ஆள் மாறாட்டக் கதைகள் பொதுவாக உருவ ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். விஷ்ணுவர்த்தனின் ‘யட்சன்’, ஒரு சூழலை மையமாக வைத்து ஆள்மாறாட்டம் நிகழ்த்தி விளையாடு கிறது.
நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரான ஆர்யா, தூத்துக்குடியைச் சேர்ந்தவர். எதிர் பாராமல் ஒரு கொலையைச் செய்துவிடும் இவர், அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு பெண்ணை (தீபா சன்னதி) கொலைசெய்தால் ஐந்து லட்சம் என்று வில்லனின் கையாள் (தம்பி ராமைய்யா) ஆசை காட்ட, துணிந்து இறங்குகிறார். தீபா சன்னதியைக் கொல்வதற்காக வேவுபார்க்கும் ஆர்யா வுக்கு... அதேதான்... சன்னதியின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
பழநி பஞ்சாமிர்த வியாபாரியான அழகம்பெருமாளின் மகனான கிருஷ்ணா வுக்கு அப்பாவின் தொழில் மீது நாட்ட மில்லை. சினிமாவில் ஹீரோவாகிவிடத் துடிக்கிறார். இவர் சென்னைக்குப் போய் சினிமா வாய்ப்பு தேட காதலி ஸ்வாதி உதவுகிறார். பெரும் போராட்டத்துக்கு(?) பிறகு அஜித் படத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஒரு முக்கியமான கட்டத்தில் ஆர்யா - கிருஷ்ணா இடம் மாற, இவர்கள் காரியங்கள் குளறுபடியாகிவிடுகின்றன. ஆர்யா ஸ்டுடியோவிலும் கிருஷ்ணா கொலைக் களத்திலும் மாட்டிக்கொள்ள... இருவரின் வாழ்க்கையும் தடம் மாறுகிறது.
தீபா சன்னதியைக் கொல்ல நினைப்பது யார்? ஏன்? ஆர்யாவும் கிருஷ்ணாவும் என்னவானார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் மீதி ‘யட்சன்’.
காதல், நகைச்சுவை, நிழலுலகம் என மூன்றையும் கலக்க முயன்றது நல்ல ஐடியாதான். ஆள் மாறாட்டத்தின் மூலம் இதற்குச் சுவை சேர்க்கவும் வாய்ப்பு தரக்கூடிய கதை. ஆனால் இந்தக் கலவையில் புதுமை ஏதுமில்லாததால் கதை முன் நகர மறுக்கிறது. தவிர, கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளிலும் வரும் காமெடி (முயற்சிகள்!) படத்தின் எந்தப் பிரச்சினையையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளவிடாமல் தடுக்கின்றன. உதாரணமாக, ஓட்டேரி மணி (பொன்வண்ணன்) என்னும் ரவுடியின் வலிமை பற்றிப் பெரிதாகப் பேசப்படுகிறது. ஆனால் ஆர்.ஜே. பாலாஜியின் உபயத்தால் ஓட்டேரி மணி வரும் காட்சிகளும் காமெடியாகவே முடிகின்றன.
ஆர்யாவின் பாத்திரப் படைப்பும் பலவீனமாக உள்ளது. கிருஷ்ணாவுக்கு அஜித்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் இடம் செயற்கை என்றால்.. அதே இடத்துக்கு ஆர்யா வருவது அதைவிடச் செயற்கை. வில்லன் ஒவ்வொருவரிடமும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்திவிட்டுக் கொல்வது திரும்பத் திரும்ப வந்து சலிப்பூட்டுகிறது. பல்வேறு ஓட்டங்களையும் தாறுமாறு திருப்பங்களையும் பார்த்துக் களைப்படைந்துவிடும் பார்வையாளர்கள், வில்லனின் அடையாளத்தைப் பற்றி வரும் திருப்பத்தைச் சலனமில்லாமல் எதிர்கொள்கிறார்கள். வருங்காலக் காட்சி களைக் காணும் நாயகியின் ‘சக்தி’யும் திரைக்கதையின் விறுவிறுப்பைக் கூட்ட உதவவில்லை.
கிருஷ்ணாவின் அப்பா, காதலி, ஆர்யாவை மலேசியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும் தரகர், வில்லனின் கையாளாக வரும் தம்பி ராமைய்யா ஆகிய பாத்திரங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. மற்ற அம்சங்களில் நம்பகத்தன்மையோ ரசிப்பதற்கான அம்சங் களோ அதிகம் இல்லை.
ஆர்யா நடிப்பில், சமீபகாலத்து படங்களில் இருந்து மாறுபட்டு ஏதுமில்லை. கிருஷ்ணா சில காட்சிகளில் கவர்கிறார். வசன உச்சரிப்பில் கூடுதல் கவனம் தேவை.
தீபா சன்னதி அழகாக இருக்கிறார். சரியாகவும் பாவனை காட்டுகிறார். ஆனால் தேவையில்லாத இடங்களிலும் முகத்தில் ஒருவித கலவர உணர்ச்சியைக் காட்டி முறைப் பது ஏன்? ஸ்வாதி, வில்லனாக வரும் அடில் ஹுசைன், ஆர்.ஜே.பாலாஜி, பொன்வண்ணன் ஆகியோர் ரசிக்க வைக்கிறார்கள்.
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு ஓரளவு முட்டுக் கொடுக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் படத்தை தாங்கிப் பிடிக்கிறது.
யட்சன் என்றால் மாயங்கள் புரிபவன் என்று ஒரு பொருள் உண்டு. எழுத்து வடிவில் பலரைக் கவர்ந்த சுபாவின் இந்தக் கதை, சினிமாவுக்கான திரைக்கதையாக சோபிக்கவில்லை. முக்கிய பாத்திரங்களின் பிரச்சினைகளோடு பார்வையாளர்களை ஒன்றவைக்காமல் போனதுதான் யட்சனின் முக்கிய பிரச்சினை.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago