‘பாண்டியன்’படத்தின் நாயகியாக குஷ்புவை ஒப்பந்தம் செய்தோம். அவரும், ‘கால்ஷீட் தேதிகளில் ஒண்ணும் பிரச்சினை இல்லை. கண்டிப்பா நடிக்கிறேன் சார்’ என்று முழு மனதோடு சம்மதித்தார். ‘என்ன சம்பளம்?’ என்று கேட்டபோது சொல்ல மறுத்துவிட்டார். அவர் அப்படி சொன்னதுக்குக் காரணம்,‘தர்மத்தின் தலைவன்’படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக அவரை தமிழில் அறிமுகப்படுத்தியது நாங்கள்தான்.
அந்தச் சமயத்தில் சுத்தமாக தமிழ் பேசத் தெரியாத அவருக்கு, வகுப்பெடுத்து நடிக்க வைத்தோம். அந்த நன்றியை மனதில் வைத்துக்கொண்டுதான் அவர் அப்படி சொன்னார். இன்றைக்கும் எந்த விழாவுக்கு நான் சென்றாலும், என் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெறுவார்.
சம்பள விஷயத்தில் குஷ்பு இப்படி சொல்கிறார் என்ற விஷயத்தை ஏவி.எம்.சரவணன் சார் அவர்களிடம் போய் சொன்னேன். அவர், ‘‘இப்போ வெளியான படத்தில் என்ன சம்பளம் வாங்கியிருக்கார்னு விசாரிச்சு, அதுக்கு மேல ஒரு தொகையை வைத்துக் கொடுக்கலாம்’’ என்றார். அதேபோல விசாரித்து அவருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
இசைஞானி இளையராஜாதான் படத்துக்கு இசை. ரஜினி, கமல் இருவருக்கும் அதிக படங்கள் இயக்கியுள்ளேன் என்பதைப் போல், நான் இயக்கிய 70 படங் களில் 40 படங்களுக்கு இசைஞானிதான் இசை என்பது எனக்குக் கிடைத்த பெருமைகளில் ஒன்று!
‘பாண்டியன்’ படத்துக்கான பாடல் இசைப் பணியில் இருந்த இளையராஜா அவர்களைப் பார்க்கச் சென்றேன். ஸ்டுடியோவில் எப்போதும் ரொம்ப கவனமாக பாடல் உருவாக்கும் பணியில் இருப்பவர், என்னிடம் ஒரு பாடலின் டியூனை வாசித்துக் காட்டினார். ‘‘ரொம்ப அருமையா இருக்கு ராஜா. பாடல் எழுதி ரெக்கார்டிங் போயிடலாமே’’ என்று சொன்னேன். அப்போது இளையராஜா அவர்கள், ‘‘இந்தப் பாடலை நான் அமைக்கவில்லை. என்னோட மகன் கார்த்திக் ராஜா உருவாக்கினான்’’ன்னு சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. இளையராஜாவின் இசை தரத்துக்கு இணையாக அவரது மகன் கார்த்திக் ராஜா இப்படி ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறாரே என்று மேலும் சந்தோஷப்பட்டேன்.
இந்தப் பாடலை ரெக்கார்டிங் செய்து முடித்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, கார்த்திக் ராஜாவை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினோம். ராஜாவுக்கு ரொம்பவும் சந்தோஷம். அப்படி உருவான அந்தப் பாட்டுத்தான், ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா…’ என்ற பாடல்.
‘பாண்டியன்’ பாடல்களைப் போல படத்துக்குப் பின்னணி இசையும் மிக முக்கிய பங்களிப்பாக தேவைப்பட்டது. என்ன தேவை என்ற விஷயத்தை ராஜாவிடம் சொல்லிவிட்டால் போதும், கேட்டதைவிட 200 மடங்கு அதிக மாகவே கொடுத்துவிடுவார். ‘பாண்டியன்’ படத்தோட வெற்றிக்கு இளையராஜாவின் இசை பெரிய பலம். ராஜா மட்டுமின்றி அவர் மகன் கார்த்திக் ராஜாவும் துணை இருந்தார் என்பதை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ஹீரோ ரஜினியும், வில்லன் பிரபாகரனும் கலந்துகொள்ளும் ஒரு காட்சியை அகலமான ஒரு சாலையில் எடுக்க எண்ணினோம். அதுவும் துப்பாக்கி ஏந்திய பூனைப் படைகள் சூழ ரஜினியை வில்லன் கைது செய்து அழைத்துப் போவது போலவும், அதே மாதிரி வில்லனை ரஜினி கைது செய்து அழைத்துச் செல்வதைப் போலவும் படமாக்க வேண்டும். சென்னை மெரினா கடற்கரைச் சாலை சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், அங்கே அனுமதி கிடைக்கவில்லை.
இதே மாதிரி பாண்டிச்சேரி கடற்கரையில் அகலமான சாலை இருக்கிறது. அங்கே ஒப்புதல் பெற்றுவிட்டால் படப்பிடிப்பை நடந்தலாம் என்று முடிவு செய்தோம். பாண்டிச்சேரியில் அரசு அதிகாரியாக இருந்த நண்பர் ராமதாஸ் அவர்களைத் தொடர்புகொண்டு விஷ யத்தை சொன்னேன். அப்போது அங்கே முதலமைச்சராக வைத்தியலிங்கம் அவர்கள் இருந்தார். அவரிடம் விஷயத்தைக் கூற, அவர் காவல்துறை உள்ளிட்ட சில அதிகாரிகளை அழைத்துப் பேசி, அனுமதி கொடுத்தார். அதுவும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் அல்ல. 4 மணி நேரம் சாலை போக்குவரத்தை நிறுத்தி எங்கள் படப்பிடிப்பு நடந்தது. முதலமைச்சரும், அதிகாரிகளும் எங் களுக்கு பக்கபலமாக இருந்ததே அதற்குக் காரணம். ஒருங்கிணைப்பாளராக இருந்த ராமதாஸ் அவர்கள் என்றும் எங்களுக்கு இணைபிரியாத நண்பர்.
‘பாண்டியன்’ படப்பிடிப்பில் இருந்த நாட்களில்தான் ஏவி.எம் கொடுத்த நிலத்தில் புது வீடு கட்டி, ஏவி.எம் நகருக்குக் குடி போனோம். அந்தப் புது வீட்டுக்குப் போன 10 நாட்களுக்கு பிறகு, ஒருநாள் என் சின்ன மகள் சாலா அழுதுகொண்டே வந்து, ‘‘அப்பா… உங்களப் பார்த்தே பத்து நாளாச்சுப்பா… வாடகை வீட்டுல இருந்தப்ப நீங்கள் காலையில தோட்டத்து பக்கம் வருவீங்க… போவீங்க. இப்ப உங்க அறையிலயே அட்டாச்டு பாத்ரூம். எப்போ வர்றீங்க? போறீங்கன்னே எங்களுக்குத் தெரியல?’’ என்று அழுதார். அந்த அழுகை என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துச்சு.
‘‘இந்த ‘பாண்டியன்’ படத்தை என்னோட யூனிட்டுக்காக எடுக்குறேன். இந்த வேலை முடிந்ததும் குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குறேன். அதில் முதல் வேலையா நாம் எல்லாரும் சிங்கப்பூர், மலேசியா டூர் போய்ட்டு வருவோம். இனிமே, நான் ஒரு குடும்பத் தலைவனா இருப்பேன்’’னு சொன்னேன். அதைக் கேட்டதும் என் மனைவி, மக்களுக்கு பயங்கர சந்தோஷம்!
‘பாண்டியன்’ படத்தின் ஒரு சண்டைக் காட்சியை சென்னை துறைமுகத்தில் ஒரு கப்பலில் எடுக்க ஆரம்பித்தோம். படப்பிடிப்பு தொடங்கிய கொஞ்ச நேரத்தில் ஒருவர் ஓடி வந்து, ‘‘முத்துராமன் சார்… உங்களை உடனே வீட்டுக்கு வரச் சொல்றாங்க?’’ என்று கூறினார். சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னத்திடமும், கேமரா மேன் டி.எஸ்.விநாயகத்திடமும் ‘‘நீங்க சண்டை காட்சியை எடுத்துவிடுங்கள்?’’ என்று கூறிவிட்டு புறப்பட்டேன். பதற்றத்தோடு வீட்டுக்குப் போய் பார்த்தால்… அங்கே என் மனைவி கமலா மாரடைப்பால் காலமாகியிருந்தார்.
உயிரோடு பார்த்த ‘என் கமலா’வை சடலமாக என்னால் பார்க்க முடியவில்லை. கத்தினேன், கதறினேன். நான் குடும்பத்துக்கு செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் இழுத்துபோட் டுக்கொண்டு கமலாதான் செய்தார். என் பாரத்தையும் சேர்த்துக்கொண்டு உழைத்ததால்தான் இவ்வளவு சீக்கிரம் போய்விட்டார். அவர் சாவுக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் இருந்துகொண்டே இருக் கிறது.
கமலாவின் இறுதிச் சடங்கில் சரவணன் சார், அவரது மனைவி முத்துலட்சுமி அவர்கள், டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், எழுத்தாளர் சிவசங்கரி போன்ற பெருமக்களும் நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டு எனக்கு ஆறுதல் சொன்னார்கள். சிங்கப்பூரில் படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த், தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டு, ‘‘இந்த மாதிரி நேரத்தில் நீங்க ஷூட்டிங் வெச்சிக்க வேண்டாம். படத்தை தீபாவளிக்குப் பிறகு ரிலீஸ் பண்ணிக்கலாம்!’’னு சொன்னார்.
சரவணன் சார்கிட்டப் போய், ‘‘ரஜினி இப்படி சொல்றார்’’னு சொன்னேன். அதற்கு சரவணன் சார் அவர்கள், ‘‘விநியோகஸ்தர்கள் என்கிட்ட பேசினாங்க. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணினாத்தான் லாபம் கிடைக்கும். தள்ளிப்போச்சுன்னா நஷ்டம் வரும்னு புள்ளி விவரத்தோட சொல்றாங்க. இதுவரைக்கும் சொன்ன தேதிக்கு நீங்க படங்களை ரிலீஸ் பண்ணியிருக்கீங்க. விநியோகஸ்தர்களோட எண்ணத்தை பார்க்கும்போது தீபாவளிக்கு ரிலீஸ் பண்றதுதான் சரின்னு தோணுது. நான் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டேன். நீங்களே முடிவு செய்யுங்க’’ என்றார். எனக்கு ஒரே குழப்பம். மனைவியின் துக்கமா? படம் ரிலீஸா? நான் என்ன முடிவு எடுத்தேன்?
மனைவி கமலாவுடன் எஸ்பி.முத்துராமன்
- இன்னும் படம் பார்ப்போம்…
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago