பாலா இயக்கிய ‘பரதேசி’ படத்தில் ‘கருத்தகன்னி’யாக அறிமுகமானவர் ரித்விகா. பத்துப் படங்களை மட்டுமே கடந்து வந்திருக்கும் இவர், கதாபாத்திரத்துக்கான நடிப்பைத் தருவதில் நம்பிக்கைக்குரிய வளரும் கலைஞராக ரசிகர்களை ஈர்த்துவருகிறார். ‘கபாலி’ படத்தில் போதை மருந்துக்கு அடிமையாகி மீளத் துடிக்கும் பெண்ணாகச் சிறந்த நடிப்பைத் தந்திருந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து…
உங்க பூர்விகம்?
நான் பிறந்தது வளர்ந்தது, படிச்சது, வாழ்றது எல்லாம் சென்னையில. அம்மாவுக்கும் சென்னைதான். அப்பாவுக்குச் சொந்த ஊர் மாயவரம்.
சினிமா நடிப்புதான் நமக்குச் சரின்னு எப்போ முடிவு பண்ணீங்க?
எட்டு வயசுலன்னு சொன்னா உங்களுக்குக் கொஞ்சம் ஷாக்கா இருக்கும். மூணாங்கிளாஸ் படிக்கும்போதே நாம சினிமால நடிகையா வரணும்ன்னு நினைச்சேன். மாறுவேடப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டின்னு ஒவ்வொரு வருடமும் ஆர்வமாகக் கலந்துக்குவேன். ஆறாம் வகுப்பு போனதும் ஸ்கூல் டிராமால எனக்குன்னு ஒரு கேரக்டர் கிடைச்சிடும். எட்டாம் வகுப்புல ஆரம்பிச்சு இண்டர் ஸ்கூல், காலேஜ்ன்னு கல்சுரல்ஸ்ல முன்னாடி நிப்பேன். எதுல நமக்கு ஆர்வம் அதிகமா இருக்கோ, அதை வெளிப்படுத்திக்கிட்டே இருந்தா, எங்க இருந்தாலும் நம்மள அடையாளம் கண்டுக்குங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு.
காலேஜ் படிக்கிறப்போ ஷார்ட் பிலிம்ல நடிக்க வரிசையா என்னோட நண்பர்கள், தோழிகள் கூப்பிட்டப்போ என்னோட நம்பிக்கை எவ்வளவு சரின்னு நினைச்சு சந்தோஷப்பட்டேன். அப்புறம் ஷார்ட் ஃபிலிம்ஸ்ல என்னோட நடிப்பைப் பார்த்துட்டு “ புரஃபெஷனல் ஆக்டர்ஸ் மாதிரி நடிக்கிறப்பா”ன்னு ஒரே பாராட்டு. அதுக்கு அப்புறம்தான் சினிமால ட்ரை பண்ண ஆரம்பிச்சேன். ஆனா முதல் படமே பாலா சார் படமா அமையும்ன்னு நினைச்சுப் பார்க்கல.
நடிப்புக்கென்று பயிற்சி எடுத்துக்கொண்டு நடிக்க வர்றவங்களை எப்படிப் பார்க்குறீங்க?
நடிப்புக்காகப் பயிற்சி எடுத்துக்குறது அவசியமான்னு எனக்கு சொல்லத் தெரியல. ‘கபாலி’ படத்துல நடிக்கும்போது ‘மைம்’ கோபி அண்ணா எங்கிட்ட “நீங்க எங்கே பயிற்சி எடுத்தீங்க”ன்னு? கேட்டார். ‘இல்ல தானாக நடிப்பு வருது’ன்னு சொன்னதும் ஆச்சரியப்பட்டார். “தியேட்டர் ஆர்டிஸ்ட் போலத் தேவையான அளவுக்கு மட்டும் நடிக்கிறே”ன்னு வாழ்த்தினார். அதைப் பெரிய பாராட்டா நினைக்கிறேன். அப்புறம் ரஜினி சார் “என்னப்பா இந்தப் பொண்ணு நடிப்புல பேயா இருக்கான்னு”சொல்லிப் பாராட்டினார். கபாலியைவிட ‘மெட்ராஸ்’ படத்துல மேரி கேரக்டருக்குக் கிடைச்ச பாராட்டை மறக்கவே முடியாது.
நடிப்புக்காக நீங்கள் ரொம்ப மெனக்கெடுறது இல்லையா?
நிச்சயமா இல்ல. இயல்பா நடிக்கிற முயற்சியில பாதி நடிகர் கையிலயும் பாதி டைரக்டர் கையிலயும்தான் இருக்கு. டைரக்டர் நடிச்சுக்காட்டி இதே மாதிரி பண்ணுங்கன்னு சொன்னா என்னால கண்டிப்பா பண்ண முடியாது.
இதான் உங்க கேரக்டர். இதை மைண்ட்ல ஏத்திக்கோங்கன்னு டைரக்டர் சொல்லும்போது அதை அப்படியே மைண்ட்ல உட்காரவெச்சுடுவேன். சினிமா நடிப்புக்கான உணர்ச்சியை நீங்கள் ஒவ்வொரு ஷாட்டுக்கும் உடைச்சு உடைச்சுக் கொடுக்கணும். அந்த எல்லா ஷாட்டும் எடிட் ஆகி ஒரே சீனா கோத்த பிறகு அந்த சீன்ல உங்க நடிப்புல இருக்க உணர்ச்சி உடைஞ்சிபோயிருக்கக் கூடாது. கேரக்டருக்கான நடிப்புக்கு நாம ரொம்ப மெனக்கெட வேணாம்.
ஒருநேரத்துல ஒரு படத்துல மட்டும் நடிச்சாக்கூட அந்த கேரக்டரை இன்னும் சரியா வெளிப்படுத்த முடியும்ன்னு நினைக்கிறேன். ஒரு இடைவெளிக்கு அப்புறம் ஒரு கேரக்டருக்கான நடிப்பைத் தொடர வேண்டியிருந்தா, அதுவரைக்கும் நாம நடிச்சதை ரீவைண்ட் பண்ணிக்கிட்டா போதும்.
தங்களோட கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வெளிக் கொண்டுவரதுல, இதுவரை நீங்க பணியாற்றிய இயக்குநர்கள்கிட்ட என்ன வேறுபாடுகளை உணர்றீங்க?
பாலா சார் டைரக்ஷன்ல நடிச்சப்போ அவர் என்ன சொன்னாரோ அப்படியே செஞ்சேன். எப்படிப் பேசச் சொன்னாரோ, எப்படிப் பார்க்கச் சொன்னாரோ எப்படிச் சிரிக்கச் சொன்னாரோ எப்படி அழச் சொன்னாரோ அதேமாதிரி செய்தேன். அவர் சொல்றதைவிட அதிகமா பண்ணாலோ, குறைச்சுப் பண்ணாலோ ஏத்துக்க மாட்டார்.
தமிழ் தெரியாத நடிகர்ன்னா சுத்தம்! “உன்னோட மொழியில டயலாக்ஸை எழுதி மனப்பாடம் பண்ணிட்டு வா. அப்புறம் அந்த டயலாக்குக்கு அர்த்தம் தெரிஞ்சுக்க. அதுக்கப்புறம் நடி”ன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிடுவார். பாலா சார் செட்ல புராம்டிங் பண்றதுங்கிற (பின்னாலிருந்து உதவி இயக்குநர்கள் வசனத்தை நடிகர்களுக்கு எடுத்துக் கொடுப்பது) பேச்சுக்கே இடம் கிடையாது.
ரஞ்சித் சார் செட் வேற மாதிரி. அவர்கிட்ட ஒரு குளோஸ் ஃபிரெண்ட் மாதிரி நிறைய பேசலாம். கேரக்டரை நாம எப்படிப் புரிஞ்சுகிட்டுப் பண்றமோ அதைக் கவனிப்பார். கேரக்டருக்கு நாம கொடுக்கிறது அவர் எதிர்பார்த்ததைவிட நல்லா இருந்துச்சுன்னா, இதான் வேணும்ன்னு உற்சாகமாயிடுவார். அப்போ நாம அந்த ஸ்கேல பிடிச்சுக்கிட்டா போதும்.
அப்புறம் ‘ஒரு நாள் கூத்து’ படத்தோட இயக்குநர் நெல்சன் சார். இத்தனைக்கும் அதுதான் அவருக்கு முதல் படம். செட்லயும் சரி, டப்பிங்லயும் சரி என்னை பெண்ட் எடுத்துட்டார். சிட்டில படிச்சு எஃப்.எம். ரேடியோல ஆர்.ஜேவா இருக்கிற ஒரு மீடியா பொண்ணோட கேரக்டர். அதை எனக்குப் புரிய வைக்கிறதுக்காக ஒரு மாசம் என்னை சூரியன் எஃப்.எம். ஸ்டேஷனுக்கு வேலைக்கே அனுப்பிட்டார்.
அங்க நான் ஒரு ஆர்ஜேவுக்கான பயிற்சிய எடுத்துக்கிடேன். எப்படி வேகமா கோவையா பேசணும், பேசி முடிச்சதும் எப்படி நிகழ்ச்சிய பிளே பண்ணணும்ன்னு நிஜமாவே கத்துக்கிட்டேன். அதுக்கு அப்புறம்தான் அவர் ஷூட்டிங்கே ஆரம்பிச்சார். அந்த கேரக்டர் அவ்வளோ ரியலா வந்ததுக்கு என்னோட உழைப்பைவிட நெல்சனோட உழைப்புதான் அதுல அதிகம்.
இப்படி ஒவ்வொரு டைரக்டர்கிட்டயும் நிறைய கத்துக்கிட்டேன். நம்மகூட நடிக்கற நடிகர்கள்கிட்டேயிருந்தும் கத்துக்கிறேன். அப்படிப் பார்த்தா, நடிப்பைக் கத்துக்கிட்டே இருக்கோம்ன்னு சொல்லணும்.
அறிமுகப் படத்தில் தொடங்கி துணைக் கதாபாத்திரங்களில் வர்ற கலைஞராவே இருக்கீங்களே?
நான் நடிக்க மாட்டேன்னு சொல்லலியே…கதாநாயகியாவோ இல்ல கதையின் நாயகியாவோ கூட இதுவரைக்கும் யாரும் என்னைக் கூப்பிடல. ஏன்னும் எனக்குப் புரியல. சரி காரணத்தைத் தெரிஞ்சுக்கலாம்ன்னு கேட்டா, எங்கிட்ட ஹீரோயின் மெட்டீரியல் இல்லன்னு சொல்றாங்க. வாய்ப்புக் கொடுக்காம இப்படிச் சொல்றதை ஏத்துக்க முடியாது. ஒரு ஹீரோயினைவிட கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கிறது நல்லா இருக்கு. கூடிய சீக்கிரம் ஹீரோயின் வாய்ப்பும் கிடைக்கும்கிற நம்பிக்கை இருக்கு.
சினிமா நடிப்புக்கான உணர்ச்சியை நீங்கள் ஒவ்வொரு ஷாட்டுக்கும் உடைச்சு உடைச்சுக் கொடுக்கணும். அந்த எல்லா ஷாட்டும் எடிட் ஆகி ஒரே சீனா கோத்த பிறகு அந்த சீன்ல உங்க நடிப்புல இருக்க உணர்ச்சி உடைஞ்சிபோயிருக்கக் கூடாது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago