சினிமா ஸ்கோப் 6: புது வசந்தம்

By செல்லப்பா

தமிழில் கதைகள் அநேகம், கதையாசிரியர்களும் அநேகர். திரையுலகிலேயே எத்தனையோ உதவி இயக்குநர்கள் நல்ல கதைகளுடன் ஒரே ஒரு வாய்ப்புக்காகச் சுற்றித் திரிகிறார்கள். ஆனால் தமிழ்த் திரையுலகம் பிற மொழியில் பெரிய வெற்றிபெற்ற படங்களின் மறு ஆக்க உரிமையைப் பெறுவதில் காட்டும் ஆர்வத்தைத் தமிழ்க் கதைகளைக் கண்டடைவதில் காட்டுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.

சமீபத்தில் வசூல் சாதனை படைத்த ‘பிரேமம்’ மலையாளப் படத்தின் மறு ஆக்க உரிமையைப் பெறுவதில் தமிழ்த் தயாரிப்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவியது. கெய்கோ ஹிகாஷினோ என்னும் ஜப்பானிய எழுத்தாளர் எழுதிய ‘த டிவோஷன் ஆஃப் சஸ்பெக்ட் எக்ஸ்’ நாவலைப் போன்ற கதைதான் ‘த்ரிஷ்யம்’.

ஜப்பானிய நாவலின் அடிப்படையில் ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ என்னும் திரைப்படமும் வெளியாகி அங்கு பெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறது. ‘த்ரிஷ்யம்’, ‘சஸ்பெக்ட் எக்ஸ்’ ஆகிய இரண்டு படங்களையும் பார்த்தால் இரண்டும் ஒரே கதை என்பதை யாரும் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால் ‘த்ரிஷ்ய’த்தின் இயக்குநர் ஜீத்து ஜோஸப் தனது படம் ‘சஸ்பெக்ட் எக்’ஸின் தழுவலோ நகலோ அல்ல எனத் தைரியமாக மொழிந்தார். கமல் ஹாசன் அதை உண்மை என ஏற்றுக்கொண்டு அந்தக் கதையைப் ‘பாபநாசம்’ என்னும் பெயரில், ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் மறு ஆக்கம் செய்து பெருமை தேடிக்கொண்டார்.

‘உத்தம வில்ல’னின் தோல்வியால் துவண்டிருந்த கமல் ஹாசனுக்கு இந்தப் படம் உற்சாகம் கொடுத்து ‘தூங்காவனம்’ என்னும் மற்றொரு மறு ஆக்கப் படத்தை உருவாக்கவைத்தது. இந்தப் போக்கு, ஒரு புதிய கதைக்குத் திரைக்கதையை உருவாக்கும் சவாலை எதிர்கொள்ளத் திரையுலகினர் அச்சப்படுகிறார்களோ என்னும் சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழ்க் கதாசிரியர்களின் ‘உன்னத’ நிலை!

தமிழ்க் கதையாசிரியருக்கு ஆயிரங்களில் ஊதியம் கொடுக்கவே பலமுறை யோசிக்கும் திரையுலகம் மறு ஆக்க உரிமையைப் பெற வரிசையில் நிற்கிறது, லட்சக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கிறது. ஒருவேளை தமிழிலேயே நல்ல கதையை உதவி இயக்குநர் ஒருவரிடம் கண்டறிந்தாலும் அவரை ஏய்த்து, அந்தக் கதையை அபகரித்து, அல்லது குறைந்த விலைக்கு வாங்கி யாரோ ஒரு புகழ்பெற்ற இயக்குநரின் பெயரில் படத்தை உருவாக்கும் போக்கும் நிலவுகிறது என்பது கவலை தரும் செய்தி.

வெற்றிபெற்ற பல படங்களின் கதைகளுக்குப் பலர் உரிமை கொண்டாடிவருவது அனைவரும் அறிந்தது. தோல்வி அடைந்த ‘லிங்கா’ படத்துக்குக்கூட ஒருவர் உரிமை கொண்டாடி நீதிமன்றத்தின் படியேறினார். வறுமையை நீக்க வேறு வழியற்ற உதவி இயக்குநர்கள் தங்கள் கதையைத் சொற்பத் தொகைக்குத் தாரைவார்த்துவிட்டு, அதன் வெற்றியை யாரோ கொண்டாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மறு ஆக்க உரிமை மூலம் கிடைக்கும் வருவாயின் பொருட்டே இப்படிக் கதைகளுக்கான டைட்டில் அங்கீகாரம் மறுக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையென்றால் இது எவ்வளவு பெரிய அநீதி. அறம் போதிக்கும், கருணையை முன் மொழியும் திரைப்படங்களை உருவாக்குவதில் பேரார்வம் கொண்ட திரைக் கலைஞர்களிடம் மலிந்து கிடக்கும் இந்த அவலத்துக்கு யாரைக் குற்றம்சாட்டுவது?

எடுப்பார் கைப்பிள்ளையாக…

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, அவர் தமிழில் பரவலான அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர். அவரைத் தமிழில் குறிப்பிடத்தகுந்த ஓர் இயக்குநர் அழைக்கிறார். தனது புதிய படம் பற்றிய சில தகவல்களையும் ஆலோசனைகளையும் கேட்கிறார். கதையாசிரியரும் எழுத்தாளருமான அவரும் இயக்குநர் யாசித்த உதவியைச் செய்வதாக வாக்களிக்கிறார்.

எல்லாப் பேச்சுகளும் நிறைவுற்று சன்மானம் என்ற இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். பிடிகொடுக்காமல் நழுவுகிறார் இயக்குநர். அவர் சுற்றிவளைத்துத் தெரிவித்த விஷயம், உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுக்கிறேனே அதுவே சன்மானம்தான் என்பதாக முடிகிறது. தன்மானம் தலைதூக்க எழுத்தாளர் இருகைகூப்பி விடைபெற்றுவிட்டார். இந்த எழுத்தாளர் யார், இந்த இயக்குநர் யார் என்ற விவாதம் அவசியமல்ல. ஆனால் தமிழின் சூழல் இப்படித்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தால் போதும்.

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை இருக்கிறது. எழுத்தாளர் ஒரு கதையை உருவாக்க எந்தச் செலவும் செய்வதில்லை என்று நினைப்பது அறிவுடைமையா? முழு நேர எழுத்தை நம்பிச் செயல்படுபவர்கள் பாடு இன்றும் கவலைக்கிடமானதுதான் என்பது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் அவமானமில்லையா? சில கதையாசிரியர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு அவர்களின் சமூக மதிப்பை உத்தேசித்து கருணை காட்டும் திரையுலகம், தான் பயன்படுத்தும் அத்தனை எழுத்தாளர்களையும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியமல்லவா?

அடிப்படையை மதிக்காத போக்கு

தமிழ்க் கதைகளுக்கும் கதையாசிரியர்களுக்கும் உரிய கவுரவம் கொடுத்து, சன்மானம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நம் மண் சார்ந்த, நம் பண்பாட்டை எடுத்தியம்பும் கதைகளைத் திரைப்படங்களாகக் காணும் வாய்ப்பு உருவாகும். எத்தனையோ உணர்வுசார் செய்திகளும் சம்பவங்களும் நிகழ்வுகளும் தினந்தோறும் நடந்தேறிவருகின்றன.

இவை குறித்த கதைகளை யாராவது எழுதிக்கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் உங்கள் அருகில்கூட இருக்கலாம். அந்தக் கதைகளைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சியும் பொறுமையும் நம்பிக்கையும் தேவை. ஒரு எழுத்தாளரது கதைகளுக்கு உரிய மதிப்பும் ஊதியமும் கிடைத்தாலே போதும், அவர் திருப்தியுறுவார்.

திரைப்படத்தின் அடிப்படை விஷயமான கதை விவகாரத்தில் இவ்வளவு கஞ்சத்தனம் காட்டிவிட்டுப் பின்னர் படம் தோல்வி அடைந்த பின் வருந்துவது சரிதானா? கதைகளின் தேர்வு குறித்து ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் திரையுலகம் இறங்க இனியும் தாமதிப்பது சரியா? தமிழ் சினிமா நூற்றாண்டு கொண்டாடிவிட்டது. இன்னும் பழைய பாதையிலேயே பயணம் மேற்கொள்ளலாமா?

எந்தக் கதைகள் சரித்திரம் படைத்தன?

பிற மொழிப் படங்களைப் பார்ப்பது நமது சினிமா மொழியை விஸ்தரித்துக்கொள்ள உதவும் என்பது உண்மை. திரை நுட்பங்களுக்கான அறிவைப் பெற்றுக்கொள்ள அவை உதவும். தொழில்நுட்பம் வளர்ந்து கிடக்கும் இந்நாட்களில் நம் மண்ணின் அசலான படைப்பை உருவாக்கினால் அவற்றை வாங்கப் பிற மொழியினர் வரிசையில் வருவார்கள். மீண்டும் பாரதிராஜா, மகேந்திரன் எனத்தான் சுட்ட வேண்டியதிருக்கிறது.

அவர்கள் படமாக்கிய கதைகள், நம் கதைகள்தானே. நமது ஆதார பிரச்சினைகளைத்தானே அவர்கள் படமாக்கினார்கள். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வெளியான அந்தப் படங்களை இன்னும் பேசுவது எதற்காக? அவை பரப்பிய அசலான மண்ணின் மணத்துக்காகத்தானே? எழுபதுகளில் 16 வயதினிலே, எண்பதுகளில் ஒரு தலை ராகம், தொண்ணூறுகளில் புது வசந்தம், சேது, இரண்டாயிரத்தில் சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் இங்கேயுள்ள கதைகளைக் கொண்டுதானே சரித்திரம் படைத்தன. தமிழ்த் திரையுலகுக்கும் இலக்கிய உலகுக்கும் இப்போது ஓரளவு ஆரோக்கியமான உறவு உள்ளது போலத்தான் தோன்றுகிறது. தமிழ்க் கதை பற்றிய தேடலைத் தொடங்க இது சரியான தருணம்தான்…

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்