குற்றங்களில் திரைப்படங்களுக்குப் பங்கு இல்லையா?

By பிருந்தா சீனிவாசன்

காதலின் பெயரால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகரித்துவருகின்றன. சமூகத்தில் அரங்கேறும் படுகொலைகள் அதை உறுதிசெய்கின்றன. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியும், தன்னைத்தானே கொலை செய்துகொண்ட சேலம் வினுப்ரியாவும், பலர் பார்க்க நடுரோட்டில் வெட்டிச் சாய்க்கப்பட்ட தெலங்கானாவைச் சேர்ந்த சந்தியாவும் சமீபத்திய உதாரணங்கள். இதுபோன்ற குற்றங்கள் நிகழ ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் திரைப்படங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது.

எப்போதும் கதாநாயக பிம்பங்களோடு தங்களைப் பொருத்திப் பார்க்கும் மனிதர்களால் நிறைந்தது நம் சமூகம். நூறாண்டு வரலாறு கொண்ட தமிழ்த் திரைப்படங்கள் பெண்களை எப்படிச் சித்தரிக்கின்றன? தன்னைக் காதலித்த ஒரு பெண், வேறொருவரை மணந்த பிறகும், ‘தூயவளே நீ வாழ்க’ என்று வாழ்த்திய திரைப்படங்களுக்கு மத்தியில்தான், ‘பொண்ணா பொறந்தா ஆம்பளைகிட்டே கழுத்தை நீட்டிக்கணும், அவன் ஒண்ணு, ரெண்டு, மூணு முடிச்சு போட்டா மாட்டிக்கணும்’ என்ற குரலும் ஒலிக்கத் தொடங்கியது.

ஆணும் பெண்ணும் எதில் சமம்?

பெரும்பாலான பெண் பாத்திரங்களுக்குச் சொற்பமான பங்களிப்பு மட்டும்தான். அம்மாவாக இருந்தால் சமையலறையே கதி. கதாநாயகியாக இருந்தால் கதாநாயகனின் ஒற்றைப் பார்வையிலோ சொல்லிலோ மயங்கி, பனிபடர்ந்த சிகரங்களில் அரைகுறை ஆடையுடன் ஆடிப்பாட வேண்டும். அக்கா, தங்கைகளாக இருந்தால் அயோக்கியனுக்கு வாழ்க்கைப்பட்டுக் கண்ணீர் சிந்த வேண்டும்.

திரையில் பெண்களை அவமானப்படுத்தும் போக்கு நீண்ட காலமாகத் தொடர்வது. ஒரு படத்தில் அம்மாவைத் தெய்வமாக வணங்கும் நடிகர் இன்னொரு படத்தில் ‘பொண்ணுன்னா பொறுமையா இருக்கணும், இப்படி பஜாரித்தனம் பண்ணக் கூடாது’ என்று பாடம் நடத்துவார். தன்னுடன் நடனப் போட்டிக்கு வந்திருக்கும் நடிகையின் முன்னால் சட்டையைக் கழற்றி எறிந்துவிட்டு, ‘உன்னால் இப்படி ஆட முடியுமா?’ என்று கேட்டு, அந்தப் பெண்ணைச் சபை நடுவே கூனிகுறுகச் செய்வார். ‘தலைவர் பின்னிட்டார்பா’ என்று கைதட்டும் ரசிகர்களில் சிலராவது தங்களுக்குத் தெரிந்த பெண்ணிடம் இதே உத்தியைக் கையாள மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் உண்டா?

‘நான் ஆம்பிளை. வேர்க்குதேன்னு எல்லா டிரெஸ்ஸையும் கழட்டிப் போட்டுட்டு நடப்பேன். உன்னால அப்படி நடக்க முடியுமா?’ என்று கதாநாயகியைப் பார்த்துக் கேட்பதுதான் ஆண்மை என்பதைத்தான் பெரும்பாலான படங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவருகின்றன. அதனால்தான் குளியறையில் தன்னைப் பார்த்துவிடுகிற கதாநாயகனிடம், ‘நீ என்னை முழுசா பார்த்துட்டியா, அப்படின்னா நீதான் என் புருஷன்’ என்று கதாநாயகியால் சொல்ல முடிகிறது. பெண்ணின் உடல் சார்ந்தே எடுக்கப்படும் இதுபோன்ற காட்சிகள் பெண் என்றால் உடல் மட்டும்தான் என்பதை வலியுறுத்துகின்றன.

‘வீட்ல போட்டுக்கற பனியனையும் டிரவுசரையும் வெளியில போட்டுக்கிட்டு வந்தா ஒரு பையனுக்கு ஆசை வரத்தான் செய்யும்’ என்று பெண்ணின் உடையணியும் விதத்தைக் கேலி பேசுகிறான் கதாநாயகன். உடனே அவளும் நாணமுற்று, புடவையைக் கட்டிக்கொண்டு வெட்கத்துடன் தலை குனிவாள். இதுபோன்ற வசனங்களைக் கேட்டுவளர்கிற இளைஞர்கள், தாங்கள் செய்கிற தவறுகளுக்கும் பெண்களின் உடையணியும் பாங்கைத்தானே காரணமாகக் காட்டுவார்கள்?

தொட்டவுடன் மலர்ந்துவிடுமா காதல்?

கதாநாயகன் தன் காதலைச் சொன்ன அடுத்த கணமே கதாநாயகி அவனுடைய காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். முடியாது, இல்லை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. அப்படி ஏற்கவில்லை என்றால் துரத்தித் துரத்தியே உயிரைவாங்குவார்கள். கையைத் தொடுவதால், கண்ணில் விழுந்த தூசியை ஊதுவதால், தடுக்கி விழுந்தால் தாங்குவதால் எல்லாம் ஒரு பெண்ணுக்குக் காதல் வந்துவிடாது. நம் செயல்கள் அனைத்துக்கும் இவன் பக்கபலமாக இருப்பான் என்ற நம்பிக்கையே ஒரு ஆண் மேல் பெண்ணுக்குக் காதலை ஏற்படுத்தும் என்ற புரிதல் இல்லாமல் சித்தரிக்கப்படுகிறது திரைக் காதல்.

வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் கதாநாயகனை ஏன் ஒரு பெண் காதலிக்க வேண்டும்? உதவாக்கரையைக்கூடக் கரை சேர்க்கும் வல்லமை பெண்களுக்கு உண்டுதான். ஆனால் அந்த உதவாக்கரைகூட அவளுடைய தேர்வாக இருக்க வேண்டுமே தவிர துரத்தித் துரத்திக் கொல்லக் கூடாது. பல படங்கள் இப்படியான கதைப்போக்கில் அமைகின்றன.

பகிரங்கப் பாட்டு

கதாநாயகனை வேண்டாம் என மறுத்துவிட்டு, தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்கிற பெண்ணைப் பற்றி ஏதாவது படம் வந்திருக்கிறதா? அப்படியே புறக்கணித்தாலும் வக்கிர புத்திகொண்ட ஒருவனுக்கு மனைவியாகி அவள் சீரழிந்து போவதாகத்தான் படம் நகரும்.

‘குத்துங்க எசமான் குத்துங்க, இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ என்ற வசனம் இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன? ஒரு பெண் காதலை மறுத்துவிட்டால், ‘வெட்றா அவளை, அடிடா அவளை’ என்று பகிரங்கமாகப் பாடுவதன் மூலம், காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணைக் கொலைசெய்வதில் எந்தத் தவறும் இல்லை என்பது உணர்த்தப்படுகிறது. ‘நாங்க எல்லாம் முடிவு பண்ணிட்டா உலக அழகியையே ஒரே வாரத்தில் மடக்கிடுவோம்’ என்று உபநடிகர்கள்கூடத் தங்கள் பங்குக்கு இளைஞர்களைத் தூண்டிவிடுகிறார்கள். செம கட்டை, ஃபிகரு, மேட்டரு போன்ற வார்த்தைகளால் கேவலப்படுத்துவது போதாதென்று, கரெக்ட் பண்ணிடுவேன், ஈஸியா மடிஞ்சிரும் என்பது போன்ற வார்த்தைகளின் மூலம் பெண்களின் தேர்வு என்பது சிறுமைப்படுத்தப்படுகிறது. ‘இளைஞர்களுக்கான படம்’ என்று சொல்லப்படும் படங்கள், இளைஞர் களின் மன வக்கிரங்களைக் காட்சிப் படுத்துவதாகத்தான் அமைந்திருக்கின்றன.

காதலின் பெயரால்...

ஒரு ஆணின் துயரங்களுக்கெல்லாம் பெண்ணே காரணம் என்ற செய்தியும் பெரும்பாலான படங்களில் முன்வைக்கப்படுகிறது. ஒருவன் குடித்தால், இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், குடும்பம் உடைந்தால் என்று அனைத்துக்கும் பெண்ணே காரணமாம். யார் வேண்டுமானாலும் ஒரு பெண்ணை பகிரங்கமாக அவமானப்படுத்தலாம். நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கலாம். காதலிக்க மறுத்தால் கொலையும் செய்யலாம். இதுதான் நம் திரைப்படங்கள் உணர்த்தும் செய்தி.

காதலின் பெயரால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ‘என்னைத் தவிர வேற யாரு உன்னைத் தொட்டுடறான்னு பார்க்கிறேன்’ என்ற சூளுரையோடு தோள் பையில் அரிவாளுடன் யாரேனும் நடந்துசென்றுகொண்டிருக்கலாம். அவர் மனதில் பெண்ணைத் துரத்தும், மறுத்தால் அவளை ‘வெட்டுடா’ என்று சொல்லும் நம் கதாநாயகனின் பிம்பம் அழுத்தமாக உட்கார்ந்திருக்கலாம். நாட்டில் நடக்கும் பெண் சீண்டல்களுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், பெண்ணுக்கு எதிரான குற்றங்களுக்கும் இந்த பிம்பத்துக்கும் தொடர்பு இல்லை என்று சொல்லிவிட முடியுமா? இந்தப் பிம்பத்தைக் கட்டமைக்கும் படைப்பாளிகளும் கலைஞர்களும் இதை உணர்வார்களா? மக்கள் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்ட திரைப்படம் என்னும் அற்புதமான கலைக்குப் பின்னால் இருக்க வேண்டிய பொறுப்பைத் திரைப் படைப்பாளிகள் புரிந்துகொண்டு செயல்படுவார்களா?

ஹீரோயின் சப்ஜெக்ட்

சில படங்களை ‘ஹீரோயின் சப்ஜெக்ட்’ என்பார்கள். இந்த முத்திரையே ஆணாதிக்கத்தை உணர்த்துகிறது. ஆண்கள் நிறைந்திருக்கிற, ஆண்கள் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கிற ஒரு துறையாக திரைப்படத் துறை இருக்கிறது. காலங்காலமாக ஆண்களை மையப்படுத்தி மட்டுமே படங்கள் வெளிவருகிற ஒரு துறையில் பெண்களை மையப்படுத்தி மிக அரிதாகவே படங்கள் வெளியாகின்றன என்பதையே இந்த முத்திரை காட்டுகிறது. இப்படிப்பட்ட படங்களிலும் பெண்களைப் புனிதப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஆவணப்படம்போல எதையாவது எடுத்துவைப்பார்கள். உப்புச் சப்பற்ற அந்தப் படம் விரைவில் திரையரங்கிலிருந்து வெளியேறும்.

நம் இயக்குநர்கள் பலரும் கல்வி, வேலை, நிர்வாகம், சாதனை, ஆளுமை இவை எதுவுமே பெண் முன்னேற்றம் இல்லை என்றே கருதுவதாகத் தெரிகிறது. சுதந்திரமான பாலியல் தேர்வு கொண்டவளாகப் பெண்ணைச் சித்தரிப்பதுதான் முற்போக்கு என்றே பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படுகிறது.

ஏன் பெண்களுக்கென்று தனியாகப் படம் எடுக்க வேண்டும்? எடுக்கிற படங்களிலேயே ஆணுக்கு நிகராகப் பெண் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் என்ன? சமையலறை, டூயட், படுக்கையறைக் காட்சிகளோடு மட்டும் பெண்களை முடக்காமல் அவர்களின் ஆளுமையைப் பற்றிச் சொல்லலாமே. ஹாலிவுட்டை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிற இயக்குநர்கள் பலருடைய கண்களுக்கும் அங்கே பெண்களை மையமாக வைத்தே பல படங்கள் வெளிவருவது தெரியாதா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்