உட்தா பஞ்சாப் சர்ச்சை: படம் கற்றுக்கொடுத்த பாடம்

By என்.கெளரி

இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ‘உட்தா பஞ்சாப்’ என்ற இந்திப் படத்தைக் கையாண்டிருக்கும் விதமும், அதன் அணுகுமுறைக்கு எதிராக பாம்பே உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் திரையுலகில் மீண்டுமொரு விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன.

‘உட்தா பஞ்சாப்’ என்றால் ‘பறக்கும் பஞ்சாப்’ (போதையில் மிதக்கும் என்றும் வைத்துக்கொள்ளலாம்) என்று அர்த்தம். பஞ்சாப் மாநிலத்தின் தீவிர பிரச்சினையாகப் பேசப்படும் போதை மருந்துப் பழக்கத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. இயக்குநர் அபிஷேக் சவுபே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஷாஹித் கபூர், கரீனா கபூர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

ஜூன் 17-ம் தேதியான இன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெறச் சென்றதிலிருந்து பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது இந்தப் படம்.

படத்தை வெளியிடத் தணிக்கை குழு பல நிபந்தனைகளை முன்வைத்தது. படத்தின் பெயரில் இருக்கும் ‘பஞ்சாப்’ நீக்கப்பட வேண்டும்; எந்தக் காட்சியிலும் ‘பஞ்சாப்’ மாநிலத்தைப் பற்றிய குறிப்பு இருக்கக் கூடாது; 89 காட்சிகளை வெட்ட வேண்டும்; ‘சிட்டா வே’ என்ற பாடலை நீக்க வேண்டும் என தணிக்கைக் குழுவின் கோரிக்கைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போனது.

தணிக்கைத் துறையின் மறுபரிசீலனைக் குழுவை படத் தயாரிப்பாளர்கள் அணுகியபோது, 13 காட்சிகளை நீக்கிவிட்டுப் படத்தை ‘ஏ’ சான்றிதழுடன் வெளியிடலாம் என்று அறிவித்தது. இதை எதிர்த்துப் படத்தின் தயாரிப்பாளர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். இந்த வழக்கின் தீர்ப்பில், படத்தில் ஒரேயொரு ஒரு காட்சியை மட்டும் நீக்கிவிட்டு, ‘ஏ’ சான்றிதழ் வழங்கத் தணிக்கைக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அத்துடன், மாற்றம் செய்யப்பட்ட பொறுப்புத் துறப்பு வாசகத்துடன் படத்தை அறிவித்த தேதியில் வெளியிடலாம் என்றும் சொல்லியிருக்கிறது.

தீர்ப்பு தரும் நம்பிக்கைகள்

இந்தப் படத்தைத் தணிக்கைக் குழு கையாண்ட விதம் ஒட்டுமொத்த இந்தியத் திரைப்படவுலகை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. ஆனால், நீதிமன்றம் இயக்குநரின் படைப்புச் சுதந்திர உரிமையை வலியுறுத்தும்படி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு எல்லோரையும் நிம்மதியடைய வைத்திருக்கிறது.

நீதிபதிகள் எஸ். சி. தர்மாதிகாரி, ஷாலினி பன்சால் ஜோஷி அடங்கிய பெஞ்ச் வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பில், “இந்தப் படத்தின் திரைக்கதையில் நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் எந்த விஷயமும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஓர் இயக்குநர் எப்படிப் படமெடுக்க வேண்டும், எந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது. படத்தில் ஒரு காட்சியை நீக்குவதும் வெட்டுவதும் அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டதாகவும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும் இருக்க வேண்டும். அதுதான் படைப்புச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்கும்” என்று நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.

“தணிக்கைக் குழுவுக்குக் காட்சிகளை வெட்டுவதற்கும், மாற்றங்கள் செய்ய சொல்வதற்கும், நீக்குவதற்கும் எல்லா விதமான உரிமைகளும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. ஆனால், அதே சமயம் இந்த வழக்கில் தணிக்கைக் குழு படத்துக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் சரியானவையல்ல.

ஒரு படத்தை அது சொல்லவரும் முழுமையான கருத்தின் அடிப்படையில் அணுக வேண்டுமே தவிர, கதாபாத்திரங்கள், காட்சிகள், பாடல்கள் எனத் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது” என்றும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம். தணிக்கைக் குழு ஒரு பாட்டியம்மா மாதிரி செயல்பட வேண்டாம் என்றும், காலத்துக்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ளவும் சொல்லியிருக்கிறது நீதிமன்றம்.

அரசியல் தலையீடு காரணமா?

‘உட்தா பஞ்சாப்’ படத்தைத் தணிக்கை குழு இந்த அளவுக்குக் கடுமையாக நடத்தியதற்குக் காரணம், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தல் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தின் பெரிய பிரச்சினையான போதை பழக்கத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் வெளியாவதை ஆளும்கட்சி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் ‘பஞ்சாப்’, ‘பாராளு மன்றம்’, ‘தேர்தல்’, ‘எம்பி’ போன்ற வார்த்தைகளைப் படத்தில் இருந்து நீக்கச் சொன்னது குறிப்பிடத்தக்கது.

எப்படிச் செயல்படுகிறது தணிக்கைக் குழு?

இந்தியா சுதந்திரம் பெற்றவுடன், 1952-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு. பன்முகத்தன்மை கொண்ட ஒரு பெரிய ஜனநாயக நாட்டின் ஒரு பெரிய ஊடகமான சினிமாவைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக, அது பல சமயங்களில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. ஆனால், சில சமயங்களில் அதன் செயல்பாடுகள் விவாதத்துக்கும் உள்ளாகின்றன. இது பற்றி மூத்த திரைப்பட வரலாற்றாசிரியர்களில் ஒருவரான தியடோர் பாஸ்கரனிடம் பேசியபோது, “தணிக்கைக் குழு என்பது ஒரு நல்ல அமைப்பு. அதிலிருக்கும் நபர்களுக்கு சினிமாவைப் பற்றிய முழுமையான விழிப்புணர்வும், புரிதலும் இல்லாதபோதுதான் பிரச்சினை உருவாகிறது.

1977-ல் ஷியாம் பெனகல், கிரிஷ் கர்னாட் போன்ற இயக்குநர்களால் புதிய சினிமா அலை வீசியது. அப்போது இருந்த தணிக்கை குழு இவர்களுடைய புதிய முயற்சிகளைப் பெரிய அளவில் அங்ககீரித்தது. அப்போதிருந்த தணிக்கைக் குழுத் தலைவர், உறுப்பினர்கள், பிராந்திய அதிகாரிகள் என அனைவருக்கும் சினிமாவைப் பற்றிய பரிச்சயம் இருந்ததும் அதற்குக் காரணம்.

ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. ‘உட்தா பஞ்சாப்’ மாதிரியான சமூக அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கமாகப் பேசும் படங்களில் இந்த மாதிரி கத்திரி போட்டால், அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தரமான படங்கள் வெளியாவதைக் தடுத்துவிடும். ஒரு படம் ஏற்படுத்தும் முழுத் தாக்கத்தை வைத்துத்தான் அதை மதிப்பிட வேண்டுமே தவிர, அதில் போதை மருந்துக் காட்சிகள் இருக்கின்றன, கதாபாத்திரங்கள் கெட்ட வார்த்தைகள் பேசுகின்றன என்பதை வைத்து மதிப்பிடக் கூடாது” என்று சொல்கிறார்.

தீர்ப்பை வரவேற்கும் தமிழகம்

நீதிமன்றத் தீர்ப்பைத் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களும் வரவேற்றிருக்கிறார்கள். தேசிய விருதுபெற்ற இயக்குநரும், தயாரிப்பாளருமான வெற்றி மாறன், “இது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பில் கூறியிருக்கும் விஷயங்களை முன்வைத்து இனிமேல் தணிக்கைக் குழுவின் நிலைப்பாடுகள் இருக்கும் என்று நம்புவோம். அத்துடன், இயக்குநர்களும் அவர்களுடைய அளவில் சுயபொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

இயக்குநர் மிஷ்கினும் இந்தத் தீர்ப்பு இயக்குநர்களுக்கு இனிமையானது என்று வரவேற்றிருக்கிறார். “ஒரு படம் நல்ல படமில்லை, அருவருக்கத்தக்கது, ஆபாசமானது என்று அதை மறுக்கும் உரிமை மக்களுடையது. அதை அவர்களிடம் கொண்டுசெல்வதற்கு முன்பே அது நல்ல படமில்லை என்பதைத் தணிக்கை குழு தீர்மானிக்கக் கூடாது. சினிமா என்பதே பெரியவர்களுக்கான ஊடகம்தான். இயக்குநரின் கருத்துச் சுதந்திரத்தை மதித்திருக்கும் இந்தத் தீர்ப்பு எங்களுக்கு நம்பிக்கையளிக்கிறது” என்கிறார் அவர்.

பஞ்சாபைச் சேர்ந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம், படத்தை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. அத்துடன், பஞ்சாப் - ஹரியானா நீதிமன்றத்திலும் இந்தப் படத்தை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது. எனவே, ‘உட்தா பஞ்சாப்’ படத்தை திரையரங்குகளில் பறக்கவிடுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கவே செய்கிறது.

தணிக்கைக் குழுவைச் சீரமைக்க அரசு அமைத்த ஷியாம் பெனகல் குழு, தணிக்கை குழு ஒரு சான்றிதழ் வழங்கும் அமைப்பாகச் செயல்பட்டால் போதும் என்று பரிந்துரைத்திருப்பது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்கப் பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் படங்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.

ஏதேனும் ஒரு பிரச்சினையை, தீவிரமான ஒரு விஷயத்தை மையப்படுத்தும் படங்களுக்குத்தான் சிக்கல்கள் முளைக்கின்றன. படைப்பாளிக்கு அதிக சுதந்திரம் தேவைப்படும் இத்தகைய படங்களின் மீதே தணிக்கைத் துறையின் கத்தி கூர்மையாக இறங்குவது இந்தியத் திரையுலகின் முரண்களில் ஒன்று.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்