சினிமாவுக்கான ஓர் இயக்கம்

தொடக்கத்தில் சினிமாவுக்கு இணையான மாற்று முயற்சிகள் என்பது தமிழில் கேள்விக்குரிய ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவை தனித் தனியானவையாக மறைந்துபோயின. ஓர் அமைப்பு இல்லாததுதான் இதற்கான காரணம் எனலாம். இன்று தமிழ் ஸ்டுடியோ அவ்வகையான முயற்சிகளுக்கான மையமாக உருவாகியுள்ளது. தமிழில் குறும்பட முயற்சிகளைச் செறிவாக்கும் நோக்கில் குறும்படத் திரையிடல்கள் மூலம் தமிழ் ஸ்டுடியோ 2008இல் தன் பணியைத் தொடங்கியது. சென்னை திரைப்படக் கல்லூரி மாணவரான அருண் இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர். “தமிழில் குறும்படங்கள் என்பதே 90களுக்குப் பிறகுதான் உருவாகிறது. அதுவும் மற்ற நாடுகளின் குறும்படங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்க் குறும்படங்களின் தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. திரையிடல்கள் மூலமும் கலந்துரையாடல்கள் மூலமும் இதைச் செறிவாக்கலாம் என்ற நோக்கில்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம்” என்கிறார் அருண்.

குறும்படத் திரையிடல் மூலம் தொடங்கப்பட்ட தமிழ் ஸ்டுடியோ இன்று தமிழில் சினிமாவுக்கான தனித்துவமான இயக்கமாக மாறியுள்ளது. சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்கள் பலருக்கும் தமிழ் ஸ்டுடியோ பயிற்சி அளித்துவருகிறது. எடிட்டிங், இயக்கம், ஒளிப்பதிவு போன்ற துறைகளில் குறுகிய காலப் பயிற்சிகளை அளித்து வருகிறார்கள். சென்னை மட்டுமல்லாது கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்திவருகிறார்கள். மேலும் சினிமா என்பது வெறும் தொழில்நுட்பத்திற்குள்ளேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுடனான உரையாடல்களைப் பயிற்சியின் ஓர் அம்சமாகச் சேர்த்துள்ளார்கள். சினிமாக் கலை அனைவருக்கும் எட்ட வேண்டும் நோக்கத்தின்பேரில் இந்தப் பயிற்சிகளை இலவசமாகவே நடத்துகிறார்கள்.

குறும்பட வட்டம், குறுந்திரைப் பயணம், பெளர்ணமி இரவு, படிமை எனப் பல்வேறு விதமான செயல்பாடுகளின் மூலம் ஓர் ஆரோக்கியமான சினிமாவுக்கான சூழலை உருவாக்க இந்த இயக்கம் களப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. “நல்ல சினிமா உருவாக அதற்கான பார்வையாளர்கள் முக்கியம். பார்வையாளர்களின் ரசனை மேம்பட்டால்தானே நல்ல சினிமா சாத்தியம். அதனால் நல்ல தரமான சினிமாக்களைத் திரையிட்டு அது குறித்து உரையாடுவதன் மூலம் ரசனைகளின் பார்வை மாறும் என நாங்கள் நம்புகிறோம். மேலும் சென்னை, புதுச்சேரி போன்ற ஊர்களில் சிறந்த குறும்படங்களைத் திரையிடுகிறோம். இதன் மூலம் குறும்படங்கள் குறித்தான புரிதலைப் பொதுவெளியில் ஏற்படுத்த முயல்கிறோம்” என்கிறார் அருண்.

இவை மட்டுமல்லாது ஆண்டுதோறும் குறும்படக் கலைஞர்களுக்கு லெனின் பெயரில் விருதுகள் வழங்கிக் கெளரவிக்கிறார்கள். தீவிர முயற்சியின்பேரில் பல அரிய திரைப்படங்களைச் சேகரித்துத் திரையிட்டு வருகின்றனர். 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறும்படச் சேகரிப்பும் இவர்களிடம் உள்ளது. ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை இந்த இயக்கம் தனியாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இப்போது இந்திய சினிமாவின் நூற்றாண்டை ஒட்டித் தங்கள் சேகரிப்பில் உள்ள 100 அரிய திரைப்படங்களைத் திரையிட்டு வருகிறார்கள். “தமிழ் ஸ்டுடியோவில் பயிற்சிபெற்றவர்கள் இன்று சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள். இது நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருக்கிறது” என்கிறார் அருண். சினிமா ஆர்வலர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE