அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து மூன்றாவது முறை யாக படத்தை இயக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த அந்தத் தயாரிப் பாளர் அருப்புக்கோட்டை எஸ்.எஸ்.கருப்பசாமி. அந்தப் படம் ‘ரிஷிமூலம்’. சிவாஜிகணேசனுடன் கே.ஆர்.விஜயா, மேஜர் சுந்தர்ராஜன், சுருளிராஜன் உள் ளிட்டவர்கள் இதில் நடித்தார்கள். இயக்குநர் மகேந்திரன் சார் படத்துக்கு கதை - வசனம் எழுதினார்.
என்னுடன் கொண்ட நட்பு முறையில் நான் இயக்கிய கமல், ரஜினி நடித்த ‘ஆடுபுலி ஆட்டம்’, கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’, பார்த்திபன் நடித்த ‘தையல்காரன்’ போன்ற படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதி தந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு ‘முள்ளும் மலரும்’ என்ற வித்தியாசமான படத்தை கொடுத்தவர். சிறந்த இயக்குநர், சிறந்த எழுத்தாளர். நான் இயக்கிய வெற்றிப் படங்களில் அவருடைய பங்களிப்பும் உண்டு.
இயக்குநர்கள் சங்கம் நடத்திய ‘டி40’ என்ற நட்சத்திர இரவு நிகழ்ச்சியில் இயக்குநர் சிகரம் பாலசந்தரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கேள்வி - பதில் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்கள். அப் போது கே.பாலசந்தர் சார் ரஜினிகாந்திடம் ‘‘உனக்குப் பிடித்த இயக்குநர் யார்?’’ என்று கேட்டார். ரஜினி சொன்ன பதில்: இயக்குநர் மகேந்திரன். இது மகேந்திர னுக்கு ரஜினிகாந்த் கொடுத்த சிறப்பு.
கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுக்கும் குணம் இல்லாததால் ஏற் படும் கருத்து வேறுபாட்டை மையமாக வைத்து நகரும் கதைக்களம்தான் ‘ரிஷி மூலம்’. கணவன்- மனைவி கதாபாத் திரங்களில் சிவாஜியும் கே.ஆர்.விஜயா வும் நடித்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மகன். படத்தில் கே.ஆர்.விஜயா தன் பிடிவாதத்தால் கணவனிடம் கோபித் துக்கொண்டு 15 ஆண்டுகள் பிரிந்து வாழ்வார்.
அத்தனை ஆண்டுகால இடைவெளிக் குப் பிறகு மீண்டும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் இடத்தை செண்டிமெண்டாக நெகிழ்ச்சியோடு படமாக்க திட்டமிட் டோம். அண்ணன் சிவாஜியிடம், ‘‘நீங்கள் இருவரும் சந்திக்கும்போது வசனமே இருக்காது. முக பாவனையை மட்டும் குளோஸ் அப் காட்சிகளில் எடுக்கப் போகி றேன். ஒருவரது கண்களை இன்னொரு வரது கண்கள் பார்க்க வேண்டும். இருவரது கண்களை மட்டும் குளோஸ் அப்பில் எடுப்பேன். நீங்கள் சொல்ல வரும்போது வாய் பேசத் துடிக்கும். விஜயா அவர்களின் காதுகள் கேட்க காத்திருக்கும். உங்கள் முகத்தில் பேசும் பாவனை, விஜயா முகத்தில் பேசுங்கள் என்ற பாவனை… இப்படி குளோஸ்அப் பாவனைகளில் காட்சியைச் சொன் னேன். சிவாஜிக்கும், புன்னகை அரசிக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும்! கண்கள் பேசின… உதடுகள் துடித்தன… முக பாவத்திலேயே நடித் தார்கள். வசனமே இல்லாமல் மூன்று, நான்கு நிமிடங்கள் நகரும் அந்தக் காட்சி பாராட்டுகளைப் பெற்றது.
சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா இருவரும் சமாதானம் ஆன பிறகு ஒரு பாடல் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தோம். இளையராஜாவின் துள்ளல் இசை; ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள்… சிவாஜியும், விஜயாவும் வெளுத்துக் கட்டினார்கள். அவர்களைப் போல காதலர்கள், திருமண தம்பதிகள்கூட அப்படி ஓர் உணர்வை காட்ட முடியாது.
அந்தப் பாடலை கே.ஆர்.விஜயா கணவர் வேலாயுதத்தின் ஊரான கேரளாவில் உள்ள கள்ளிக்கோட்டையில் எடுத்தோம். பசுமை சூழ்ந்த அந்த மலைப் பகுதிகளில் படமாக்க திட்ட மிட்டு நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் இடங்களைத் தேர்வு செய்தோம். அதை சிவாஜி அவர்களிடம் சொன்னபோது ‘‘முத்து… அண்ணனை ரொம்ப அலைய விடாதீங்க. நான் என்ன உங்கள மாதிரி ஓடி ஆடுறவனா? மலை மேல எல்லாம் ஏறாம கீழேயே எடுத்து முடிப்பா…’’ என்றார்.
அந்தப் பாடலை படமாக்க தொடங் கினோம். முதலில் கீழே இரண்டு, மூன்று ஷாட்களை எடுப்பது, அப்படியே 10 அடி தள்ளிப்போய் அங்கே சில ஷாட்களை எடுப்போம். இந்த இடத்தில், அந்த இடத் தில் என்று மெல்ல மெல்ல ஏறிக் கொண்டே போய் மலை ஏறிய களைப்பே தெரியாமல் மலை உச்சிக்கு அண்ணனை அழைத்துப் போய்விட்டோம். மலை உச்சியில் இருந்து அந்த இடத்தை பார்த் தவர், ‘‘அருமையான இடம். எப்படியோ என்னை மலை உச்சிக்குக் கொண்டு வந்து, நீ எடுக்க நினைச்ச காட்சியை எடுத்து சாதிச்சுட்டே’’ என்றார். இதுதான் கதாநாயகன் போக்கில் போய் சாதித்துக்கொள்வது என்பதாகும்.
அப்பா, அம்மா, மகன் சென்டிமெண்ட் காட்சிகள், சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, சக்ரவர்த்தி நடிப்பு, மகேந்திரன் சார் வசனம், இளையராஜா இசை, கவியரசர் பாடல் இப்படி எல்லாம் இணைந்து அந்தப் படம் வெற்றி அடைந்தது. படத்தின் 100-வது நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினோம். விழா மேடையில் தயாரிப்பாளர் கருப்பசாமி, அண்ணன் சிவாஜிக்கு வைர மோதிரம் அணிவித்தார். ‘‘ஒரு நல்ல படம் கொடுத்துட்டே’’ என்ற தோரணையில் அண்ணன் சிவாஜி என்னைப் பார்த்தார். அந்தப் பார்வையே எனக்கு வாழ்த்தாக இருந்தது.
படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். கருப்பசாமியைப் பற்றி இங்கே சொல்லியே ஆக வேண்டும். சரியாக திட்டமிட்டு ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருப்பவர். படத்தில் ஒரு செட்யூல் படப்பிடிப்பு முடிந்த உடனே என்னிடம் வந்து, ‘‘இதுவரைக்கும் இத்தனை லட்சம் செலவு’’ என்று எழுத்துபூர்வமான கணக்கை காட்டுவார். ‘‘ஒவ்வொரு செட்யூலுக்கும் என்ன செலவாகிறது என்பது ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டும்’’ என்பார். இது அவசியமான ஒன்று. சினிமா எடுக்கும்போது செலவை முழுமையாக தெரிந்து வைத்துக்கொண்டு எடுத்தால் நிச்சயம் நஷ்டம் வராது. நாங்கள் சின்ன பட்ஜெட் படங்களும் எடுத்தோம், பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தோம். எல்லாவற்றுக்கும் சரியான திட்டமிடல் இருந்ததால் படம் பட்ஜெட்டுகளுக்குத் தகுந்த மாதிரி எடுக்க முடிந்தது.
நடிப்புக்கு இலக்கணமான அண்ணன் சிவாஜிகணேசன் அவர்களுக்கு தன் வரவு- செலவு பற்றி ஒன்றும் தெரியாது. நடிப்பு… நடிப்பு… நடிப்பு… இதுதான் அவரது சுவாசம். அவர் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் அவரது சகோதரர் வி.சி.சண்முகம்தான் முறையே சேமித்து முதலீடு செய்து வைத்தார். அண்ணன், தம்பி இருவரும் அப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இன்றைக்கும் சிவாஜிகணேசன் குடும் பத்தைச் சேர்ந்த ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி, துஷ்யந்த், விக்ரம்பிரபு, ஹரிசண்முகம் எல்லோரும் ஒற்றுமை யுடன் இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது மனதுக்கு நிறைவாக உள்ளது. கூட்டுக்குடும்ப பெருமையை உணர சிவாஜி குடும்பத்தைப் பாருங்கள்.
இனி, நீங்கள் ஆர்வத்தோடு எதிர் பார்க்கும் கட்டத்துக்கு வரவிருக்கிறேன். என் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி நடிக்க வந்தார்? அவரை வைத்து 25 படங்கள் இயக்கியது எப்படி? உலகநாயகனுக்கு 10 படங்கள் இயக் கிய அனுபவங்கள் என்னென்ன? அவர்கள் இருவருக்கும் எனக்கும் உள்ள உறவு முறைகள்? நான் இயக்கிய 45 படங் களுக்கு இசையமைத்த இசையமைப் பாளர் இளையராஜாவின் இணைப்பு என்ன? பஞ்சு அருணாச்சலத்தின் பங்கு? என் தாய் வீடான ஏவி.எம்மில் எனக்கு கிடைத்த மரியாதை என்ன… என்பதைப் பற்றியெல்லாம் சுவையாக சொல்லப் போகிறேன்.
படிக்கத் தயாராகுங்கள்.
- இன்னும் படம் பார்ப்போம்…
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago