இந்திய திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் கெடுபிடி!

By ஸ்கிரீனன்

இந்திய திரைப்படங்கள் வெளியிட கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது பாகிஸ்தான் நீதிமன்றம்.

இந்தியாவில் தயாராகும் படங்கள், இங்கு வெளியாகும் அதே சமயத்தில் வெளிநாடுகளிலும் வெளியாகி வந்தன.

பாகிஸ்தானில் பெரும்பாலும் இந்தி திரைப்படங்கள் தான் அதிக அளவில் வெளியாகின. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் சினிமா தயாரிப்பாளர் முப்ஷீர் லுக்மான், லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

அவ்வழக்கில், “இந்தியாவில் தயாரிக்கப்படும் படங்கள், இந்தியர்கள் மூலம் பாகிஸ்தானில் திரையிட சட்டப்படி அனுமதி கிடையாது. எனவே போலி ஆவணங்கள் மூலம் திரையிடுகிறார்கள். அதனைத் தடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இவ்வழக்கை ஏற்றுக் கொண்டு, “போலி சான்றிதழை பயன்படுத்தி இந்திய படங்களை திரையிட அதிகாரிகள் அனுமதிக்க கூடாது” என்று உத்தரவிட்டது நீதிமன்றம். அதுமட்டுமன்றி, பாகிஸ்தான் தணிக்கைத்துறை மற்றும் வருவாய் துறை இதுகுறித்து 25ம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே, இந்திய மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை அதிக நேரம் ஒளிபரப்பியதற்காக 10 தனியார் டி.வி நிறுவனங்களுக்கு, 1 கோடி ரூபாய் அபராதம் விதித்து பாகிஸ்தான் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE