தடகள வீரனைப் பற்றி நகைச்சுவையாகச் சொல்லி கடந்த ஆண்டு வெற்றி கண்ட படம் எதிர்நீச்சல். அழுத்தமான பதிவாக வெளியானது ஹரிதாஸ். இந்தி சினிமாவில் தடம்பதித்தது பாக் மில்கா பாக். இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரரான மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைத் தழுவி உருவான பயோபிக் திரைப்படம் இது. 187 நிமிடங்கள் ஓடும் இந்த படம், இந்தியாவில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. உலக ரசிகர்களையும் கவர்ந்தது.
மூன்று மணிநேரப் படத்தை யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்த இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர், அக்ஸ், ரங்க் தே பசந்தி டெல்லி-6 போன்ற படங்களுக்காகத் தேசிய விருதுகளையும், பிலிம்ஃபேரின் பல விருதுகளையும் பெற்ற ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா. ரங்க் தே பசந்தி (2006), ராகேஷ் மெஹ்ராவுக்குப் பாலிவுட்டில் பெரிய அடையாளத்தைத் தந்தது என்றால் பாக் மில்கா பாக் அவரை இந்தியாவின் முதன்மையான இயக்குநர்களில் ஒருவராக ஆக்கியது.
படத்தின் கதை என்ன?
ரோமில் 1960இல் நடைபெறும் ஒலிம்பிக்ஸில் மில்கா சிங் ஓடத் தயாராகும்போது, அவரின் பயிற்சியாளர் “ஓடு மில்கா ஓடு” என்கிறார். மில்காவின் ஓட்டத்தை, அவரின் சிறு வயது அனுபவங்களும் துயரங்களும் தடை செய்து, அவரை நான்காவது இடத்துக்குத் தள்ளுகின்றன.
மில்கா சிங்கின் வாழ்க்கையைச் சிறு வயதிலிருந்து நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம். 1947இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் பிரிவினை கலவரங்களில் மில்கா சிங்கின் பெற்றோர்கள் கொல்லப்படுகிறார்கள். கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அகதிகளோடு பெற்றோரை இழந்த சிறுவன் மில்கா சிங் டில்லி வந்து சேர்கிறான். சில நாட்களில் தப்பி வந்த தன் அக்காவையும் அவள் கணவனையும் காண்கிறான். அகதிகள் முகாமில் மில்காவுக்கு நண்பர்கள் கிடைக்கிறார்கள். அக்காள் கணவனுடன் ஒரு சிறிய பிரச்சினையில் அங்கிருந்து வெளியேறுகிறான். தனியாக நண்பர்களுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறான். ஓடும் ரயிலில் நிலக்கரி திருடிச் சம்பாதிக்கிறான்.
காலம் கரைகிறது. இளைஞனாகும் மில்கா (பர்ஹான் அக்தர்) நண்பர்களுடன் நிலக்கரித் திருட்டைத் தொடர்கிறான். அப்பகுதியில் வசிக்கும் பீரூவை (சோனம் கபூர்) காதலிக்கிறான். அவளும் காதலித்தாலும், அவனுடைய திருட்டுத் தொழிலை அறிந்து, அவன் நல்ல பாதைக்குத் திரும்பினால் மட்டுமே அவனுடன் வாழ விரும்புவதாகச் சொல்கிறாள்.இதனால் மில்கா ராணுவத்தில் சேர்கிறான். அங்கே அவன் ஓட்டத்தைப் பார்த்து, ஹவால்தார் குருதேவ் சிங் (பவன் மல்ஹோட்ரா) அவனை ஊக்கப்படுத்துகிறார். ஒலிம்பிக் போட்டிக்காக இந்தியப் பெயர் பொறித்த மேல் அங்கியின் மீது ஆசைப்படும் மில்காவைக் கண்டு மூத்த பணியாளர்கள் நகைக்கிறார்கள். அந்த மேல் அங்கியை அடையப் பல பயிற்சிகளை எடுக்கிறான். பயற்சியாளர் ரன்வீர் சிங்கின் (யோகராஜ் சிங்) பார்வை அவன் மேல் படுகிறது. ஒலிம்பிக்ஸ் போட்டிக்குச் செல்லும் அணிக்கான தேர்வில், கால் அடிபட்ட நிலையிலும் ஓடி தேசிய சாதனையை முறியடிக்கிறான். ஒலிம்பிக் குழுவில் இடம் பிடித்து அங்கியைப் பெறுகிறான். அந்தப் பெருமையுடன் பீரூவைக் காணச் செல்கிறான். ஆனால் அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. மில்கா ஏமாற்றத்துடன் திரும்புகிறான்.
மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் (1956) அவன் ஓடத் தயாராகிறான். அங்கே, ஆஸ்திரேலியப் பயிற்சியாளரின் பேத்தி ஸ்டெல்லா (ரெபேக்கா ப்ரீட்ஸ்), எனும் இளம் பெண் பழக்கமாகிறாள். அவளுடன் இரவைக் கழிக்கிறான். அந்தக் களைப்பில் மறுநாள் தோற்கிறான். வந்த நோக்கத்தை மறந்து சந்தோஷத்தில் திளைத்து, நாட்டை ஏமாற்றியதற்கு வருந்துகிறான். 400 மீட்டர் ஓட்டத்தில், உலக சாதனை நேரமான 45.9 விநாடிகளை இலக்காகக் கொண்டு, கடுமையான பயிற்சிகளை எடுக்கிறான். 1958இல் டோக்கியோவில் ஆசியப் போட்டியில், 200 மீட்டர் பந்தயத்தில், 21.6 விநாடிகளில் ஓடி, வெற்றி அடைகிறான். 1958இல் காமன்வெல்த் போட்டியில், 45.8 விநாடிகளில் 400 மீட்டர் ஓடி உலக சாதனை படைக்கிறான்.
இந்தியா பாகிஸ்தான் இடையே நட்புறவை வளர்க்க ஓட்டப் பந்தயம் நடத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபர் அயுப் கானும் முடிவு செய்கிறார்கள். மில்கா சிங் பழைய அனுபவங்களால் பாகிஸ்தான் செல்ல மறுக்கிறார். நேரு அவரைச் சந்தித்துப் பேசுகிறார். மில்கா பாகிஸ்தான் சென்று தன் சிறு வயதில் வசித்த கிராமத்திற்குச் சென்று நினைவுகளில் மூழ்கி அழுகிறார். ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு போட்டியில் வெல்கிறார். அதிபர் ஆயுப் கான் 'பறக்கும் (ஃ ப்ளையிங்க்) சீக்கியர்' என்று மில்காவைப் புகழ்கிறார். அவர் வெற்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடுமையான உழைப்பும் மனோபலமும் ஆழ்ந்த ஈடுபாடும் இருந்தால் உலகை வெல்ல முடியும் என்ற செய்தியுடன் படம் முடிகிறது.
படத்தின் சிறப்புகள்
மில்கா சிங்கும் அவர் மகள் சோனியா சான்வால்காவும் எழுதிய 'த ரேஸ் ஆஃப் மை லைஃப்' புத்தகத்தின் பாதிப்பில், பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி திரைக்கதையை எழுதினார். திரைக்கதையை எழுத 30 மாதங்களாயின. 30 கோடியில், 12 மாதங்களில் தயாரிக்கப்பட்ட இந்த படம், உலக அளவில் 160 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. பல மாநிலங்களில் இதற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. உலகெங்கிலும் பல பாராட்டுகளைப் பெற்றது.
இது ஒரு விளையாட்டு வீரனின் வெற்றிக் கதை மட்டுமல்ல. ஒரு தனி மனித ஆன்மாவின் வெற்றி. வணிக சமரசம் இல்லாமல் உண்மையாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இருந்த ஜீவனால் உலக அளவில் மாபெரும் வெற்றிப்படமானது. இந்திய விளையாட்டு அரங்கில் எவ்வாறு மில்கா சிங்கின் பெயர் காலம் காலமாக நிலைத்து இருக்குமோ, அதே போல், மில்கா சிங்காக வாழ்ந்திருக்கும் பர்ஹான் அக்தரின் கடின உழைப்பிலும் பிரமாதமான நடிப்பிலும் வந்திருக்கும் பாக் மில்கா பாக் படமும் ரசிகர்கள் மனத்தில் என்றும் இருக்கும்.
தொடர்புக்கு (dhananjayang@gmail.com)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago