சர்வதேச சினிமா: த கலர்ஸ் ஆஃப் மவுண்டைன்- கண்ணிவெடிகளுக்கிடையே சிக்கிய கால்பந்து

By பால்நிலவன்



தீவிரவாதம் நம்வீட்டுக் கதவைத் தட்டும்வரை பெரும்பாலும் அது ஒரு பிரச்சினையாகவே நமக்குத் தோன்றுவதில்லை. த கலர்ஸ் ஆஃப் மவுண்டைன் (The colours of Mountain) எனும் ஸ்பானிஷ் மொழியிலான கொலம்பிய நாட்டுத் திரைப்படம் தீவிரவாதத்தின் கரிய பக்கங்களை, வன்முறைக் காட்சிகளின்றிக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது. மலையில் விவசாயம் செய்து, கால்நடை வளர்த்துவரும் சின்னச் சின்ன மனிதர்களின் வாழ்வு மொழிக்குள் சிக்காத ஒரு கவிதை போன்றது.

அவர்களின் அன்றாடங்களில் நுழைந்து பார்த்தால்தான் தெரியும், அவர்களின் பிழைப்பும் அழகுமிக்க வாழ்க்கை அனுபவமும் எவ்வளவு எளிமையானவை என்பது கால்பந்து ஒன்றுடன் வீட்டிலிருந்து புறப்பட்டு மலைச்சரிவுகளின் ஒற்றையடிப் பாதையெங்கும் நண்பர்களைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் அந்த ஒன்பது வயதுச் சிறுவன் மானுவலின் பார்வையிலிருந்துதான் இப்படம் பேசுகிறது.

அசலான மனித உணர்வு

மலைச்சரிவின் ஒரு முகட்டில் இருக்கிறது அந்த ஓட்டு வீடு. பசுமாட்டிடம் பால் கறக்கும் நேரம். விவசாயி எர்னஸ்டோ தன் மகனை அழைத்துக் கன்றுக்குட்டியைப் பிடித்துவரும்படி சொல்ல 4-ம் வகுப்புப் பயிலும் சிறுவன் மானுவல் தன் தந்தையின் கட்டளையை ஏற்று வீட்டு முற்றத்தின் வேறொரு திசையில் கட்டப்பட்டிருக்கும் வெள்ளை வண்ணக் கன்றுக்குட்டியை அவிழ்த்துப் பிடித்துவருகிறான்.

பால்கறக்கத் தயாராக உள்ள தந்தை அருகே கொண்டுவந்து விட்டுட்டு அவரிடம், “அப்பா பக்கத்து நிலத்துக் கன்னுக்குட்டி கறுப்பா இருக்குல்ல? அதனால அதுக்கு நைட்னு பேர்வச்சிருக்காங்க. நம்மளோட இந்தக் கன்னுக்குட்டிக்கும் ஒரு பேர் வைக்கணும்ப்பா…” என்கிறான்.

“ ‘பாலமோ’ (வெண்புறா) ன்னு வைக்கட்டுமா” என்று கேட்பான். “அதெல்லாம் வேண்டியதில்லை. பிராணிகள் பேர்ல பாசம் வைக்காதே. அதை நாம எப்பவேணும்னாலும் கொல்ல வேண்டியிருக்கும்”. இயக்குநர் அசலான மனிதாம்சங்களைக் காட்டிச்செல்கிறார் என்பதற்கான உதாரணம் இது.

கிளர்ச்சியாளர்களான கெரில்லாக்கள் அவர்கள் இருப்பிடத்தைத் தேடி வர, அப்பா அவனை அழைத்துச் சென்று ஓரிடத்தில் ஒளிந்துகொண்டு கவனிப்பார். எர்னஸ்டோ கூட்டங்களுக்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டு விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை எர்னஸ்டோ மனைவியிடம் கூறி எச்சரித்துவிட்டுச் செல்வார்கள் அவர்கள்.

- கார்லோஸ் செசார் அர்பெலேஸ்.

நகரத்துக்குச் சென்று முயல்குட்டியை நிம்மதியாக விற்றுவிட்டு ஒரு கடையில் உட்கார்ந்து தந்தையோடு ஒரு குளிர்பானத்தை அருந்தத் தொடங்கும்போது ஜன்னலில் தெரியும் கெரில்லாக்களைப் பார்த்து தந்தை எர்னஸ்டோ “வா இங்கிருந்து கிளம்பிடலாம்” என்று இழுத்துச்செல்வார். குளிர் பானத்தைக்கூடக் குடிக்க முடியவில்லையே என்று எண்ணுவான். ஜீப்பில் மலைக்குத் திரும்பும்போது வருத்தமாக இருக்கும். கெரில்லாக்களால் ஏற்படும் இந்த வருத்தம் வெவ்வேறு வகையாக அவனைத் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.

கலக்கம் தரும் கண்ணிவெடி

மானுவல் பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த கால்பந்தை எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் மலைச் சமவெளியில் விளையாடச் செல்வான். அந்தப் பந்து உதைபட்டு வெகு தூரத்தில் போய் விழும். அதே நேரம் மானுவலின் தந்தை ஒரு பன்றியுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருப்பார். பன்றி அவரிடமிருந்து தப்பித்து ஓடி இவர்களது கால்பந்துபோய் விழுந்த திசையில் ஓடும், அப்போது நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பன்றியின் கால் பட்டு வெடிக்க, பன்றி வெடித்துச் சிதறும்.

பிறந்தநாள் பரிசாகத் தந்தை கொடுத்த கால்பந்து எடுக்க முடியாத இடத்தில் போய் விழுந்துவிட்டதை எண்ணி வருந்துவான். எனினும் அதை எடுக்க நண்பர்களை அழைத்துச் சென்று பல்வேறு முறை முயல்கிறான்.

ஒரு நீரோட்டம் போல் செல்லும் இப்படத்தில் ஓரிரு இடங்களில் ரத்தமும் லேசாகக் கலக்கிறது. மலைக்கிராமப் பள்ளிக்கூடத்துக்குப் புதிதாக மாற்றலாகி வந்துள்ள துணிச்சலான இளம் ஆசிரியை கார்மென், மாணவர்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பாடங்களைச் சொல்லித் தரத் தொடங்குகிறார்.

ஒருநாள் கெரில்லாக்கள் வந்து “வகுப்பறையை இழுத்து மூடிட்டு இடத்தை உடனே காலி செய்” என மிரட்டுவார்கள். அந்த ஆசிரியையோ சிறிதும் கவலைப்படமாட்டார். ஆனாலும் அவர்களது அச்சுறுத்தல் மனதை உறுத்திக்கொண்டிருக்கும். அதனால் மாணவ மாணவிகளைப் பள்ளிக்கூடப் பக்கவாட்டு சுவருக்கு அருகே அழைத்துச் செல்வார்.

அந்தச் சுவரில் நீண்ட நாட்களாக இருந்துவந்த “மக்களே ஆயுதம் ஏந்துவீர்... சாவு அல்லது வாழ்வு” என எழுதப்பட்ட கெரில்லா வாசகத்தின் மீது முதல் கட்டமாக வெள்ளையடிப்பார். அதன் பின் குழந்தைகளை அழகழகான ஓவியங்களை வரையச் சொல்வார்.மாணவ மாணவியரின் தூரிகை வண்ணத்தில் மலைகள் மேகங்கள், மலைவீடுகள், மரங்கள் பறவைகள் மலை உச்சியிலிருந்து புறப்பட்டு வரும் நதி என அந்தச் சுவரே இயற்கையெழிலின் உறைவிடமாக மாறிவிடுகிறது.

தொடங்கும் விவாதம்

பலமுறை மிரட்டலுக்குள்ளானாலும் கவலைப்படாத ஆசிரியை வகுப்பறையில் மாணவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து நான்கைந்து பேரே அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒருநாள் அவர் அழுதுவிடுவார். துணிச்சலான ஆசிரியை இப்படி என்று அந்த சில மாணவர்களும் அவரை வித்தியாசமாக பார்க்க, உடனே எல்லாரும் வீட்டுக்குப் போகலாம் என்று கூறிவிட்டு அவரும் புறப்பட்டுச் செல்வார்.

மானுவல் அவரைப் பின்தொடர்ந்து ஓடிச்செல்லும் காட்சி லேசான கீறலை நம் மனதில் தீற்றிச்செல்கிறது. கொலம்பியாவில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுதப் போருக்கு அடிப்படை, அந்நாட்டு மக்களின் வாழ்வில் 60 ஆண்டுகளாக இருந்துவரும் பொருளாதார, அரசியல் சமூக நிலைகளில் காணப்படும் ஏற்றத்தாழ்வு. அதற்காக ஆயுதம் ஏந்துகிற அமைப்புகளை இப்படம் நேரடியாகக் குறைசொல்லவில்லை.

பெரும் வாதங்களையும் இப்படம் முன்வைக்கவில்லை. நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உருவான போக்காகத் தீவிரவாதம் இருக்கலாம். வரலாற்றின் மாற்றத்துக்கு வித்திடுவதற்கான பெரும்பணியைக்கூட அது ஒருவேளை செய்யக்கூடும். ஆனால் அதன் அத்தனை சேதாரங்களிலும் விளைவுகளிலும் பாதிக்கப்படுவதென்னவோ சிற்றுயிர்களின் அன்றாட வாழ்வுதான் என்பதைத்தான் மிக அழகாக விளக்கிச் செல்கிறது இத்திரைப்படம்.

வகுப்புத் தோழன் ஜூலியன் தன் குடும்பத்தோடு ஊரை விட்டுச் சென்ற பிரிவு வாட்ட அவனை தேடி அலைவது உள்ளிட்ட காட்சிகள் பலவற்றிலும் மானுவலாகவே வாழ்ந்துவிட்ட 9 வயது ஹெர்னேன் மௌரிசியோ ஒகேம்போவின் நடிப்பு படத்தின் தீவிரத்தை வலியோடு உணர வைக்க உதவுகிறது.

மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்ட ஒரு உள்நாட்டுக் கலகத்தைப் பேசத் துணியும்போது அச்சத்திலும் மன உளைச்சலிலும் பரிதவிக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தங்கள் உற்ற சொந்தங்களைப் பிரிந்து மலைச்சரிவுகளிலிருந்து மெல்ல மெல்ல வேகன்களில் புறப்பட்டுச் செல்வதைத்தான் காட்டுகிறார் இயக்குநர். தீவிரவாதத்தைப் பற்றிய படைப்பாக்கத்தை எப்படிக் கவனமாக உருவாக்க வேண்டும் என்பதற்கு இப்படமே சிறந்த உதாரணம்.

அரசியல் நிலைகள் குறித்த காரசாரமான கருத்து உரையாடல்கள் எதையும் முன்வைக்கவில்லை. தீவிரவாதம் தேவைதானா எனும் கேள்வியை எழுப்பிப் பெரும் விவாதத்தைத் தொடங்கி விடைபெறுகிறது திரைப்படம். ஆயுதங்களால் ஒருவேளை புரட்சிகளைக்கூட வரவழைத்துவிடலாம்; ஆனால் அங்கே வாழ்வதற்கு மனிதர்கள் இருக்க மாட்டார்கள் என்ற துணிச்சல் மிக்க செய்தியை ஆஸ்கார் ஜெமினிஸ்ஸினின் சிறந்த ஒளிப்பதிவைக்கொண்டு அன்றாட வாழ்க்கை சார்ந்த காட்சிகளின் வழியே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்