தற்காப்புக் கலையைக் கதைக்களமாக்கும் படங்களை உலகம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த காலம் ஒன்று இருந்தது. புரூஸ் லீக்குப் பிறகு தனித்துவமான தனது குங்க்பூ பாணி சண்டைக் காட்சிகளால் உலகத் திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருப்பவர் ஜாக்கி சான். திரைப்படத் துறையில் இவரது சாதனைகளைக் கவுரவிக்கும் வகையில் இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அகிரா குரோஸோவா, சத்யஜித் ராய், வால்ட் டிஸ்னி உள்ளிட்ட பிரபலங்கள் இவ்விருதை ஏற்கெனவே பெற்றிருப்பவர்கள். அந்த வரிசையில் வைத்துப் பார்க்கும்போது இந்த விருதின் முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.
கவுரவத்தின் பின்னால் காயங்கள்
திரைப்படங்களில் ரசிகர்களை மயக்கும் பயங்கரமான சண்டைக் காட்சிகளுக்காக எல்லாவகையான சவால்களையும் எதிர்கொள்வதை விருப்பத்துடன் செய்தவர் ஜாக்கிசான். இதனால் இவரது உடம்பு முழுக்கக் காயங்களும் பரிசுகளாகக் கிடைத்துள்ளன. ஆனால் ஒரு திரைப்படத்துக்காக பட்ட அத்தனை சிரமங்களும் அந்தப் படம் ரசிகர்களைச் சந்தோஷப்படுத்துவதைப் பார்க்கும்போதும் அது பரவலான பாராட்டைப் பெறும்போதும் மறைந்துவிடும் என்பார்கள். அதனால்தான் தனக்குத் தற்போது கிடைத்திருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது குறித்த தனது உளப்பூர்வ மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆஸ்கர் விருது பெறும் முதல் சீன நடிகர் தான் என்பதிலும் அவருக்குப் பெருமிதமே.
பொதுவாகவே விருதுப் பட்டியல்களைக் கலைப்படங்களில் நடிக்கும் நடிகர்களே கைப்பற்றும் சூழலில் உலக அளவில் ஆக்ஷன் படங்கள் வாயிலாகவே பெருந்திரளான ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஜாக்கிசானுக்கு இது கிடைக்க வேண்டிய கவுரவமே. ஆக்ஷன் ஹீரோவாக வசூல் சாதனை படைக்கும் ஜாக்கி சான் தற்காப்பு கலைகளில் கரை கண்டவர். விருதுகளால் பலருக்குக் கவுரவம் கிடைப்பதுண்டு ஆனால் வெகு சிலர் மட்டுமே விருதுக்குக் கவுரவத்தைச் சேர்ப்பார்கள். அந்தப் பட்டியலில் ஜாக்கி சானுக்கு பிரதான இடமுண்டு. இவரது வாழ்க்கையில் இவரடைந்திருக்கும் உயரத்துக்கான பாதை முழுக்க ரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் எழவாய்ப்பில்லை.
தனித்துவம் மிக்க கலைஞர்
ஜாக்கி சானை விடவும் வேகமாக குங்ஃபூ சண்டை செய்யும் நடிகர்களும் மார்ஷியல் ஆர்ட் வீரர்களும் இன்று திரைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் ஜாக்கி சான் கொண்டாப்படுவது அவரது நகைச்சுவை கலந்த ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் அவற்றில் அவர் மேற்கொள்ளும் கடும் சிரத்தைகளுக்காகவும்தான்.
இப்படிச் சண்டையுடன் அவர் தூய நகைச்சுவையை இணைக்கக் காரணமாக இருந்தவர் அமெரிக்க நடிகர் பஸ்டர் கீடோன் என்று நினைவு கூர்கிறார் ஜாக்கி. பஸ்டர் கீடோன் இயக்கிய ‘த ஜெனரல்’ போன்ற படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைச்சுவை கலந்த சண்டைக் காட்சிகளே தனக்கு உத்வேகம் அளித்ததாக சான் தனது பேட்டிகளில் குறிப்பிடத் தவறியதேயில்லை.
சீனாவின் உள்நாட்டுக் கலவரம் காரணமாக ஹாங்காங்குக்கு அகதிகளாக வந்துசேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ஜாக்கிசான். குழந்தை நட்சத்திரமாகவே திரைப்படங்களில் அறிமுகமாகி இன்றுவரை திரைத் துறையில் தொடர்ந்து பங்களித்துவருகிறார். ஆரம்ப காலத்தில் புரூஸ்லீயின் ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபரி’, ‘எண்டர் தி டிராகன்’ ஆகிய படங்களில் வெறும் ஸ்டண்ட் நடிகராக முகம் காட்டினார்.
தொடர்ந்து படங்களில் அவர் தனி சண்டைக் காட்சிகளில் தனது திறமையை எல்லாம் காட்டியபோதும் அவை பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை. அதனால் வணிகரீதியில் அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின. ரசிகர்களை அவரது சண்டைக் காட்சிகள் ஆரம்பத்தில் பெரிதாகக் கவராவிட்டாலும் வில்லி சான் என்னும் தயாரிப்பாளரைக் கவர்ந்துவிட்டன, அவரது படங்களில் ஜாக்கிசானுக்கு வாய்ப்பளித்தார்.
முதல் பெரிய வெற்றி
வில்லி சான் தயாரித்து, 1978-ல் வெளியான ‘ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ’ படத்தில், தனது சண்டைக் காட்சிகளை உருவாக்குவதில் ஜாக்கி சானுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தார் அதன் இயக்குநர் யுயென் வூ-பிங். அந்தப் படத்தில் ஜாக்கி சான் வெளிப்படுத்தியிருந்த நகைச்சுவை கலந்த குங்க்பூ சண்டைக் காட்சிகள் ஹாங்காங் ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சியைத் தந்தன. அதன் பின்னர் வெளியான ‘ட்ரங்கன் மாஸ்டர்’ படமும் வணிகரீதியான முதல் வெற்றியைப் பெற்றது.
இதன் பின்னர் தான் சண்டைக் காட்சிகளில் நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட், மனிதநேயம் போன்ற கலவையான விஷயங்களே தன் படத்தில் ரசிகர்களைக் கவர்கின்றன என்பதை உணர்ந்து தொடர்ந்து அதே போன்ற படங்களை உருவாக்கத் தொடங்கினார். இதே காரணங்களால்தான் குழந்தைகளுக்கு பிடித்தமான ஆக்ஷன் நடிகராகவும் ஜாக்கி தொடர்கிறார்.
ஹாலிவுட்டில் ஆதிக்கம்
அமெரிக்க நடிகர்களே ஆதிக்கம் செலுத்தும் ஹாலிவுட் பட உலகில் காலடி எடுத்துவைத்தவுடன் ஜாக்கி சான் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டுவிடவில்லை. அங்கும் தொடக்கத்தில் அவர் தோல்வியையே எதிர்கொண்டார். 1985-ல் வெளியான ‘த புரொடக்டர்’ படம் வசூல்ரீதியான வெற்றியைப் பெறவில்லை. ஆகவே அதன் பின்னர் அவர் அதிகமாக ஹாலிவுட்டில் கவனம் செலுத்தாமல் ஹாங் காங் படங்களிலேயே கவனத்தைச் செலுத்தினார்.
ஆனாலும் அவரது அசாத்திய சண்டைக் காட்சிகளால் 1995-ல் வெளியான ‘ரம்பிள் இன் தி ப்ரான்க்ஸ்’ படத்தின் மூலம் ஹாலிவுட் ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார். இதன் பின்னர், சானுக்கு ஹாலிவுட் கதவுகள் அகலத் திறந்தன. ‘போலீஸ் ஸ்டோரி 3: சூப்பர் காப், ரஷ் ஹவர் எனத் தொடர்ந்து இவரது படங்களுக்கு அமெரிக்காவில் அமோக வரவேற்புக் கிடைக்கத் தொடங்கியது. அந்த வரவேற்புதான் இப்போது இவரை ஆஸ்கர் விருதில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ஜாக்கி சான் சண்டை வழியே பகை வளர்த்தவர் அல்ல; மாறாக மனித நேயம் வளர்த்தவர்! அந்த அடிப்படையில் தகுதியான கலைஞருக்குக் கொடுத்ததன் மூலம் ஆஸ்கருக்குக் கவுரவம் கூடியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago