சினிமாலஜி 03 - மஞ்சு எனும் கெத்தழகி!

By சரா

(முன்னறிவிப்பு: இந்தத் தொடரில் வரும் சம்பவங்களும் உரையாடல்களும் முழுக்க முழுக்க கற்பனையே!)

வகுப்பறையில் அவ்வப்போது முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு, அவை குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம். விரிவுரையாளர் சலீம் ஒருங்கிணைப்பில் ‘அவள் அப்படித்தான்' பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருள் சூழ்ந்த வகுப்பறையில் புரொஜக்டர் எதிரே இருந்த திரை முன்பு நின்றார் சலீம்.

“ ‘அவள் அப்படித்தான்’ படத்தை எத்தனை பேர் பார்த்திருக்கீங்க?”

மூன்று பேர் மட்டுமே கை உயர்த்தினர்.

“ம்... 1978-ல் ருத்ரய்யா இயக்கத்தில் ஸ்ரீப்ரியா, கமல், ரஜினி நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் உங்களுக்கு மிக முக்கியமான அனுபவமா இருக்கும். நிறைய கத்துக்கப் போறீங்க. ரொம்ப ஆச்சரியமாகவும் இருக்கலாம். படம் பார்த்து முடிச்சுட்டு, இப்ப இருக்குற தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களோட இதை ஒப்பிட்டு விவாதிக்கலாம்” என்றார் சலீம்.

அனைவரின் விழிகளும் திரையில் ஆர்வத்துடன் பதிய, பார்த்தா மட்டும் சலீம் சார் சொன்ன பெயர்களின் வரிசையை நுட்பமாக ஆராய்ந்தபடி படம் பார்க்கத் தொடங்கினான்.

‘ரஜினி, கமல், ஸ்ரீப்ரியான்னு தானே சொல்லணும். இவரு ஏன் ஸ்ரீப்ரியா, கமல், ரஜினின்னு சொன்னாரு?!'

ஊசியைக் கீழே போட்டால் ஓசை எழும் அமைதி. படம் முடிந்தது. வெளிச்சம் பரவியது. பார்வைகளில் பரவசம் தெரிந்தது. சலீம் சார் சொன்ன ஆர்டரின் உள்ளர்த்தமும் பார்த்தாவுக்குப் புரிந்தது. மாணவர்கள் எதிர்பார்த்ததைவிட அசந்துவிட்டதான் பூரிப்பு மேலிடத் திரை முன்பு நின்றார் சலீம்.

“என்ன படம் சார் இது... ஏதோ இன்னிக்கு தியேட்டர்ல ரிலீஸ் ஆனது மாதிரி அவ்ளோ ஃபிரஷ்ஷா இருக்கு!” வியப்புடன் ஆரம்பித்தான் ஜிப்ஸி.

சலீம் சார் சிறு அறிமுகக் குறிப்பு தந்தார்:

“சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர் ருத்ரய்யா. படிப்பை முடித்த கையோடு எழுத்தாளர் வண்ணநிலவன், இயக்குநர் ராஜேஷ்வர் உடன் சேர்ந்து இந்தத் திரைக்கதையை வடித்தார். இந்தப் படம் உருவான விதத்தை வைச்சே ஒரு படம் எடுக்கலாம். அவ்வளவு சுவாரசியமானது. ருத்ரய்யா ரெண்டாவதா ‘கிராமத்து அத்தியாயம்'னு ஒரு படம் எடுத்தார். அதுதான் அவரோடக் கடைசி படமும். இணையத்தில் தமிழில் தேடினால் ருத்ரய்யா பற்றியும் ‘அவள் அப்படித்தான்' உருவான விதம் பற்றியும் நிறையத் தகவல் கிடைக்கும்.

ரஜினி, கமல், ஸ்ரீபிரியா மூணு பேருமே ரொம்ப பிஸியா இருந்தப்ப இந்தப் படத்தை எடுத்துருக்காங்க. கொஞ்சம் ஓய்வா இருக்கும்போது நடிச்சு கொடுத்துட்டுப் போனாங்க. ஆனா, முழு ஈடுபாட்டோடு அற்புதமா நடிச்சாங்க.”

“ஓஹ்...! அதான் மூணு பேரும் ஒண்ணா இருக்குற மாதிரி காட்சி அதிகம் இல்லையோ. ஒரு சீன்ல மூணு பேருமே இருப்பாங்க. ஆனா, தனித்தனியாகத்தான் காட்டுவாங்க. ஒயிட் ஆங்கிள்ல மூணு பேரும் ஒண்ணா இருக்குற மாதிரி எந்த ஷாட்டும் இருக்காது. ஆனா, சூப்பரா இருந்துச்சு” என்று தன் சினிமா அறிவை முன்வைத்து பாராட்டினான் பிரேம்.

“இதே படத்தை இப்ப எடுத்தாலும் செம்மயா இருக்கும். அஜித், விஜய் மாதிரியான ஹீரோக்கள் ஒத்துப்பாங்களா?” - பார்த்தா முன்வைத்த கேள்வி இது.

“மஞ்சு கேரக்டர் நயன்தாராவுக்குதான்!” - சட்டென விருப்பம் பதித்தான் மூர்த்தி.

“ஆஹான்... ஆளுக்கு அஞ்சு பஞ்ச் டயலாக், ரெண்டு ஓபனிங் சாங்ஸ், தெறிக்கவிடுற மாதிரி சண்டை. இதெல்லாம் சேர்த்துட்டா ருத்ரய்யா ஆன்மா தற்கொலை பண்ணிக்கும்” என்று சன்னமாகச் சொன்னாள் கீர்த்தி.

“ முயற்சி பண்றதுல தப்பில்லையே...” என்று பார்த்தா இழுக்க, “ரஜினி, கமல் மாஸுன்னாலும் எப்பவும் அவங்களுக்குள்ள ஒரு கிளாஸ் தூங்கிட்டு இருக்கும். ஆனா இவங்க எல்லாரும் வெறும் மாஸ். அப்படியெல்லாம் நடந்தா தமிழ் சினிமாவை அடிச்சிக்க எவனாலயும் முடியாது” என்று கீர்த்தி குரலை உயர்த்தினாள்.

“ஒத்துகிட்டா மட்டும் போதுமா? ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா மூணு பேருமே எதிர்ல சக நடிகர் இல்லாமலே நீளமான வசனத்தைச் சரியான பாவனைகளோட பர்ஃபெக்டா நடிச்சிருப்பாங்க. அந்த மாதிரி பெர்ஃபாமன்ஸுக்கு எங்க போறது? ” என்று ரகு இன்னும் கொளுத்திப் போட, அதைத் தடுத்த சலீம் சார் “கன்டென்ட் பத்தி மட்டும் பேசுவோமே?” என்று சற்றே கோபத்துடன் பேச அமைதி நிலவியது.

மவுனம் கலைத்த கவிதா, “திருமணத்துக்கு முந்தைய பாலுறவு, சட்டபூர்வ கருக்கலைப்பு, பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண் சுதந்திரம், ஆணாதிக்கம், பெண்ணியம், குடும்பக் கட்டுப்பாடு, பர்தா போன்ற உடை கட்டுப்பாடுகள்... எப்படிப் பல விஷயங்களைத் தொட்டிருக்காங்க. அதுல எந்தப் பிரச்சினையும் இவ்ளோ வருஷத்துக்கு அப்புறமும் முழுசா தீரலைன்றதுதான் கொடுமை. ஆண் - பெண் உறவின் உளவியல் சிக்கல்கள், பெண்ணியம், பெண் சுதந்திரத்தைப் பற்றி இவ்ளோ நுட்பமாவும், அற்புதமான திரைமொழியோடும் தமிழ்ல வேற எந்தப் படத்தையும் என்னால சொல்ல முடியல...” என மூச்சுவிடாமல் பேசப் பேச, பார்த்தாவின் காதுகளில் ‘லா லா லா லா' பின்னணி இசை ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

“பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குற படம் அப்பப்ப வந்துட்டுதானே இருக்கு. ஜோ நடிச்ச '36 வயதினிலே' நீ பார்க்கலையா?” என்று எப்போதாவது வகுப்பில் வாய் திறக்கும் மேனகா கேட்டாள்.

“நான் சொன்னது பெண்ணியம் சார்ந்தது. திருமணத்துக்கு அப்புறம் தனிப்பட்ட வாழ்க்கையே இல்லாமல் முடங்கும் ஒரு பெண், தன் குடும்பத்தினரால் ஒதுக்கப்படும்போது எப்படி மீண்டும் எழுச்சி அடையறான்னு அந்தப் படம் காட்டுச்சு. நல்ல படம்தான். இல்லைன்னு சொல்லல. ஜோதிகா கேரக்டர் மேல அனுதாபம் வர்றதுக்காக அலுவலக சகாக்கள், கணவன், மகள் என எல்லோரையும் கிட்டத்தட்ட வில்லன்களாகக் காட்டின விதம் டிராமாவா தெரியல? ”

கவிதாவின் சீற்றம் அடங்காத நிலையில், “ஃபார் யுவர் கைண்ட் இன்ஃபர்மேஷன் மேனகா... 'ஹவ் ஓல்டு ஆர் யூ' மலையாளப் படத்தின் ரீமேக்தான் 36 வயதினிலே. சரி, கவிதா... தமிழ் சினிமால இப்ப இருக்குற முக்கியமான இயக்குநர்கள் கூட பெண்களை ப்ரொட்டாகனிஸ்டா காட்டுற்து இல்லைன்றியா. நம்ம செல்வா கூடவா?” என்றது - ஆம், பார்த்தாவேதான்.”

“மஞ்சு ஒரு கெத்தழகி. அவளை மாதிரியான பொண்ணுங்கள தினம் தினம் நேர்ல பார்க்குறோம். ஆனா, படங்கள்ல அப்படி யாரையுமே பார்க்க முடியறது இல்லை. செல்வராகவன் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் அவ்ளோதான். அதுக்காக, அவரை ருத்ரய்யா லிஸ்டல்லாம் இப்போதைக்கு சேர்க்க முடியாது. 'மயக்கம் என்ன' படத்துல யாமினியை புரொட்டாகனிஸ்டா காட்டி, கார்த்திக்கை சப்போர்டிவ் கேரக்டரா ஆக்கியிருந்தாகூட சூப்பரா இருந்துருக்கும்” என்ற கவிதாவின் ஆவேசம் அடங்குவதாகத் தெரியவில்லை.

“நீ 'இறைவி' பாக்கலையா ராசா?” - அலட்சியமாகக் கேட்ட பார்த்தாவின் கேள்விக்குள் உள்குத்து இல்லாமல் இல்லை.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'இறைவி'யைக் கழுவியூற்றியே கவனம் ஈர்த்த ரகு பேச எழுந்தபோது வகுப்பில் அனைவரின் முகத்திலும் ஆர்வம் படர்ந்தது.

- தொடர்புக்கு siravanan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்