பாலிவுட் தொடங்கி இந்திய அளவில் போட்டிப் படங்கள் பெரிதாக எதுவும் இல்லாமல் வெளியாகத் தயாராகிவருகிறது ‘கபாலி’ திரைப்படம். வெண்ணிற தாடியுடன் கூடிய பளீர் தோற்றம், விமானத்தின் மீது பட விளம்பரம் என்று ரஜினிக்கான வசீகரமும் பிரமாண்டமும் அணிவகுக்கின்றன. வாட்ஸ் - அப் வைரல், கட் அவுட் கச்சேரி என்று ரஜினி ரசிகர்கள் புதிய கொண்டாட்டத்துக்குத் தயாராகிவரும் பரபரப்பான சூழலில் அந்தப் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித். ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி..
அமிதாப் பச்சன் தன் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தனது இடத்தைத் தக்க வைத்திருக்கிறார். அந்த அடிப்படையில் ‘கபாலி’ படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் வயதுக்கேற்ற பாத்திரமா? இல்லை அவருக்காக உருவாக்கப்பட்ட பாத்திரமா?
ரஜினி சாரை சந்திச்சப்போ, உங்களோட வயசுக்கேத்த கதாபாத்திரமாகத்தான் இந்தப் படத்தை இயக்க ஆசைப்படுறேன்னு சொன்னேன். அதுக்கு அவர், நானும் இப்போ அந்த மாதிரி கதாபாத்திரம்தான் சரியா இருக்கும்னு நினைக்கிறேன் என்றார். என்னை அவர் தேர்வு செய்யக் காரணமும் நான் முதலில் சொன்ன அந்த வார்த்தைதான். படத்துக்கு உங்களோட வெள்ளைத் தாடி அப்படியே வேணும்னு கேட்டேன். வெள்ளைத் தாடியை அப்படியே வச்சா, ரசிகர்கள் விரும்புவார்களா என்ற யோசனை ஆரம்பத்தில் அவருக்கு இருந்தது. படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியானப்போ அது பாசிடிவ்வாக மாறியதைப் பார்த்து அவரே ரசிக்க ஆரம்பிச்சார். அதைப் பார்த்தபோது எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமானது.
அப்படியென்றால் ரஜினியின் ஆரம்பகால படங்களில் வெளிப்பட்ட அவரது இயல்பான நடிப்பை ‘கபாலி’யில் காண முடியுமா?
ஆக்ரோஷமான ஒரு மனிதனின் மனநிலையையும், அவனது லைஃப் ஸ்டைலையும் பிரதிபலிப்பதுதான் இந்தக் களம். ஒரு ரியல் மனிதனின் கோபத்தை அப்படியே காட்ட வேண்டும். ரஜினி சாரை நான் நேரில் பார்த்தபோது அவர் அப்படி ஒரு இயல்போடுதான் இருந்தார். அவரது அந்த இயல்பை அப்படியே காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அந்த அடிப்படையில்தான் எனக்கு அவரோட ‘முள்ளும் மலரும்’ படம் ரொம்ப ஈர்க்கும். அந்த மாதிரி ‘கபாலி’யில் அவரைக் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். அது சரியாக அமைந்தது. ரஜினி என்றால் ஒரு பவர். அந்த பவரை எங்கே வைத்தாலும் பெஸ்ட் என்று ரிசல்ட் வரும்.
அவருக்கென்று தனியே சீன் செய்யணும்னு அவசியமில்லை. நார்மலா ஒரு சீன் வைத்தாலே அது அவரால் பலமான சீனாக மாறுது. படத்தில் வரும் ‘மகிழ்ச்சி’ என்ற சொல் நான் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு இயல்பான சொல். அது எல்லாருக்கும் போய்ச் சேரட்டும் என்றே வைத்தேன். அதை ரஜினி சார் உச்சரித்தப்போ பஞ்ச் வசனமா மாறுது. அதுதான் ரஜினி. சமீபத்தில் ரஜினி சார் போனில், இனிமே நான் அதிகம் பேசப்போற வார்த்தை ‘மகிழ்ச்சி’ங்கிறதுதான்னு சொன்னார்.
கதாபாத்திரத்துக்காக ரஜினியை எந்த அளவுக்கு மாற்றியிருக்கிறீர்கள்?
படத்துல நான் கதாபாத்திரத்தை ஸ்ட்ராங் பண்ணிட்டேன். ரெகுலரா ரஜினி சார் நடித்த எல்லாப் படங்களிலும் அவர் வேகமாக நடப்பார். நான் இந்தப் படத்துல அவரை ஸ்லோவாக நடக்க வைத்தேன். அந்த ஸ்லோகூட இங்கே பயங்கரமா பார்க்கப்படுது. எதெல்லாம் இதுக்கு முன்னாடி இருந்ததுன்னு கவனிச்சு நான் மாத்தினேனோ, அதெல்லாம் வேறொரு லுக் கிடைச்சு பெருசா பார்க்கப்படுது. அதுதான் ரஜினி சாரோட பவர்.
அதைச் சரியா பயன்படுத்தணும்கிறதுதான் என்னோட வேலையா இருந்தது. நான் கதையை எழுதும்போது ஒரு நிஜ மனிதனின் கதையாகத்தான் எழுதினேன். அதில் ரியாலிடி இருக்கணும். சினிமாத்தனம் இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். அதெல்லாம் சரியாகவே அமைந்தது.
ரஜினி டான் கதாபாத்திரத்தில் நடித்த ‘தளபதி’, ‘பாட்ஷா’ போன்ற படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. ‘கபாலி’யில் கேங்ஸ்டராக வரும் ரஜினி தமிழ் தேசியவாதியாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
தமிழ் தேசியவாதின்னு முழுமையா சொல்ல முடியாது. ஆனா, தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழராக வருகிறார். மலேசியாவில் தமிழ் சமூகத்தில் பிறந்து உணர்வை வெளிப்படுத்துகிற ஒரு நபர். தமிழர்களுக்குப் பிரச்சினை என்று வரும்போது அங்கே வெடித்து உருவாகிற ஒரு கதாபாத்திரம்தான். இன்னும் சொல்லப்போனால், மக்களுக்காகப் போராடுகிற ஒரு கேங்ஸ்டர்.
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய இரண்டு படங்களிலும் படப்பிடிப்புக்கு முன் நடிகர்களுக்கு தனியே நடிப்பு பயிற்சி கொடுத் திருக்கிறீர்கள். அந்த வகையில் ‘கபாலி’ படத்துக்கு நடிகர்கள் எப்படி தயாரானார்கள்?
ரஜினி சாரைத் தவிர்த்து படத்தில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்களுக்குப் பயிற்சி அளித்தோம். மலேசியத் தமிழர்களின் பேச்சு, உடல் மொழி எல்லாவற்றையும் கவனிக்க வைத்தோம். அதற்காக நிறைய மலேசியப் படங்களைப் பார்க்க வைத்தோம். இப்படி நடிக்கணும்னுதான் சொல்வேன். எப்போதுமே நடித்துக் காட்ட மாட்டேன். அதில்தான் அவங்களுக்கான இடத்தை ஏற்படுத்திக்கொடுக்க முடியும்னு நினைக்கிறேன். அந்த வேலையை இந்தப் படத்திலும் செய்தேன். இனியும் செய்வேன்.
‘கபாலி’க்குள் ராதிகா ஆப்தே வந்தது எப்படி?
‘ரத்த சரித்திரம்’ படம்தான். அந்தப் படத்தில் சிவப்பு கலர் சேலை, ஒரு பொட்டுன்னு அவ்வளவு எளிமையாக வந்து போவார். அதுல அவரோட நடிப்பு அப்படி இருக்கும். அதுதான் காரணம்.
ரஜினி படங்கள் என்றால் கேமராமேன், இசையமைப்பாளர் உள்ளிட்ட டெக்னிக்கல் குழு பிரம்மாண்டமாக அமையும். ‘கபாலி’க்கு உங்களது முந்தைய படக் குழுவினரே பணிபுரிந்திருக்கிறார்கள். இதற்கு ரஜினி என்ன சொன்னார்?
என்னைத் தேர்வு செய்யும்போதே, ‘இந்தப் படத்துக்கான டெக்னீஷியன்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளுங்கள்’ என்றார். தயாரிப்பாளர் தாணு சாரும் அதையேதான் சொன்னார். ஏற்கெனவே வேலை பார்த்தவர்களோடு பணிபுரிந்து வேலை வாங்குவது ஈஸி. இதில் பெரிய ஆள், சின்ன ஆள் என்பதெல்லாம் எதுவும் இல்லை. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களின்போது எங்களோட வேலையைத்தான் நம்பினோம். திரைக்கதையில் என்னோடு இருந்த ஜே.பி.சாணக்யா, அவருக்குத் துணையாக இருந்த சீனிவாசன், கேமராமேன் முரளி, எடிட்டர் பிரவீன், கலை இயக்குநர், இசையமைப்பாளர். பாடலாசிரியர்கள், காஸ்டியூம் டிசைனர் என்று எல்லோரும் நான் பெரிதும் நம்பும் ஆட்களாக உடன் இருந்தார்கள். அது எனக்கு எல்லா வகையிலும் பயனாக இருந்தது.
ராதிகா ஆப்தே, ரஜினி
அடுத்து?
ஸ்டுடியோ கிரீன் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணப்போறேன். அவர்கள் சூர்யாவை வைத்துப் பண்ணலாம் என்று சொல்லியிருக் கிறார்கள். ‘கபாலி’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் அதுக்கான வேலை தொடங்கும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago