திரை விமர்சனம்: குற்றம் கடிதல்

By இந்து டாக்கீஸ் குழு

எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள ‘குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது.

லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம்.

தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனைக் கடுமை யாகப் பாதித்துவிடுகிறது. மெர்லினையும் பெரும் சிக்கலில் தள்ளி விடுகிறது.

அந்தப் பையன் என்னவானான்? ஆசிரியைக்கு என்ன நடக்கிறது? இந்த இருவரையும் சுற்றியிருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகு கிறார்கள்? பிரச்சினையின் வேர் எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலாகப் பரபர வென்று நகர்ந்து செல்கிறது படம்.

ஒரு சம்பவம் அதனோடு சம்பந்தப் பட்டவர்களாலும், காவல் துறை, ஊடகம், பொதுமக்கள் ஆகியோராலும் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் காட்டி யிருக்கிறார் இயக்குநர். பார்வையாளர் களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் இச் சம்பவங்களையொட்டிப் பல தரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு வரின் கோணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எல்லாருடைய பின்னணிகளும் முறையான பிரதிநிதித் துவம் பெறு கின்றன. அசம்பாவிதம் நிகழக் காரணமான ஆசிரியையின் உணர்வு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்மாமனின் கோபம், அம்மாவின் கையறு நிலை, என எல்லாமே அடர்த்தியானவை.

காட்சிகளால் கதை சொல்லும் கலை பிரம்மாவுக்குக் கைகூடியிருக்கிறது. பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் ஆசி ரியையின் கால் செருப்பில் ஒரு பிளாஸ்டிக் உறை ஒட்டிக்கொள்கிறது. அது தெரியா மல் அவர் நெடுந் தூரம் நடந்து வருவது அவரது பதற்றம் அவரை எந்த அள வுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டி விடுகிறது.

24 மணிநேரத்தில் நடக்கும் சம்பவங் களினூடே வேகமாக நகர்கிறது படம். வேகமான திரைக்கதை என்றாலும் பல்வேறு நுட்பங்களையும் தவறவிடாமல் பதிவுசெய்திருப்பது சிறப்பு. மனிதன் என்னதான் சூழ்நிலைக் கைதியானாலும், எல்லாருமே பதற்றத்தில் மனித நேயத் தைத் தொலைத்துவிட மாட்டார்கள் என் னும் உண்மையையும் படம் காட்டு கிறது. கோபத்தின் உச்சியில் இருக்கும் தாய்மாமன் பள்ளியின் முதல்வரைச் சொற்களால் வறுத்தெடுக்கிறார். அதற் குப் பதிலாக முதல்வரின் மனைவி சொல்லும் சில வார்த்தைகள் அவர் மனதைத் தொடுகின்றன. “நாங்க விட்ற மாட்டோம் தம்பி” என்று அந்த அம்மையார் மெய்யான உணர்வுடன் சொல்லும்போது தாய்மாமனின் மனம் நெகிழ்வதை உணர முடிகிறது. பாதிக்கப்பட்ட அன்னையை ஆசிரியை சந்திக்கும் இடம் அற்புதமான கவிதை. மனித இயல்பின் மகத்தான பரிமாணத்தை அழகாகக் காட்டும் காட்சிகள் இவை.

சிறுவனின் தாய்மாமன் பொது வுடமைச் சித்தாந்தம் பேசும் தோழராக வருவது யதார்த்தம். ஆனால் அரசியல் கோட்பாடு பேசப்படும் இடங்கள் இயல்பாக இல்லை. ஆசிரியையின் கிறிஸ்துவத் தாயார் தன் மகள் ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொண்டது குறித்துக் காட்டும் வெறுப்பும் நம்பும்படி இல்லை. பள்ளிக்கூடக் காட்சிகளும் பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் காலைநேரக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன.

பாலியல் கல்வி குறித்த விவாதம் தேவைக்கதிகமாக நீள்வதைத் தவிர்த் திருக்கலாம். ஊடகங்களின் போக்கைச் சொல்லும் காட்சிகள் கூர்மையாக இருந்தாலும் திரைக்கதையில் கச்சித மாக ஒட்டவில்லை. சில காட்சிகள் துருத்திக்கொண்டிருக்கின்றன. குறிப் பாகப் பையனின் தாய்மாமனின் சமூக உணர்வைக் காட்டுவதற்கான காட்சிகள்.

நடிகர்கள் தேர்வு திரைக்கதையின் நம்பகத்தன்மைக்குப் பெரிதும் உதவி யிருக்கிறது. பாத்திரங்கள் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லாருமே புதுமுகங்கள். ஒவ்வொரு நடிகரையும் கதாபாத்திரமாகவே மாற வைத்திருப்பதில் இயக்குநரின் ஈடுபாடும் உழைப்பும் தெரிகின்றன. ராதிகா பிரசித்தா வின் நடிப்பு அபாரம். குற்றவுணர்வும் பீதியும் பதைபதைப்பும் அவர் முகத்தில் தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன. பல சமயம் அவர் கண்களே எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றன.

சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல் கள் இனிமையாக உள்ளன. பின்னணி இசை திரைக்கதையின் ஆழத்தைக் கூட்டுகிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு இயல்புத் தன்மையைத் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலைப் படமாக்கிய விதம் அற்புதம். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்னும் வரியைக் காட்சிப்படுத்திய விதமும், அடுத்த வரியைப் பாடாமல் இசையால் இடைவெளியை நிரப்பிய விதமும் படத்தின் அடிநாதத்துக்கு பொருத்தமாய் அமைந்து மனதை நெகிழச் செய்கின்றன.

சி.எஸ். பிரேமின் படத்தொகுப்பு அருமை. லாட்ஜுக்கு அருகே நடக்கும் கட்டைக் கூத்து கதாபாத்திரத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தப் பொருத்தத்தை நீட்டிமுழக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் எடிட்டர். கடைசிக் காட்சியில் தோழர் உதயன் ஊடகத்திடம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறபோது அவர் கேமராவைக் கையால் மறைத்துத் திரையில் கருப்பு வண்ணைத்தை படரவிடுவதோடு காட்சியை முடித்துக்கொள்கிறார் எடிட்டர். இப்படித்தான் பல காட்சிகளில் எடிட்டிங் கூர்மையாக இருக்கிறது.

ஒரு சம்பவத்தை முன்வைத்துச் சமூக யதார்த்தத்தையும் மனித இயல்பு களையும் அழுத்தமாகக் காட்டியிருக்கும் ‘குற்றம் கடிதல்’ தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. மனித மனம், பழிவாங்க மட்டுமல்ல; மன்னிக்கவும் தயாராக இருக்கும் என்னும் உண்மையைக் கவித்துவமாகக் கூறும் ஆரோக்கியமான படம் இது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்