ஒரு விஷயம் சொல்லவா? அரவிந்த்சாமி எங்க ஊர்லதான் பொண்ணு கட்டியிருக்காரு. எங்கூரு பொண்ணு ரோஜா தைரியசாலி. அதான் பாகிஸ்தான் தீவிரவாதி வரைக்கும் போராடிப் புருசனைக் கூட்டிட்டு வந்திருச்சு...
இன்னொரு விஷயம்... அர்ஜுன் எங்க ஊரு பள்ளிக்கொடத்துலயும் காலேஜுலயும் படிச்சும் வேலைக்குப் போவாம ஜெண்டில்மேன் ஆனதுக்கு என்ன காரணம்னு சொல்லணுமா... அவரு சேக்காளி வினீத்தும் அம்மா மனோரமாவும் அவரை விட்டுட்டு போனதுதான்... ஆனா, அப்ப அர்ஜுனைப் பாதை மாறிப் போவாம நம்ம நம்பியார் சாமி நம்ம தாமிரபரணி ஆத்துல வச்சுதான உபதேசம் பண்ணுனாரு!
இவ்வளவு ஏன்... ரஜினி தளபதியா ஆவறதுக்கு முன்னாடி கூட்ஸ் ரயில்ல போட்டது எந்த ஊர்லனு நினைக்கிய... எங்க ஊர்லதான்..! வேலைவெட்டி இல்லாம அலைஞ்ச சத்யராஜ் வேலை கிடைச்சிருச்சுனு பொறுப்பான புள்ளையா மாறுனது எங்க ஊர்லதானே! இன்னும் பல கதை இருக்கு எங்க ஊரைப் பத்தி சொல்றதுக்கு!
இன்னும் புரியலையேனு சொல்றீங்களா... எங்கள் ஊர்.,.. திருநெல்வேலி மாவட்டத்து மலையும் மலை சார்ந்த இடங்களும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத லொகேஷன்கள்! இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் அவருக்கு ஏக மரியாதை, இவரைக் கௌரவிக்கலைனு பல கருத்துகள் இருந்ததே... அதுவெல்லாம்கூடப் பரவாயில்லை. ஆனால், கண்டுகொள்ளப்படாத ஒரு பிரிவாக இருந்தது லொகேஷந்தான்...
சொல்லப் போனால் ஸ்டுடியோவுக்குள் இருந்த சினிமாவை வெளியே கொண்டுவந்த பாரதிராஜாவுக்குக் கிடைத்த பெயரில் பாதியாவது இந்த அவுட்டோர் லொகேஷன்களுக்குக் கிடைக்கணுமா இல்லையா..?! ஆனா, கிடைக்கலைங்கறதுதான் உண்மை!
எங்க ஊர்ல எத்தனை லொகேஷன்கள் இருக்குத் தெரியுமா... நீங்க பார்த்த படங்கள்ல இருந்தே உங்களுக்கு அடையாளம் சொல்ல முடியும்.
மணிரத்னத்துக்கு எங்க ஊர் மேல தனிப் பாசம். ஒண்ணு அவரு எங்க ஊர்லயே வந்து ஷூட்டிங் எடுப்பாரு. இல்லே பஞ்சாப்லயே எடுத்தாலும் சரி, எங்க ஊர் பேரைத்தான் சொல்லுவாரு. ரோஜா படத்தில் அவர் காட்டிய பிறகுதான் எங்க ஏரியா சுந்தரபாண்டியபுரம் அக்ரஹாரத்துக்குத் தனி மவுசே வந்துச்சு!
இயக்குநர் ஷங்கருக்கும் எங்க ஊர் என்றால் தனிப் பிரியம். அவருடைய ஜெண்டில்மேன் படப்பிடிப்பை அங்கு நடத்தினார். அதன் பிறகு ஏதாவது ஒரு பாடலிலாவது எங்கள் ஊரைக் காட்டிவிடுவார். அந்நியனில் பெயிண்ட் அடித்த மலை அங்கேதான் இருக்கிறது. முதல்வனில் அர்ஜுன் மாறு வேடத்தில் வலம் வரும் மருத மரச் சாலை எங்கள் அம்பாசமுத்திரம்தான்.
ஒரு காலத்தில் ரஜினியின் முரட்டுக் காளை, கழுகு எல்லாம் எங்கள் ஊரில்தான் முழுக்க முழுக்க எடுக்கப்பட்டது. அப்போதெல்லாம் ரஜினி ஒரு நாற்காலியில் ஓரமாக உட்கார்ந்திருப்பார். அவரைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டு நாங்கள் எங்க வேலையைப் பார்த்துக்கொண்டு போவோம். நட்சத்திரங்களுக்குக் கிடைக்கும் அந்தச் சுதந்திரம்தான் சினிமாவை எங்கள் ஊரைத் தேடி வரவைத்தது.
எல்லோரும் எங்கள் ஊரை ஊராகப் பார்த்த நேரத்தில் ஊருக்கும் உணர்வுகள் இருக்கு என்பதைச் சொல்வதுபோல எங்கள் அருவியையும் மலையையும் கதாபாத்திரமாக்கி அழகு பார்த்தவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர். அவருடைய அச்சமில்லை அச்சமில்லையிலும் ஒரு வீடு இரு வாசலிலும் குற்றாலத்தை ஒரு குணசித்திர பாத்திரமாகவே பார்த்தோம்.
இயக்குனர் விக்ரமனுக்குச் சொந்த ஊர் எங்கள் ஊர்தான் என்றாலும் அவர் வீட்டையும் வயலையும் புது நெல்லு புது நாத்து படத்தில் பாரதிராஜாதான் காட்டினார்.
என்னத்துக்கு ஒரே வசனத்தை ஒன்பது தடவை சொல்லுதாங்க என்று பொதுவாக ஷூட்டிங் பார்ப்பவர்கள் அலுத்துக்கொள்ளும் காலத்திலேயே எடிட்டிங், ஷாட், க்ளோசப் என்றெல்லாம் டெக்னிகலாகப் பேசும் அளவுக்கு எங்களை வளர்த்துக்கொள்ள உதவியது எங்கள் ஊரில் நடந்த ஷூட்டிங்குகள்தான். எங்கள் ஊரில் இருந்து வரும் ஒரு இளைஞன் இயக்குநராக வாய்ப்பு கேட்டுச் செல்லும்போது யாருகிட்டே டைரன் கத்துகிட்டீங்க என்று கேட்டால் பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஷங்கர், பி.வாசு, பாலா என்று கண்ணை மூடிக்கொண்டு யார் பெயரையும் சொல்லலாம். ஏனென்றால், எல்லோரையும் பார்த்துப் பார்த்தே அவன் கண்டினியுட்டி முதல் கட் சொல்வது வரை கற்றுக்கொண்டிருப்பான்.
சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் தோன்றிக் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகளாக மாறிய பல பாட்டையாக்கள் எங்கள் ஊரில் உண்டு! காலையிலே பொங்கல் வடை, மத்தியானம் மட்டன் சுக்கா, சாயங்காலம் கேக், சுண்டல் என்று டிபிகல் ஆர்டிஸ்டுகளாகவே அசத்தும் பாட்டையாக்கள் எல்லாம் நம்ம விஷால் தம்பி போன் பண்ணுனான்... பய இப்ப என்னமா வளர்ந்துட்டான்... நடிகையத்தான் கட்டப் போறேம்னு சொல்லிகிட்டு திரியுதாம்... அந்தப் புள்ள யாருனு கேட்டுப்புடலாம்னு பார்த்தேன் என்று பர்சனலாகப் பல ஹீரோக்களுடன் நட்பு வைத்திருக்கிறார்கள். அதுதான் இந்த லொகேஷன் கொடுத்த பலன்!
குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலினு அலையுத எங்களுக்கே இம்புட்டு கதைகள் இருக்குன்னா பொள்ளாச்சி, உடுமலை, காரைக்குடி காரங்களுக்கெல்லாம் எம்புட்டு கதை இருக்கும்?!
படம் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago