அனுபவங்கள் மட்டுமே கசப்பான பாடங்களைக் கற்றுத் தருகின்றன. ஏற்கனவே அனுபவப்பட்டவர்கள் கண் முன்னால் இருக்கும்போது அவர்களது முன்மாதிரிகளை ஏற்றுக்கொள்ளத் திரையுலகில் தடையாக இருப்பது எனக்கு எல்லாம் தெரியும் என்ற ஈகோ. ஃபைனான்சியர்கள் எல்லோரும் தயாரிப்பாளர்கள் அல்ல என்று சொன்னதால் பலரின் கவனத்தையும் பெற்றேன். படம் தயாரித்துத் தோற்ற ஒரு ஃபைனான்சியர், “நான் தோற்றதற்கான காரணம் இப்போது புரிஞ்சிருச்சு, அதனால்தான் பைனான்ஸ் மட்டும் பண்றேன்” என்றார். சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்ணியவர்களின் நிலையே இப்படியென்றால் இன்று புதிது புதிதாய் வரும் சாப்ட்வேர், மற்றும் ரியல் எஸ்டேட் பின்னணி கொண்ட தயாரிப்பாளர்களின் கதை?
எனது இணைய எழுத்துகளின் வழியாய் அறிமுகமானார் மென்பொருள் துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர். ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தவர், “ என் ஃப்ரெண்டோட படம், இன்னைக்கு பிரிவியூ ஷோ. வந்து பார்த்துட்டுச் சொல்லுங்க” என்றார். மதித்து அழைக்கும்போது பிகு பண்ணாமல் பிரிவியூ காட்சிக்குச் சென்றேன். படமாக்கல், நடிப்பு, மற்ற தொழில்நுட்ப விஷயங்கள் என எல்லாவற்றிலும், மிக மிகச் சுமாரான படமாக இருந்தது.
படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான உள்ளடக்கமும் இல்லை, பட்ஜெட்டும் இல்லை என்பதைப் புரிந்துகொண்டேன். படம் முடிந்து வந்த நண்பர்களில் பலரும் என்னை அழைத்த நண்பரின் கையைப் பற்றிக்கொண்டு “ஆஹா... ஓஹோ..” எனப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். படத்தின் தயாரிப்பாளர் அவர்தானென்பது அந்தக் கணமே எனக்குப் புரிந்துவிட்டது. எல்லோரையும் அனுப்பிவைத்துவிட்டு என் கையைப் பிடித்தார். அந்தப் பிடியில் என் படம் எப்படி என்னும் கேள்வி இருந்தது. நான் அசடுபோல் சிரித்தபடி “எனக்குக் கொஞ்சம் அவசர வேலையிருக்கு நைட் போன் பண்ணட்டுமா?” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.
அவர் முகம் மாறிவிட்டதைப் பார்த்தேன். வேறு வழியில்லை. வந்திருந்த ஐம்பது பேரும் ஆஹா ஓஹோ எனப் பாராட்டிய படத்தை வேலைக்கு ஆகாது, கொஞ்சம் கஷ்டம்தான் எனச் சொல்வதை ஏற்க அவரின் மனம் அப்போது தயாராக இருக்காது என்பதால்தான் அவரைத் தவிர்த்தேன்.
இரவு, தொலைபேசியில் பிரிவியூவில் சொல்ல நினைத்ததைச் சொன்னேன். எதிர்முனையில் மவுனம். “நீங்க ஒருத்தர்தான் சார் இப்படிச் சொல்றீங்க?” என்றார். அவருக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. இருந்தாலும் மனஉறுதியுடன் படம் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் மிகக் குறைவானது பற்றியும், வியாபாரம் குறித்தும் விளக்கமாய்ச் சொன்னேன்.
“இது வரைக்கும் ஒன்றரைக் கோடி ஆகியிருக்கு சார். படம் ஆரம்பிக்கும்போது என்னென்னவோ சொன்னாங்க. அவங்க வாங்கிப்பாங்க. இவங்க வாங்கிப்பாங்க. சாட்டிலைட், தமிழ்நாடு ஏரியா அது இதுன்னு எல்லாம் சொன்னாங்க. படம் முடிஞ்சு எட்டு மாசம் ஆகிப்போச்சு. இது வரைக்கும் முப்பது பிரிவியூ போட்டிருக்கேன். ஒரு ஷோவுக்கு 20 ஆயிரம் செலவானதுதான் மிச்சம். பத்து பைசா கூட வருமானமில்லை.” என்றவரின் குரல் தழுதழுத்தது.
“பாருங்க தலைவரே நான் உங்க மனசைக் கஷ்டப்படுத்த இதையெல்லாம் சொல்லலை. நல்லதோ, கெட்டதோ படம் பண்ணிட்டீங்க. இனிமேலும் ரிலீஸ் பண்ணா வியாபாரம் பண்ணலாம்னு நினைச்சு பிரிவியூ போட்டுச் செலவு பண்ணாம ரிலீஸ் பண்றதுக்கான பணத்தை ரெடி பண்ணுங்க. யாரும் விலைக்கு எல்லாம் வாங்கி படம் ரிலீஸ் பண்றதேயில்லை. அதைப் புரிஞ்சுக்கோங்க” என்றேன். கிட்டத்தட்ட ஒன்றரைக் கோடி ரூபாய்வரை அவர் சாப்ட்வேர் துறையில் சம்பாதித்த பணத்தை இழந்திருக்கிறார்.
நான் படம் பார்த்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இன்றுவரை அந்தப் படம் ரிலீஸ் ஆகவேயில்லை.. காரணம் படத்தைத் தயாரித்தவர் அதை ரிலீஸ் செய்யக் குறைந்த பட்ச முதலீடாய் முப்பது லட்ச ரூபாயை வைத்தால்தான் வெளியிடவே முடியும். ஏற்கனவே ஒன்றரைக் கோடி ரூபாய் கடன்காரனாகி, இருக்கிற வேலையைத் தக்க வைத்துக் கொண்டு, மன நிம்மதியில்லாமல் அலைந்துகொண்டிருக்கிறவர் எப்படி மேலும் முப்பது லட்ச ரூபாயை முதலீடு செய்ய முடியும்? அப்படி முப்பது லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரூபாய் திரும்ப வரும் என்பதே உறுதியில்லாதபோது, மறுபடியும் ரிஸ்க் எடுக்க எப்படி மனசு வரும்? விடுங்க சார்..
லாஸ் ஆனது ஆனதாவே இருக்கட்டும் என்றார் சமீபத்தில் சந்தித்தபோது, ஒரு வகையில் அது உண்மைதான். இதற்கெல்லாம் காரணம் சினிமா பற்றிய அடிப்படை அறிவும் அனுபவ அறிவும் இல்லாததுதான் முக்கியக் காரணம்.
திடீர் பணப் புழக்கம் கொண்ட பலர், சினிமாவில் கிடைக்கும் திடீர் புகழ், பணம் மற்றும் கவர்ச்சியான விஷயங்களுக்காகப் படமெடுக்க வருபவர்கள். காதில் செல்போன் வைத்து பிளக்ஸ் பேனர் வைத்த ரியல் எஸ்டேட்காரர்கள் அதன் நீட்சியாய் சினிமா விளம்பரங்களிலும், புரொஃபைல் போட்டோ போட்டு, பெருமையுடன் வழங்க ஆசைப்பட்டு வந்தவர்கள். ஆனால் நண்பரைப் போன்ற சாப்ட்வேர் ஆசாமிகள் அப்படியல்ல.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இரவு பகலாக உழைத்து ஒரு குருவியைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்த பணத்தை, சின்ன பட்ஜெட்டில் படம் பண்ணலாமென யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்க, அது வெளியிடப் பணமில்லாமல் ஹார்ட் டிஸ்க்கில் உறங்கிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்றாகிவிடும்.
“ஒரு ரூபால (ஒரு கோடி) ஃபர்ஸ்ட் காப்பி பண்ணிரலாம் சார்! இப்பல்லாம் சின்ன பட்ஜெட் படம்தான் ஓடுது. சூது கவ்வும், கோலி சோடா எல்லாம் நான் நீன்னு போட்டி போட்டுட்டு வாங்கினாங்க. சமீபத்தில பெரிய ஹிட் பீட்ஸா, ஒரு கோடியில எடுத்தது. சாட்டிலைட்டே ஒன்னு நாற்பதுக்கு போச்சு. பீட்ஸாவைவிட நாம்மோட கதை, திரைக்கதை செம ஸ்டாரங். சாட்டிலைட் ரைட் வித்தாலே போட்ட பணத்தை எடுத்திரலாம்.
ஆடியோ மார்க்கெட்தான் கொஞ்சம் வீக். அதுல அஞ்சு லட்சமும். எப்.எம்.எஸ். மூலமா பத்து லட்சமும் வந்திரும். சின்ன படங்களை வாங்கி வெளியிடுறத்துக்குன்னே நிறைய கம்பெனிங்க வந்திருச்சு. ஏரியா டிஸ்ட்ரிப்யூஷன் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்குக் கொடுத்துட்டோம்னா ரிலீஸுக்கு முன்னாடியே போட்டத்துக்கு மேல லாபம். என்ன சரியா மார்க்கெட் பண்ணனும். அதான் முக்கியம்.” எனச் சொல்லிச் சொல்லி ஆரம்பிக்கும் படம் ரூபாய் ஒரு கோடியில் முடியாது.
இதையெல்லாம் மீறி அவர்கள் சொன்ன வியாபாரம் நடந்திருந்தாலே லாபமில்லாவிட்டாலும் போட்ட காசாவது மிஞ்சியிருக்கும். இயக்குநர் சொன்னது ஏதும் நடக்கவில்லை என்பதற்கான காரணம் இயக்குநருக்கும் தெரியாது; தயாரிப்பாளருக்கும் தெரியாது. அப்படியானால் நிஜம்தான் என்ன? உள்ளடக்கம் ஒழுங்காக இருந்தும் படங்கள் உருத்தேறாமல் போவது ஏன்? அடுத்த வாரம் அதிர்ச்சி அடையலாம்.
மினி ரிவ்யூ - கான் கேர்ள்
வெகு நாட்களுக்கு முன் டிரைலரைப் பார்த்த போதே இப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்குக் காரணம் இயக்குநர் டேவிட் பிஞ்சர்.
நிக்கும், ஆமியும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் எனும் மொனாட்டனி வாழ்க்கை இருவருக்கும் இடையிலான காதலைக் காணாமல் போகடிக்கிறது. நிக்கிற்கு ஒரு டீன் ஏஜ் பெண்ணுடன் உறவு இருப்பது ஆமிக்குத் தெரிகிறது. ஆமி சிறு வயதிலேயே பிரபலமாய் வளர்ந்த பெண். அவரின் குழந்தைக் காலத்தை வைத்து ஆமியின் பெற்றோர்கள் புத்தகம் எழுதியவர்கள். எல்லாமே கிடைத்து சந்தோஷமாய் இருந்த ஆமி, கொஞ்சம் வித்தியாசமான பெண். இவர்களிடையே ஆன உறவு சிதைந்துகொண்டிருக்கும் நிலையில் ஆமி காணாமல் போகிறாள். விசாரணையில் நிக் ஏன் அவளைக் கொன்றிருக்க கூடாது என்னும் ரீதியில் சாட்சிகள் இருக்க, பின்பு என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் தெளிந்த நீரோடையாய்ச் சொல்லியிருக்கிறார்கள்.
பென் ஆஃப்லேக்கும், ரோஸ்லேண்டும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். அதே போல் பின்னணியிசை, படத்தொகுப்பு, அதிராத மென்மையான இசை. நம்மைக் காட்சிகளுடன் கட்டிப் போடும் சிதறாத திரைக்கதை. தவறவிடக்கூடாத கதை மதிப்பு கொண்ட திரைப்படம்.
தொடர்புக்கு: sankara4@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago