‘கவரிமான்’ ரிலீஸான அன்று நானும் ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல் உள்ளிட்ட படக் குழுவினர்களும் சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கில் படம் பார்க்கச் சென்றோம். ஒரு படம் ரிலீஸானதும் அதை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கச் சொல்வார் மெய்யப்ப செட்டியார். ரிலீஸாகும் படத்தில் ஒரு சில இடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனால், அடுத்து அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய் யும்போது அந்தக் காட்சியைத் திருத்த வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக, ரிலீ ஸான படங்களை தியேட்டரில் போய் பார்த்து ரிப்போர்ட் எழுதச் சொல்வார். அதை நாங்கள் இன்றும் பின்பற்று கிறோம்.
‘கவரிமான்’ படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து சாந்தி திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தோம். சிவாஜி கணேசன் கொடுத்தப் பரிசுப் பொருளை தேவி கோபத்தோடு மாடியில் இருந்து குப்பைத் தொட்டியில் வீசுவதை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
‘‘ஏய்… உனக்கு என்ன துணிச்சல். எங்க அண்ணன் கொடுத்தப் பரிசையே தூக்கி வீசிறியா?’’ என்று ரசிகர்கள் கடும் கோபத்தோடு ஆரவாரம் செய்தனர். இதை பார்த்த சாந்தி திரையரங்க நிர்வாகி வேணுகோபால் (சிவாஜி கணேசனின் மாப்பிள்ளை) உடனே எங்களை திரையரங்கத்தின் அலுவலகத் துக்குள் வருமாறு அழைத்தார். ‘‘இருக்கட்டும் என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம்’’ என்று கூறினேன். அவர், ‘‘தயவு செய்து வாங்க. சிவாஜி அவமானமானப்படுவதை அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம்’’ என்று எங்களை வலுக் கட்டாயமாக அறைக்கு அழைத்துச்சென் றார். அப்போது ஒரு விஷயத்தை உணர்ந் தேன். சிவாஜியின் ரசிகர்கள் அவரை அந்தப் படத்தில் வரும் ஒரு கதாபாத்திர மாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையான சிவாஜிகணேசனாகவே பார்க்கிறார்கள். எப்போதுமே அவரை இப்படித்தான் பார்க்க விரும்பும் ரசிகர் களால் அந்தக் கதாபாத்திரத்தை ரசிக்க முடியவில்லை. கதாநாயகர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட இமேஜ் இருக் கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்க வேண்டும் என்பதை நான் அன்றைக்கு உணர்ந்தேன்.
படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கும் இடத்தில் தேவி ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்வார். உண்மையாக பழகுகிறார் என்று தேவி நினைத்து பழகிவந்த சேகர் திடீரென தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வார். அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் தேவி ஒரு கட்டத்தில் சேகரை கத்தியால் குத்திவிடுவார். ரத்தம் சொட்ட சொட்ட அந்த இடத்தில் அவர் துடி துடித்து இறந்துவிடுவார். அதை பார்த்து விடும் சிவாஜிகணேசன், தேவியைப் பார்த்து ‘‘மானத்தை காப்பற்ற வேண்டிய சூழல் வந்தால் இப்படித்தான் செய்ய வேண்டி வரும். அன்னைக்கு நடந்த கொலையும் இப்படித்தான். குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற் காக நான் கொலை செய்தேன். கவரிமான் தன் உடலில் இருந்து ஒரு முடியை இழந்தாலும் உயிரை விட்டுவிடும். நீ வாழ வேண்டிய பொண்ணு. நான் ஏற்கெனவே ஒரு கொலை செய்துவிட்டு பழி சுமப்பவன்!’’ என்று கூறி மகள் தேவி கையில் இருக்கும் கத்தியை சிவாஜிகணேசன் வாங்கிக்கொண்டு பழியை தான் ஏற்பார்.
அப்போதுதான் தேவி முதல் தடவையாக சிவாஜியை ‘‘அப்பா’’ என்று அழைப்பார். தேவி சின்ன வயதாக இருக்கும்போது அம்மா பிரமிளா, அப்பா சிவாஜியோடும் மகிழ்ச்சி பொங்க படமாக்கப்பட்ட ‘பூப்போல உன் புன்னகையில்’ என்ற பாட்டின் இசையைப் பின்னணி இசையாக அந்த இடத்தில் இழையவிட்டிருப்பார் இளையராஜா. அதுதான் இளையராஜா!
படத்தில் சிவாஜிகணேசன் தன்னை கொலைக்காரராக காட்டிக்கொள்ளும் இந்தக் காட்சியையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தனித்திறமை யான நடிப்பால் ரசிகர்களிடம் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அண்ணன் சிவாஜி கணேசன். நடை, உடை, பாவனை அனைத்திலும் ஒருவித மிடுக்கான தோற் றத்தையே அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பினார்கள். திரையில் அவரது இமேஜ் எந்த ஓர் இடத்திலும் குறையக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருந்தனர். ரசிகர்களுடைய எதிர்பார்ப் புக்கு மாறாக சிவாஜிகணேசன் ‘கவரி மான்’ திரைப்படத்தில் நடித்ததால் அவரது ரசிகர்களால் அதை ஜீரணிக்க முடிய வில்லை. பெரிய அளவில் வெற்றிபெற வேண்டிய படம் பெயரை மட்டும் வாங்கித் தந்தது.
அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து நான் இயக்கிய இரண்டாவது படம் ‘வெற்றிக்கு ஒருவன்’. இந்தப் படத்தை பாஸ்கர் தயாரித்தார். படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடி பிரியா. இவர் நடிப்பிலும் சுட்டி, வாழ்க்கையிலும் சுட்டி. ‘வெற்றிக்கு ஒருவன்’ படப்பிடிப் பில் சரியான திட்டமிடல் இல்லாததால் படத்தை தொடங்கியதில் இருந்தே சிக்கல்தான். படப்பிடிப்பு தாமதத்தால் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் முன்னுக் குப் பின் மாறியது. சிவாஜி இருந்தால் பிரியா இருக்க மாட்டார். பிரியா இருந்தால் சிவாஜியால் இருக்க முடி யாத சூழல். இப்படி பல காரணங்களால் படத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்து முடிக்க முடியவில்லை. எப்பவுமே ஒரு படத்தை முறையே திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். அது தவறியதால் படமும் தோல்விப் படமானது என்பதை இங்கே வருத்தத்தோடு நான் பதிவு செய்கிறேன்.
எப்பவுமே நான் சொல்வது ஒரு படம் வெற்றிப் பெற்றால் அது என் குழு வினருக்கு கிடைத்த வெற்றி. அது தோல்வி அடைந்தால் அதனை இயக்குநர் ஒருவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படத்துக்கு ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல் படுபவர் இயக்குநர்தான். அவர்தான் எல்லோரையும் சரியாக அழைத்துச் செல்ல வேண்டும். அது தவறியதால்தான் ‘வெற்றிக்கு ஒருவன்’ படம் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை ஒரு இயக்குநராக நான் ஏற்றுக்கொண்டேன். அண்ணன் சிவாஜியை வைத்து தோல் விப் படம் கொடுத்துவிட்டோமே என்ற மன வேதனை ஒருவித வலியை ஏற் படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், மீண் டும் அவரையே வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சிவாஜி அவர்களை வைத்து இயக்கும் அந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் யார்?
- இன்னும் படம் பார்ப்போம்.
படங்கள் உதவி: ஞானம்
முந்தைய அத்தியாயம்: >சினிமா எடுத்துப் பார் 30: சிவாஜி ரசிகர்கள் என்ன செய்தார்கள்?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago