தண்ணீர் காட்டும் தணிக்கை! - எஸ்.வி.சேகர் பேட்டி

By ஆர்.சி.ஜெயந்தன்

முழுவதும் தயாரான ஒரு படத்துக்குத் தமிழகத் தணிக்கைக் குழுவிடம் சான்றிதழ்பெறுவது பெரும் பிரச்சினையாக உள்ளது என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். ஒரு படத்துக்குச் சான்றிதழ் பெற விண்ணப்பித்தால் தற்போது ரீஜனல் அதிகாரி ‘ஒன் டைம் பார்வேர்டு’ தரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகே படத்துக்குக் காத்திருக்கும் படங்களின் பட்டியலில் இடம்கிடைக்கிறது. அதற்கும் பின்னரே உறுப்பினர்கள் படம் பார்க்கும் தேதியைத் தெரிவிக்கிறார்கள். இதனால் ரிலீஸ் தேதியை தமக்கு அனுகூலமாக முடிவுசெய்ய முடியவில்லை என்று தயாரிப்பாளர்கள் புலம்பிவருகிறார்கள். ஏன் இந்த நிலை என்று மத்திய திரைப்படத் தணிக்கைத் துறை உறுப்பினர், நடிகர், இயக்குநர் எஸ்.வி.சேகரிடம் பேசியபோது…



முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போதைய தணிக்கை நடைமுறைகளால் படவெளியீடுகள் கால தாமதம் ஆவதாகக் கூறுகிறார்களே?

சென்சாரை முடிக்காமல் ரிலீஸ் தேதியை முடிவுசெய்யக் கூடாது. தயாரிப்பாளர்கள் செய்யும் அடிப்படையான இந்தத் தவறுதான் அவர்களை புலம்பவைக்கிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன் கதையை விவாதித்து முடிவுசெய்வதற்கு நான்கு மாதம் செலவிடுகிறார்கள். நடிகர்களைத் தேர்வுசெய்ய இரண்டு மாதம் ஆகிறது. ஆறுமாதம் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகளுக்கு இரண்டு மாதம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆக, ஒரு படத்தை உருவாக்கக் குறைந்தது ஒருவருடம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சென்சார் என்றால் மட்டும் திண்டிவனம் டோல்கேட் மாதிரி போய் நின்றதும் கதவைத் திறந்துவிட்டு ‘போகலாம் ரைட்’ என்று கூற வேண்டும் என்று நினைப்பது எப்படிச் சரியாக இருக்கும்? சென்சார் சான்றிதழுக்குப் படத்தைப் பார்க்க ஆன்லைன் பதிவு இருக்கிறது. அதை யாருமே சரிவர பயன்படுத்துவதில்லை. தத்கல் முறையும் இருக்கவே செய்கிறது.



திரைப்படத் தணிக்கை கடினமான ஒன்றாக மாறிவருவதை மாற்ற முடியாதா?

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்தான் முயற்சி எடுக்க வேண்டும். சென்சார் அதிகாரியை மாதம் ஒருமுறை அழைத்துக் கூட்டம் நடத்த வேண்டும். அதில் அந்த மாதம் வெளியாகும் படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களைப் பங்கேற்க வைத்துக் கலந்தாலோசிக்க வேண்டும். மத்திய தணிக்கை வாரியத்தின் தலைவருக்குக் கீழே மத்திய அரசால் தேசிய அளவில் நியமிக்கப்பட்டிருக்கும் 18 தணிக்கைத் துறை உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

ஆனால், என்னை இதுவரை எந்த சினிமா சங்கமும் அழைத்து ஆலோசனை கேட்டது இல்லை. ‘இவரை ஏன் போட்டாங்க’ என்பதுபோல் இருந்தால், நான் என்ன செய்ய முடியும்? மத்திய திரைப்படத் தணிக்கைத் துறைக்குத் தலைவர் நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. தமிழகத்துக்கு இன்னும் ஒருமுறைகூட நீங்கள் வரவில்லையே என்று அவரிடம் கேட்டேன். நானே கேட்டுக்கொண்டிருந்தால், பிறகு இங்கே இருக்கும் பிலிம்சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் போன்ற பெரிய சங்கங்கள் எதற்கு?



தமிழ் சினிமாவுக்கான தணிக்கையில் மட்டும்தான் அதிக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வருகிறதே?

எந்தப் படம் வேண்டுமானாலும் எடுத்துவிட்டு, அதற்கு ‘யு’ சான்றிதழ் வாங்கிவிட வேண்டும் என்ற மனோபாவம் இங்கே இருக்கிறது. ‘கபாலி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நடைபெற்றுவருவதே, இதற்கு நல்ல உதாரணம். இது மாற வேண்டுமானால் நடைமுறையில் இருக்கும் தணிக்கை விதிகள் என்ன என்பதைப் படத்துக்கு முதலீடு செய்கிற தயாரிப்பாளர், ஒரு படத்துக்கான கதையை உருவாக்குகிற கதாசிரியர், இயக்குநர் ஆகியோர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இயக்குநர் கதை சொல்லும்போது “ நீங்க சொல்ற இந்தக் கதைக்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைக்காதே’ என்று தயாரிப்பாளர் கூற முடியும்.

அதேபோல் இயக்குநருக்குத் தணிக்கை விதிகள் தெரிந்திருந்தால் கதையின் முக்கிய அம்சத்துக்கு சென்சாரில் ஆட்சேபம் வராதபடி திரைப்படத்தை உருவாக்க முடியும். நான் சொல்வது என்னவென்றால் தணிக்கை விதிகளைத் தெரிந்துகொண்டு படமெடுத்தால், நமது படைப்பை சென்சார் குழுவின் முன்னால் வைத்துவிட்டுக் கம்பீரமாக இருக்கலாம். விதிகளைப் புரிந்துகொள்ளாமல் படமெடுக்கும்போதுதான் சென்சார் குழுவின்முன் ஒரு பலியாட்டைப் போல் பம்ம வேண்டியிருக்கிறது. அதற்கு ஏன் நாம் இடம்கொடுக்க வேண்டும். சமீபத்தில் ஒரு இயக்குநர் சென்சாரில் பிரச்சினைகளைச் சந்தித்துவிட்டு வந்து “நீங்கள் சென்சார் பற்றி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்களாமே, அதில் ஒரு பிரதி எனக்குக் கொடுங்கள்” என்றார். நான் அவரிடம், ‘அதை இப்போது படித்து என்ன செய்யப்போகிறீர்கள்’ என்று கேட்டேன். இப்படித்தான் இருக்கிறார்கள் நிறையப் பேர்.



படத்தைப் பார்க்கும் தணிக்கைக் குழு உறுப்பினர்கள் மத்தியில் கருத்தொற்றுமை இல்லை என்ற நிலை இருப்பதாக இயக்குநர்கள் பலர் கூறுகிறார்களே?

ஒரு படத்தைப் பார்த்து அதன் தகுதியை நிர்ணயம் செய்யும் உறுப்பினர்கள், சினிமாவை சினிமாவாகப் பார்ப்பவர்களாக இருக்க வேண்டும். திரைப்படக் கலை குறித்தும், திரைப்படக் கதை குறித்தும், சமூகம் குறித்தும் என்ன அறிவு இருக்கிறது என்பதைக் கேள்வித்தாள் வைத்து தேர்வின் மூலம் தணிக்கைக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தால் கூடத் தப்பில்லை.

தமிழ்நாட்டில் பிராந்திய தணிக்கைக் குழு உறுப்பினர்கள் 96 பேர் இருக்கிறார்கள். இவர்களது பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள். ரீஜனல் அதிகாரியுடன் இணைந்து நான்கு உறுப்பினர்கள் படத்தைப் பார்க்கிறார்கள். அந்த நான்குபேரில் இருவர் பெண்கள். படத்தைப் பார்த்து முடித்ததும், ஒவ்வொருவரும் இந்தப் படத்துக்கு என்ன சான்றிதழ் கொடுக்கலாம் என்பதை முதலில் தனித்தனியே குறிப்பிட்டுவிடுவார்கள். பிறகு குழுவாக உட்கார்ந்து படத்தின் கதை, அதன் காட்சியமைப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விவாதிக்கும்போது நிலைமை மாறுகிறது. அனைவரது கருத்துகளையும் மனதில் கொண்டு என்ன சான்றிதழ் என முடிவு செய்யப்படுகிறது. ஆனால், அந்தச் சான்றிதழ் ‘யு’வாக இல்லாத பட்சத்தில், ‘யுஏ’, அல்லது ‘ஏ’ என்று வரும்போது தயாரிப்பாளர் ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லும் தனது உரிமையைப் பயன்படுத்துகிறார். அதில் தவறில்லை.

இப்படி ரிவைசிங் கமிட்டிக்குச் செல்லும் படங்களை ஒருவாரத்துக்குள் பார்த்துவிட்டால் பிரச்சினை வருவதில்லை. அப்படி இல்லாமல் ஏற்படும் கால தாமதம்தான் பிரச்சினையாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளரின் பான் கார்டு, ஆதார் அட்டை எல்லாம் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. இது எல்லாமே ஒரு சிஸ்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்ற பிரதமர் மோடியின் முயற்சி. ஆனால், இந்த சிஸ்டத்துக்குள் வர விரும்பாதவர்களுக்குத்தான் கோபம் வருகிறது.



திரையுலகில் மேலும் பல தயாரிப்பாளர்களிடம் இயக்குநர்களிடமும் விசாரித்தபோது “பிராந்திய தணிக்கைக் குழுவைப் பொறுத்தவரை அனைத்து அதிகாரங்களும் ரீஜனல் அதிகாரி என்ற ஒருவரிடம் குவிந்து கிடக்கிறது. முதலில் அது சரி செய்யப்பட வேண்டும். ரீஜனல் அதிகாரிதான் படம் பார்க்கும் தேதியை ஒதுக்கித் தருகிறார், அவர்தான் படம் பார்க்கிறார், அவர்தான் சான்றிதழில் கையெழுத்துப்போடுகிறார், அவர்தான் எந்த உறுப்பினர் படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். இத்தனை பொறுப்புகளும் ஒருவரிடமே இருக்கும்போது தவறுகளுக்கும் லஞ்சம் பெறுவதற்கும் உண்டான வாய்ப்புகள் அதிகம் உருவாகிவிடுவதாக” நம்மிடம் தெரிவித்தனர். இந்த ஒருவரை சரிக்கட்டிவிட்டால் போதும் என்று நிலை மாற வேண்டும் என்றால், அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது பலரது கருத்தாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்