பாலிவுட்டில் நுழைவது சாதனை அல்ல!- விஜய் ஆண்டனி நேர்காணல்

By ஆர்.சி.ஜெயந்தன்

இசையமைப்பாளர், கதாநாயகன், வசூல் நாயகன் என உயர்ந்து நிற்கிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பு, இசையமைப்பு, தயாரிப்பில் அடுத்தடுத்து ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், பாலிவுட்டிலும் கவனத்தை செலுத்தத் தொடங்கியிருக்கிறார் விஜய் ஆண்டனி. அவரிடம் உரையாடியதிலிருந்து…

பிச்சைக்காரன் தெலுங்குப் பதிப்பின் வெற்றி, நேரடி தெலுங்குப் படங்களில் நடிக்க வேண்டும், பாலிவுட்டிலும் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறதா?

சினிமாவுக்கு மொழியோ எல்லைகளோ முகங்களோ தேவையில்லை என்று நினைக்கிறேன். சினிமாவை இயக்குவது மனித உணர்ச்சி என்கிற மொழிதான். நல்ல கதை, நல்ல படம் என்றால் உலகில் எங்கு வேண்டுமானாலும் நமது படங்கள் ஓடும். பிச்சைக்காரன் தமிழைவிடத் தெலுங்குப் பதிப்புக்கு மூன்று மடங்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இதனால் அடுத்து வெளியாகவிருக்கும் ‘சைத்தான்’ படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுகிறோம்.

பாலிவுட் பற்றிக் கேட்கிறீர்கள். இப்போதைக்கு ‘சைத்தான்’, ‘எமன்’ ஆகிய இரண்டு படங்களுக்காக மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறேன். அதே நேரம் பாலிவுட்டையும் தமிழ்ப் பட உலகம்போல்தான் நான் பார்க்கிறேன். அங்கே போய் ஒரு இந்திப் படத்தில் நடிப்பதையும் அதை இயக்குவதையும் நான் சாதனையாகவெல்லாம் பார்க்கவில்லை. இந்திப் படம் இயக்கி நடிக்கும் திட்டம் இருக்கிறது. அப்படி நுழைந்தால் அது ‘பிச்சைக்காரன்’ படத்தின் மறுஆக்கமாகக்கூட இருக்கலாம். இன்னும் முடிவு செய்யவில்லை. அவ்வளவுதான்.

பிச்சைக்காரர்கள் மீதான உங்கள் பார்வை என்ன?

நானுமே ஒரு பிச்சைக்காரன்தான். இசையமைப்பாளர் ஆவதற்காகப் பல கம்பெனிகளில் ஏறி இறங்கிப் பிச்சை எடுத்திருக்கிறேன். நாம ஸ்டைலா வாழ்க்கைன்னு சொல்லிக்கிறோம். ஆளுக்கு ஆள், மனிதனுக்கு மனிதன் எதைப் பிச்சையாகக் கேட்கிறோம் என்பதில்தான் இங்கே வேறுபாடு.

‘பிச்சைக்காரன்’ படத்துக்காக இயலாமையால் பிச்சையெடுக்கிற மனிதர்களின் உலகத்தை ஆராய்ச்சி செய்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நானே ஒரு மிகச் சாதாரண பின்னணியிலிருந்துதான் வந்திருக்கிறேன். எனவே பசி என்றால் என்னவென்று தெரியும். பட்டினி புரியும். சொந்த உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில்தான் அவர்கள் கையேந்துகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்குக் குடும்பங்கள் இருக்கின்றன. கனவுகள் இருக்கின்றன. வாழ்க்கையை அவர்கள் நேசிக்கிறார்கள். ‘பிச்சைக்காரன்’ படத்துக்காக நிஜப் பிச்சைக்காரர் ஒருவரையே இயக்குநர் என்னுடன் நடிக்க வைத்தார். அவரிடம் நான் விசாரித்தேன். “நான் பிச்சையெடுத்து என் மகளைப் பள்ளியில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன்” என்றார். உண்மையில் அவர்தான் ஹீரோ. அவரது மகளுக்கு இவர்தான் சூப்பர் ஸ்டார்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எப்படி இருக்கிறார்?

பத்திரமாக இருக்கிறார். பிச்சைக்காரன் பாடல்கள் ஹிட் ஆனபோது “என்ன சார்.. அம்மா செண்டிமெண்ட் பாட்டெல்லாம் போடுறீங்க? அந்த டிரெண்டெல்லாம் முடிச்சுபோச்சு” என்று சொன்னார்கள். ஆனால் கதையை தாங்கிப் பிடிக்கிற பாடல்கள் ஒரு திரைக்கதைக்கு எவ்வளவு முக்கியம் என்று ஒரு இசையமைப்பாளராக எனக்குத் தெரியும். பிச்சைக்காரன் படத்தில் பிச்சைக்காரர்கள் வாழ்க்கை பற்றி ஒரு பாடல் இல்லை என்றால் அது நேர்மையாக இருந்திருக்காது. அதேபோல அந்தப் படத்தில் ‘உனக்காக வருவேன்’ பாடல் காட்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகர்கள் அழுததைப் பார்த்தேன். நான் நினைத்திருந்தால் ஒரு காதல் பாடல்தானே என ஆடியன்ஸ் மீது பழியைப் போட்டுவிட்டு அதைக் குத்துப்பாடலாக இடம்பெறச் செய்திருக்க முடியும். ஆனால், கதை கேட்பது அதையல்ல என்று தெரிந்திருப்பதால்தான் நான் எனது படங்களுக்கு இசையமைப்பாளராகவும் நீடிக்க முடிகிறது.

உங்கள் படங்களில் இருக்கும் காதல் காட்சிகளில் இறுக்கமான முகத்தோடு தோன்றுகிறீர்களோ, ஏன்?

அது உண்மைதான். நிஜ வாழ்க்கையில், சினிமாவில் நிறைய பொறுப்புகளைச் சுமந்துகொண்டிருப்பதால் அதனால் வரக்கூடிய அழுத்தம் என் முகத்தை இப்படி வைத்துக்கொள்ளக் காரணமாக இருக்கிறதோ என்று நினைக்கிறேன். தவிர எனக்கு இதுவரை அமைந்த படங்கள் அனைத்துமே காதலை முதன்மைப்படுத்தாத படங்கள்தான். ஒரு முழுமையான காதல் கதை அமையும்போது உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்.

புதிய கதாநாயகிகளை அறிமுகப்படுத்துகிறீர்கள். ஆனால் த்ரிஷா, நயன்தாரா என்று முன்னணிக் கதாநாயகிகள் பற்றி யோசிப்பதே இல்லையே ஏன்?

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்கே முதலிடம் கொடுக்க விரும்புகிறேன். அப்படிப் புதியவர்களுக்குக் கொடுக்கும்போது குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை முடித்து ரிலீஸ் செய்யலாம். நீங்கள் நடிச்சா படம் ஓடும் என்று முன்னணி நட்சத்திரங்களிடம் போய்க் கேட்கக் கூச்சப்படுகிறவன் நான். ஆனால், கதைக்குத் தேவை என்று முடிவு செய்துவிட்டால் முன்னணி நட்சத்திரங்களைக் கண்டிப்பாக நாடுவேன்.

உங்கள் மனைவியை ஒரு படத்திலாவது கதாநாயகி ஆக்க வேண்டும் என்ற திட்டம் இருக்கிறதா?

திருமணத்துக்கு முன்புவரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர்தான் அவர். நான் அவரைத் தயாரிப்பாளராக்கி மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறேன். அவரோ இப்போது என்னையும் எங்கள் குழந்தைகளையும் அழகுபடுத்திப் பார்ப்பதிலேயே நிறைவடைந்துவிடுகிறார். ‘சலீம்’ படம் வெளியாவதற்குப் பெரும் போராட்டத்தைச் சந்தித்தேன். அதிலிருந்து நான் விடுபட வேண்டும் என்று தனது தலைமுடியைத் தியாகம் செய்தார். அப்படிச் செய்தபோது அதைப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காகவும் செய்தார். அந்த அளவுக்கு அக அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைப்பவர். அவருக்குத் திரையில் தோன்ற வேண்டும் என்பதில் துளியும் விருப்பமில்லை.

‘சைத்தான்’ படம் எப்படி வந்திருக்கிறது? இதில் முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறீர்களா?

இந்தப் படத்தில் கதைக்குத் தேவையான ஆக்‌ஷனை மட்டுமே செய்திருக்கிறேன். படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு ‘இது என்ன வகைப் படம் சார், தயவுசெஞ்சு சொல்லுங்க’ என்று துளைத்து எடுக்கிறார்கள். இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். நம்பித் திரையரங்குக்கு வருகிற மக்களை எந்த வகையிலும் ஏமாற்றக் கூடாது என்றுதான் ஒவ்வொரு படத்திலும் எல்லா வேலைகளையும் எனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு செய்கிறேன். இந்தப் படம் ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்