சினிமா எடுத்துப் பார் 61: ஈகோ இல்லாத கமல், ரஜினி

By எஸ்.பி.முத்துராமன்

பஞ்சு அருணாசலம் அவர்கள் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படம் ரிலீஸான அன்றே, ஏவி.எம் தயாரித்து உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘சகலகலாவல்லன்’ படமும் ரிலீஸானது. என் இயக்கத்தில் உருவான இரண்டு படங்களும் வெவ்வேறு விதமான கதைக்களம் கொண்டவை. முழுக்க முழுக்க உணர்ச்சிகரமான கதை அம்சத்தோடு வெளிவந்த படம் ‘எங்கேயோ கேட்ட குரல்’. கதையும் கமர்ஷியலும் கலந்து வெளியான படம் ‘சகலகலா வல்லவன்’.

‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினி, அம்பிகா நடிப்பில் மனதில் என்றைக்கும் நிற்கக்கூடிய வகையில், ஆழமான காட்சிகள் கண்ணீரை வரவழைத்தன. அதற்கு முற்றிலும் வித்தியாசமாக குதூகலப் பாடல்களும், கலகலப்பும், சண்டைகளும் கலந்த படமாக வந்தது ‘சகலகலா வல்லவன்’. இரண்டு படங்களும் 1982-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸானது.

ஏவி.எம்.குமரன் சார் அவர்கள் இரண்டு படங்களையும் பார்த்துவிட்டு, ‘‘டைரக்டர் கார்டை எடுத்துவிட்டு இரண்டு படங்களையும் போட்டுக் காட்டினால் நிச்சயம் இது ஒரே இயக்குநர் இயக்கிய படம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இரண்டும் மாறுபட்டு இருக்கிறது. நீங்கள் இரண்டு படங்களை இரண்டு விதமாக எடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். இதுதான் உங்களுக்கான சாதனை’’ என்றார். அன்று ஏவி.எம்.குமரன் சார் சொன்ன வார்த்தைகள், ‘பத்ம’ விருதுகளுக்கு ஈடாக என் தாய்வீடான ஏவி.எம் தந்த விருதாகவே நினைக்கிறேன்.

ஏவி.எம்.குமரன்

இந்த வெற்றி எனக்கானது மட்டுமல்ல; என் ஒட்டுமொத்த குழுவுக்கும் சொந்த மான வெற்றி. குறிப்பாக இதில் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு மிகுதியான பாராட்டுகள் போய் சேர வேண்டும். இரண்டு வித்தியாசமான கதைகளையும் வெவ்வேறு கோணங்களில் அற்புதமாக உருவாக்கிய படைப்பாளி அவர்தான்.

என்னிடம், ‘‘கமலையும் ரஜினியையும் வைத்து பல படங்களை எப்படி இயக்கினீர்கள்?’’ என்று எல்லோரும் கேட்பார்கள். இன்றும் போகும் இடங்களில் எல்லாம் இந்தக் கேள்வி என்னைத் தொடர்கிறது.

ஒரு கதை தேர்வானதும், மாதத்தில் 10 நாட்களை ரஜினியிடமும், 10 நாட்களை கமலிடமும் கால்ஷீட்டாக வாங்கிக் கொள்வோம். 1-ம் தேதி முதல் 10 ம் தேதி வரை கமலிடம் வாங்கிக் கொண்டால், அடுத்து 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரைக்கும் ரஜினியிடம் கால்ஸீட் வாங்கிக் கொள்வோம். முதல் 10 நாட்கள் கமல் படப்பிடிப்பு முடிந்து ரஜினி படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கும்.

சில சமயம் படப் பிடிப்பில் ஒரு காட்சியை விளக்கும் போது ரஜினியை பார்த்து, ‘‘கமல் இப்படி வேண்டாம். அப்படி பண்ணுங்க?’’ என்று சொல்வேன். உடனே, ரஜினி ‘‘முத்துராமன் சார்… என்னதான் இருந்தாலும் உங்கக் குழந்தையைத் தானே நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்க’’ என்பார் சிரித்துக்கொண்டே. ‘‘இல்லை ரஜினி… கமலோடு ஷூட்டிங்ல 10 நாட்கள் கூடவே இருந்ததால, அதே நினைவுல உன்னை கமல்னு கூப்பிட்டுட்டேன்’’ என்று சொல்வேன். அவர், அவரது ஸ்டைலில் சிரிப்பார்.

ரஜினி ஷூட்டிங் முடிந்து, அடுத்த 10 நாட்கள் கமல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும். அப் போது கமலிடம், ‘‘இப்படி பண்ணினா நல்லா இருக்கும் ரஜினி’’ என்பேன். உடனே கமல், ‘‘பார்த்தீங்களா... வளர்த்த பிள்ளையை மறந்துட்டீங்க. வந்த பிள்ளையை ஞாபகம் வெச்சிருக்கீங்க!’’ என்பார். ‘‘இல்லை கமல். 10 நாட்கள் ரஜினியோடவே ஷூட்டிங்ல இருந்ததால அப்படி கூப்பிட்டேன். எனக்கு நீங்கள் இருவருமே இரண்டு கண்கள். உங்களை எப்படி மறப்பேன்” என்று அன்புடன் சொன்னதும், இருவருமே மகிழ்வார்கள்.

ரஜினி, கமல் இருவரது குணமும் வித்தியாசமானது. கமல் எப்போதும் எதையும் வித்தியாசமாக செய்ய வேண் டும் என்று விரும்புவார். அவருக்கு ‘சகலகலா வல்லவன்’ மாதிரி கமர்ஷியல் படத்தில் நடிப்பதைவிட, புஷ்பா தங்க துரையின் கதையை ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ என்று படம் எடுத் தோமே... அதே மாதிரி படங்கள் பண்ணு வதில்தான் அவருக்கு ஆர்வம். மக்கள் விரும்புகிறார்கள் என்று வியாபார பார் முலாவில் படம் எடுக்காமல், வித்தியாச மான படங்களை எடுத்து மக்களின் ரசனையை மாற்றவேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார்.

அதுதான் கமலின் கொள்கை. அந்த நாட்களில் டெல்லி, கோவா என்று திரைப்பட விழாக்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். எங்களுக்கு உலக படங்கள் பார்க்கும் பழக்கத்தை உருவாக்கி யவர் கமல்தான். கமல் சினி மாவை ஆராய்ச்சி செய்பவர். அதனால்தான் கமல் சினிமாவில் ‘விஞ்ஞானி’!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘படம் சிறப்பாக அமைய வேண்டும். அதுவும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக அது இருக்க வேண்டும்’ என்று நினைப்பார். ஒரு தடவைக்கு நான்கு முறை ஒரு காட்சியைப் பற்றி சொல்லச் சொல்லி வசனத்தை படித்துப் பார்த்து உள்வாங் கிக் கொள்வார். அந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்வார். எங்கே யாவது லாஜிக் இடித்தால், ‘‘இந்த இடம் ஒரு மாதிரியா இருக்கே. பஞ்சு அண்ணனைக் கூப்பிடுங்க’’ என்பார். அவர் வந்து தெளிவுபடுத்திய பிறகு தான் படப்பிடிப்புக்கு வருவார். அதனால்தான் ரஜினிகாந்தை நான் ‘மெய் ஞானி’ என்பேன்.

நான், கமல், ரஜினி மூவரும் படப் பிடிப்பில் சண்டை போட்டுக்கொண்டது கூட உண்டு. படம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட தர்க்க வாதங்களைத்தான் அப்படிச் சொல் கிறேன். கடைசியில் படத்துக்கு எது ஏற்ற தாக இருக்குமோ அதை எங்களுக்குள் பேசி முடிவு செய்து, ஏகமனதாக ஏற்றுக் கொள்வோம். கன்வின்ஸ் பண்ணணும் அல்லது கன்வின்ஸ் ஆகணும். அதா வது, நமது கருத்தை பிறரை ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். அல்லது அவர்கள் சொல்வது சரியாக இருந்தால், அதை ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் என் கொள்கை.

ஒரு காட்சியில், ‘‘இந்த இடத்தில் இந்த பன்ச் வசனத்தைப் பேசுகிறேனே’’ என்று ரஜினி சொல்வார். ‘‘இந்த இடம் உணர்ச்சிகரமான காட்சி. இங்கு அந்த பன்ச் வசனத்தை சொன்னால் மக்கள் கைதட்டிவிடுவார்கள். உணர்ச்சி உடைந்து போகும்’’ என்று சொல்வேன். அதை ரஜினி ஒப்புக்கொள்வார். அடுத்து, நகைச்சுவை காட்சி வரும் இடத்தில் ரஜினியிடம், ‘‘நீ ஏற்கெனவே சொன்ன அந்த பன்ச் வசனத்தை இந்தக் காட்சியில் சேர்த்துக்கோ’’ என்று சொல் வேன். உடனே ரஜினி, ‘‘ஆமாம் சார். இந்த இடத்துல அந்த பன்ச் வசனத்தைச் சொன்னா ரொம்ப கரெக்டா இருக் கும்’’ என்று சேர்த்துக்கொள்வார்.

எல்லாவற்றையும் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று விரும்புவார் கமல்ஹாசன். அவரிடம், ‘‘இது சென்டிமென்ட் காட்சி. இந்த இடத்தில் வித்தியாசமா சொன்னா சென்டிமென்ட் ஒர்க்-அவுட் ஆகாது’’ என்று சொல்வேன். எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக ஏற்றுக்கொள்வார். எங்களுக்குள் எப்போதுமே ஈகோ இருந்ததே இல்லை.

சினிமாவில் இருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கெல்லாம் என் அனுபவத்தில் சொல்கிறேன். ‘ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுத்து போகும் இடத்தில்தான் வெற்றி நிகழும். அதனால்தான் என்னால் ஒரே நேரத்தில் ரஜினியையும் கமலையும் வைத்து அதிக படங்களை இயக்க முடிந்தது!’

‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் தவறு செய்துவிடும் அம்பிகாவை ரஜினிகாந்த் மன்னிக்கிற காட்சியும், அப்போது அவர் பேசும் வசனங்களும் மக்களின் மனதை தொட்டன. அதே சமயம், ‘சகலகலா வல்லவன்’ படம் கலகலப்பாக அமைந்தது. இரண்டு படங்களையும் மக்கள் கொண்டாடி வரவேற்றார்கள். ‘எங்கேயோ கேட்ட குரல்’ 100 நாட்கள் ஓடியது. ‘சகலகலா வல்லவன்’ வெள்ளிவிழா கொண்டாடியது.

‘சினிமாவில் கதைக்காக நடிகரா? நடிகருக்காக கதையா?’ என்று வாச கர்கள் உங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திப் பாருங்கள். அதற்கான என் தீர்ப்பை நான் அடுத்த வாரம் சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்