள் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லக்கூடிய இந்தக் காட்சியை ஜிம்பல் உதவியுடன் மெச்சத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார். படத்தின் மற்றொரு பலம் பிரஷாந்த் பிள்ளையின் நாட்டார் இசையிலான பாடல்கள். அவை படம் முழுவதையும் பண்டிகையாக மாற்றியிருக்கின்றன.
இந்தப் படத்தின் மையப் பகுதி, ‘சிட்டி ஆஃப் காட்’-லிருந்து ‘பொல்லாதவன்’, ‘சுப்பிர மணியபுரம்’ வரை பல படங்களை நினைவுபடுத்தக்கூடியது. சமீபத்தில் வெளியாகி புகழ்பெற்ற மலையாளப் படமான ‘கம்மாட்டிப்பாட’த்தின் சாயலும் இந்தப் படத்துக்கு உண்டு. ஆனால், இந்தப் படங்களின் எந்த விதமான தீவிரத்தன்மையையும் இந்தப் படம் எடுத்துக்கொள்ளவில்லை. பிழைப்புதான் இந்தப் படத்தின் தலையாய பிரச்சினை. கொண்டாட்டம்தான் படத்தின் செய்தி. “கொஞ்சம் பன்னிக்கறி சாப்ட்டு ரெண்டு ஸ்மால் அடிச்சி அப்படியே பிரச்சினையில்லாம போனா போதும்’ என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தி இந்தப் படம் முடிகிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago