‘மைனா’, ‘கும்கி’, ‘கயல்’ படங்களைத் தொடர்ந்து ‘தொடரி’ வழியே ரயிலையும் ரயில் சார்ந்த வாழ்க்கையையும் சலன ஓவியமாக வரைந்து தர வந்திருக்கிறார் பிரபுசாலமன். ‘‘ரயில்னு எழுதும்போதே அதுல உள்ள பிரம்மாண்டத்தை நம்மால உணர முடியும். அதைப் பின்னணியா வச்சுகிட்டு படம்னு இறங்குறப்ப செலவு அதிகமாகும். கையில இருக்குற திரைக்கதையோட, ஒரு நல்ல நடிகரும் சேர்ந்தாத்தான் நினைச்ச மாதிரி அதை வியாபாரம் செய்ய முடியும். அதோட இந்தக் கதையும் தனுஷைக் கேட்டுச்சு. இப்படி உருவானதுதான் இந்த ‘தொடரி’ பயணம்” - ஒரு தேசாந்திரியின் மனநிலையோடு பேசத் தொடங்குகிறார் பிரபு சாலமன். அவரோடு உரையாடியதிலிருந்து...
யானையை வைத்துப் படமாக்குவதைவிட ரயிலைப் பிடித்து படமாக்குவது பெரிய வேலையாச்சே…?
‘கும்கி’ படத்தை முடிக்கிற நேரத்துலதான் இந்தக் கதையை எழுதி முடிச்சேன். எனக்கு இந்த மாதிரி கதையைத் திரைக்கதையா சொல்லத் தெரியாது. பத்து யானைகளைக் கட்டி இழுக்கிற வேலைதான் இந்த மாதிரி திரைக்கதையும். தனுஷைச் சந்திக்கும்போது, என்கிட்ட கதையைக் கேட்கலை. ‘‘எப்போ ஆரம்பிக்கலாம்!”னுதான் கேட்டார். ‘மைனா’ வெளியான நேரத்துல சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார், “நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்”னு சொன்னார்.
ரசனையான தயாரிப்பாளர். ‘இதயம்’, ‘மூன்றாம் பிறை’ மாதிரியான படங்களைக் கொடுத்த கம்பெனி. இதெல்லாம் சரியா அமைந்ததும் இந்தப் படத்துக்கான வேலையைத் தொடங்கிட்டோம். ரயிலுக்குள்ள ஒரு கிச்சன். அதுல வேலை செய்றவங்களுக்குன்னு ஒரு தங்குற இடம், அவங்களோட வாழ்க்கைன்னு எல்லாமும் பயணத்துலயே இருக்கும். டிரெயினைப் பின்னணியா வைத்து ஷூட் பண்றது பெரிய வேலை. ரொம்பவும் பொறுமை வேணும்.
கோவாவுல இருந்து ஹூப்லி போகுற ரூட்ல எல்லாம் தேடித்தேடி ஷூட் பண்ணோம். படத்தை எடுத்து திரும்பப் பார்க்கும்போது எல்லாமே பெரிய விஷயமா தெரிஞ்சது. இதைத் திரும்ப என்னால எந்த மொழியிலயும் ரீமேக் பண்ண முடியாது. அது பயங்கர சவாலான வேலை.
படத்தோட கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வேலைகள் விறுவிறுப்பா நடந்துகொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டோம்..
படத்தோட இரண்டாவது பாதியில் சில இடங்கள்ல அந்த வேலைகள் நடக்குது. ரயிலைப் படமாக்கும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்துல ஓடவைத்துதான் படமாக்க முடியும். அப்படி எடுத்த சில இடங்களுக்கெல்லாம் இன்னும் வேகம் தேவைப்பட்டது. அதுக்காகத்தான் இந்த கிராஃபிக்ஸ் வேலைகள்.
படத்தின் இறுதிக் கட்டக் காட்சிக்காக 20 கேமராக்களை வைத்துப் படம்பிடித்ததாகச் செய்தி வெளியானதே?
அதுவும் ரயிலுக் காகத்தான். ஒரு குறிப்பிட்ட காட்சிக்குத்தான் அத்தனை கேமராக்கள் தேவைப் பட்டன. ரயிலோட இன்ஜின் ஸ்டேஷனுக்குள்ள நுழையும். அதை எல்லாக் கோணத்துல இருந்தும் பதிவு செய்யணும். ஒரு கார் மேலே பறக்கிறதையும், பஸ் மேலே பறக்கிறதையும் எடுத்திருப்போம். 100 கிலோமீட்டர் வேகத்துல அதை கேமரா கடப்பது பெரிய வேலை. அதுக்குத்தான் பல கேமராக்கள் தேவைப்பட்டன.
புதுமுகங்களை வைத்து தொடர்ச்சியாகப் படம் பண்ணின உங்களுக்கு தனுஷுடன் வேலை பார்க்கும்போது எப்படி இருந்தது?
புரிதல்தான். ஆரம்பத்தில் என்கிட்ட பேசினதையெல்லாம் கடைசி வரைக்கும் கீப் அப் பண்ணினார். எனக்குப் படம் எடுக்கத் தெரியும். கதை சொல்லத் தெரியாது. இதுக்கெல்லாம் ஈடு கொடுத்தார். ‘‘இதுக்கு முன்னாடி மூணு புதுமுகங்களை வைத்து படம் எடுத்தவர், நீங்க. என்னை ஆர்டிஸ்ட் மாதிரி பார்க்காதீங்க. ஒரு புதுமுகமாவே நினைச்சுக்கோங்க”ன்னார்.
அதேமாதிரி கடைசி நாள் ஷூட்டிங் வரைக்கும் நடந்துக்கிட்டார். படத்துல நாயகி கீர்த்தி சுரேஷுக்கு லவ் சீன்ஸ் இருக்கும். அதுலயும் ஒரு ஆக்ஷன் மூட் இருந்துட்டே இருக்கும். இன்னும் தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராம், கருணாகரன்னு நிறைய பேர் இருக்காங்க. அவங்களோட உழைப்பும் நல்லா இருந்துச்சு.
உங்களோட தயாரிப்பில் உருவாகிவரும் ‘ரூபாய்’ திரைப்படம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
இயக்குநர் எம்.அன்பழகன் படத்தை எடுத்து முடிச்சிட்டார். பின்னணி இசை கோப்பு வேலைகள்ல இருக்கு. இந்த மாத இறுதிக்குள் முதல் பிரதி ரெடியாகிடும். படத்தை அப்படியே யார்கிட்டயாவது கொடுத்துடலாம்னு இருக்கேன்.
‘கும்கி 2’ வேலைகளில்தான் இப்போ கவனம் செலுத்துறீங்களாமே?
ஆமாம். வேலையைத் தொடங்கிட்டேன். சமூகம் சார்ந்த இன்னைக்குத் தேவையான சில விஷயங்களைச் சொல்ல வேண்டிய கட்டாயத்துல நாம இருக்கோம். அதை இங்கே சீரியஸாவும் சொல்ல முடியாது. இந்தக் கதைக்குள்ள வேறமாதிரி எப்படிக் கொண்டு போகலாம்கிற வேலையிலதான் இப்போ இருக்கேன்.
உங்களோட எல்லாப் படங்களிலுமே ‘பயணம்’ வருகிறதே?
எங்க ஊர் நெய்வேலியில எப்பவும் ஆட்கள் நடமாட்டம் கம்மியாத்தான் இருக்கும். சைக்கிளை எடுத்துக்கிட்டு ஊரைச் சுத்திசுத்தி வட்டமடிப்பேன். கொஞ்சம்கூட சோர்வே ஆக மாட்டேன். ‘கும்கி’ படத்துக்கு லொக்கேஷன் தேடும்போதுகூட 48 மணிநேரம் கார் டிரைவ் பண்ணிக்கிட்டு மூவிங்லயே இருந்திருக்கேன். எவ்ளோ மனிதர்கள், நிறைய விஷயங்கள்னு பயணம் கொடுத்துக்கிட்டே இருக்கும். அதைவிட சந்தோஷம் எனக்கு வேறேதும் பெருசா தெரியலை. அதான் என் படத்துலயும் பிரதிபலிக்குது. பயணம்தான் என்னோட ‘பிராண்ட்’.
நெய்வேலிகாரரான நீங்கள் வனம், நீர், ரயில்னு களத்தைத் தேர்வு செய்றீங்க. உங்க ஊர் பழுப்பு நிலக்கரி களமே மிகப் பெரியதாச்சே. அதை ஏன் தொடவில்லை?
அது மிகப் பெரிய பிரம்மாண்டம். அந்தப் பின்னணி வாழ்வியலைத் தொட வேண்டும் என்பது என்னோட ரொம்ப நாள் ஆசையும்கூட. அங்கே படமாக்க எனக்கு முழு சுதந்திரம் தேவை. இங்கே கேமரா வைக்கக் கூடாது. அங்கே ஷூட் பண்ண வேண்டாம் இப்படி எந்த கண்டிஷனும் இருக்கக் கூடாது. அங்கேயே நான் கிடந்தவன். நிறைய அனுபவித்தவன். அதையெல்லாம் அப்படியே கொண்டு வரணும்னு நினைக்கிறேன். அதுக்கான அனுமதி கிடைத்தால் நிச்சயம் செய்வேன்.
பொழுதுபோக்கு என்பதைக் கடந்து சினிமா இன்றைய தேதியில் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறதே. ஒரு இயக்குநர், தயாரிப்பாளராக இதை எப்படிப் பார்க்குறீங்க?
எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து பேசுறதுதான் சரியா இருக்கும். இவ்ளோ கஷ்டப்பட்டு படம் எடுக்கு றோம். சுலபமா திருட்டு டிவிடி வந்துடுது. சமீபத்தில் மாயவரம் போனப்போ ஒரு திரையரங்க உரிமையாளரைப் பார்த்தேன். ‘‘ நடிகர், இயக்குநர் எல்லாம் ஷூட் இல்லைன்னா ஹில்ஸ் பக்கம் போயிடலாம். நாங்க அப்படியா? சார்.
தினமும் காலையில தியேட்டரைத் திறந்தே ஆகணும். எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கணும். இப்படி ரிலீஸான இரண்டாவது நாளே காலியா கிடந்துச்சுன்னா என்ன செய்றது?’’ன்னார். என்ன பதில் சொல்றது. கண்டிப்பா எல்லாரும் கூடிப் பேசி முடிவெடுத்தாதான் சரியா இருக்கும்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago