சினிமா எடுத்துப் பார் 68: அதிக தழும்புகள் பெற்ற கதாநாயகன்!

By எஸ்.பி.முத்துராமன்

‘எனக்குள் ஒருவன்’ படத்தின் கிளை மாக்ஸ் காட்சியில் கேமராவை விஞ்ச் நெருங்கி வரவர டூப்புக்கு பதிலாக கமலே தொங்கிக்கொண்டு வருவது தெரிந்தது. அதை பார்த்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். ஒன்றும் புரியாமல் பதற்றத்தோடு நின்றேன். அந்த விஞ்ச் நாங்கள் நின்ற மலையில் வந்து நின்றது. நான் கமலை நோக்கி ஓடினேன்.

நான் திட்டுவேன் என்று தெரிந் ததும் கமல் என்னை நோக்கி ஓடிவந்து கட்டிப்பிடித்துக்கொண்டு, ‘‘பதற்றப் படாதீங்க, சார். ஒண்ணுமில்ல. ஒண்ணு மில்ல!’’ என்று என்னை சமாதானப் படுத்தினார். கமலுக்கு இப்படி ரிஸ்க் எடுப்பது வாடிக்கையான ஒன்று. கமல் உடம்பில் அடிபடாத இடமே இல்லை. அவரை அதிக தழும்புகள் பெற்ற கதாநாயகன் என்று சரித்திரம் சொல்லும். சமீபத்தில்கூட மாடிப் படிகளில் இருந்து விழுந்து கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவர் விரைவில் குணமடைய நாம் எல்லோரும் வாழ்த்துவோம். அந்த வளர்ந்த குழந்தையை ஏன் இப்படி ரிஸ்க் எடுக்குறே என்று திட்டவும் முடியாது, அடிக்கவும் முடியாது. அதுதான் கமலின் வீரம் - சுபாவம்!

நான் பதற்றத்தில் இருந்தாலும் ஒளிப்பதிவாளர் பாபு, விஞ்சில் கமல் தொங்கிவந்த பயங்கரமான காட்சிகளை சிறப்பாக ஒளிப்பதிவு செய்துவிட்டார். அதன்பிறகு சத்யராஜை க்ளோஸ் அப்பில் மேட்ச் செய்து அந்தக் காட்சி களை எடுத்து முடித்தோம். அந்தக் காட்சி மிகவும் த்ரில்லிங்காக அமைந்தது. இந்தப் படத்தில் சிறந்த நடன மங்கையாக இருந்த ஷோபனாவை கதாநாயகியாக அறிமுகம் செய்தோம். அவர் நடன மங்கை மட்டுமல்ல; சிறந்த நடிகையும் கூட என்பதை நிரூபித்தார். இன்றைக்கு சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கும் சார்லியும் அந்தப் படத்தில்தான் அறிமுக மானார். இவர்களோடு பிரியாவும் நடித்தார்.

கமலும் இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்களில் தன் திறமையை காட்டியிருந்தார். நல்ல இசை, நல்ல பாட்டு, நல்ல சண்டைக் காட்சிகள், சிறந்த அரங்குகள், இந்தியாவின் இயற்கை நிறைந்த டார்ஜிலிங் இவ்வளவும் இருந் தும் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எப்போதும் தோல்விக்கு என்ன காரணம் என்று சிந்திப்போம். அப் படி சிந்தித்ததில் முற்பிறவி, மறுபிறவி என்கிற கருவை மக்கள் ஜீரணிக்க வில்லை. ஜீரணிக்கிற மாதிரி நாங்கள் கொடுக்கவில்லை என்றும் சொல்லலாம்.

ஏவி.எம்

தயாரிப்பில் உருவான படம் ‘நல்லவனுக்கு நல்லவன்’. ரஜினி தான் நல்லவனுக்கு நல்லவன். ரஜினி முதல்பாதியில் தாதா. அந்த வேடத்தில் ரஜினி தாதாவாக தத்ரூபமாக நடித்திருந் தார். ஒரு கட்டத்தில் வில்லனின் குகைக்கே சென்று அவரை சந்திப்பார். அந்த வில்லன், ரஜினியை தாக்க பல நாய்களை அவர் மீது பாயவிடுவார். ரஜினி தைரியமாக நாய்களை சமாளிப் பார். ஒவ்வொரு நாயாக தூக்கி விசிறி யடிப்பார். நாய்கள், ரஜினியை கடித்து விடுமோ என்று பயந்தோம். ஆனால், ரஜினியின் வேகத்தில் நாய்கள் வெளியே போய் விழுந்தன. இப்படத்தின் மறுபாதி யில் ரஜினி ‘பணக்காரன்’. ரஜினி ஸ்டைல் நடிப்பை பார்த்து பணக்காரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு நடிப்பு.

தாதா அறிமுகத்தில் ரஜினி, கல்பனா ஐயரோடு ஒரு நடனம் ஆடுவார். அது ‘வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள’ என்று கங்கை அமரன் எழுதிய பாட்டு. அந்தப் பாட்டு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடப்பதைப் போல எடுத்தோம். இவர்கள் ஆடுகிற காட்சி 200 டி.வி-களில் தெரியும். இந்த செட்டப் அப்போது சென்னையில் இல்லை. அதற்காக குகன் அவர்கள் பம்பாய் சென்று டெக்னீஷியன்களோடு கலந்து பேசி செட்டில் 200 டி.விக்களை வைத்து ஷூட் பண்ணினோம். அப்போது அது மிகவும் புதுமையாக இருந்தது. அத்துடன் ரஜினிக்கும், கல்பனா ஐயருக்கும் உடையில் மின் விளக்கு அலங்காரம் செய்து ஆட வைத்தோம்.

இதற்கெல்லாம் மக்களின் கைதட்ட லும், ஆரவாரமும், ஒன்ஸ்மோர்... என்ற குரலும் தியேட்டர்களில் எதிரொலித்தன. ரஜினி ரசிகர்கள் அடித்த விசில் சத்தம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தொழில் நுணுக்கப் ‘புதுமை’களை நாங்கள் அன்றே தொடங்கிவிட்டோம்.

என்றும் பதினாறாக தோன்றும் குணச்சித்திர நடிகை ராதிகா, ஒரு அநாதையாக ‘தாதா’ ரஜினி வீட்டில் வந்து அடைக்கலம் ஆவார். ராதிகாவின் ‘மென்மை’ ரஜினிக்கு பிடித்துவிடும். ரஜினியின் ‘வன்மை’ ராதிகாவுக்கு பிடித்துவிடும். அது காதலாக மாறும். ராதிகா, ‘தாதா’ ரஜினியை கொஞ்சம் கொஞ்சமாக மனிதநேயமுள்ள ரஜினி யாக மாற்றுவார். கவிப்பேரரசு வைர முத்து அவர்கள் இந்த சூழலின் அடிப் படையை வைத்து தன் வைர வரிகளால் எழுதிய பாட்டு, ‘உன்னைத் தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே!’.

இந்தப் பாட்டை கேரளாவில் எடுக்க முடிவு செய்திருந்தோம். அங்கே பருவ மழை கொட்டுகிறது என்ற செய்தி வந்தது. நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் சென்னையைச் சுற்றி பல இடங்களைப் பார்த்து முட்டுக்காட்டை படப்பிடிப்புக் காக தேர்ந்தெடுத்தோம். சரவணன் சார், ‘‘பாட்டு நல்லா வந்திருக்கு. முட்டுக்காட் டுல எடுக்குறேன்னு சொல்றீங்களே?’’ என்று கேட்டார். அதற்கு நானும் பாபுவும், ‘‘கிட்டத்தட்ட கேரளா சூழல் இருக்கு. நல்ல முறையில எடுத்துடுவோம்!’’ என்று கூறி எடுத்தோம். அந்தக் காட்சி அவ்வளவு இயற்கையாக அமைந்தது. ரஜினி, ராதிகா நெருக்கம் என்றைக்கும் நம் கண்ணுக்குள் இருக்கும்.

ராதிகா, ரஜினியைப் பார்த்து ‘‘இனிமேல் எந்த சண்டை சச்சரவுக்கும் போகக் கூடாது. அடிதடியில் ஈடுபடக் கூடாது’’ என்று சத்தியம் வாங்கிக் கொள்வார். ஒருநாள் ரஜினி வேலை முடித்துவிட்டு வரும்போது பழைய கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், “என்ன.. நீ நல்லவனாயிட்டியா?’’என்று வம்புக்கு இழுப்பார்கள். ரஜினி அமைதியாக அவர்களைத் தாண்டி போவார். ரஜினியை இழுத்து சொடுக்குப் போட்டு சொடுக்குப் போட்டு அடிப்பார்கள். அடிகளை வாங்கிக் கொண்டு காயங்களோடு வீட்டுக்கு வருவார்.

ராதிகாவின் தலையில் தான் வாங்கி வந்த மல்லிகைப் பூவை சூடப் போவார். அப்போது ராதிகா அடிபட்ட ரஜினியைப் பார்த்துவிட்டு, ‘என்ன ஆரம்பிச்சுட்டீங்களா? முகத்துல என்ன ரத்தக் காயம்?’’ என்று கேட்பார். அதற்கு ரஜினி நடந்ததைச் சொல்லி, ‘‘உன்கிட்ட சத்தியம் பண்ணினதால அடிக்காம வந்துட்டேன்!” என்று கூறுவார். ராதிகா, ‘வம்பு சண்டைக்கு நீங்க போகக்கூடாதுன்னு சொன்னேனே தவிர, உங்களை அடிச்சா வாங்கிட்டு வரச் சொல்லலை. போய் அவங்களுக்கு திருப்பி கொடுத்துட்டு வந்து என் தலையில பூவை வையுங்க!’’ என்பார். ரஜினி அந்த ரோஷத்தோடு போய் அந்தக்கூட்டத்தை சொடக்குப் போட்டு சொடக்குப் போட்டு நொறுக்கித் தள்ளுவார். வீட்டுக்கு வந்து ராதிகா தலையில் பூவை வைக்க மக்களின் கைதட்டல் வெற்றி முரசாக கொட்டும். அந்த மல்லிகைப் பூவின் மணம் மகள் துளசியாக மலரும்.

விசு அவர்கள் குடும்பத்துக்கு தலைவர். ரஜினிக்கு முதலாளி. நகைச் சுவை கலந்த நல்ல கதாபாத்திரம். ரஜினியின் நல்ல குணங்கள் விசுவுக்கு ரொம்ப பிடித்துப்போகும். விசு எவ் வளவு நல்லவரோ, அவ்வளவு கெட்ட வர்கள் அவரது குடும்பத்தினர். விசுவின் பையனாக யாரைப்போடுவது என்று யோசித்தோம். கதாநாயகர்களை வில்ல னாக போடுவது எங்களுக்கு ராசி. காதாநாயகன் கார்த்திக்கை வில்லனாக போடுவது என்று முடிவு செய்து அவரை அழைத்துப் பேசினோம். அவர் வில்லனாக நடிக்க மறுத்தார். அவரை எப்படி சம்மதிக்க வைத்தோம்?

- இன்னும் படம் பார்ப்போம்... | படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்