சினிமாவைப் பொறுத்தவரை திரைக்கதைதான் புத்திசாலித்தனத்தையும் சாமர்த்தியத்தையும் வெளிப்படுத்த முதலில் வாய்ப்பு தரும். புதுமையான பாதையில் நடைபோடும் புத்துணர்வு மிக்க திரைக்கதை அமையும்போதுதான் அந்த சினிமா கவனிக்கப்படும். ஆண்டுக்கு இப்படி ஓரிரு படங்கள் வந்தாலே அதிசயம்தான் என்பதே இப்போதைய சூழல். சில வேளைகளில் மாறுபட்ட திரைக்கதைகளைக் கொண்ட படங்கள் வணிகரீதியாக வெற்றிபெறாமல் போகலாம். ஆனால், சினிமா வரலாற்றில் அவை கரிசனத்துடன் அணுகப்படும்.
இதற்கு உதாரணமாகச் சட்டென்று தோன்றும் படம் ‘12பி’ (2001). அந்தப் படத்தில் ஒரே கதை இரு வேறு பாதைகளில் பயணப்படும். அதுதான் திரைக்கதை உத்தி. அது ஒன்றும் சுயம்புவான திரைக்கதையல்ல. ‘ஸ்லைடிங் டோர்’ (1998) என்ற ஆங்கிலப் படத்தின் பாதிப்பில் உருவான திரைக்கதைதான். ஆனால், ‘ஸ்லைடிங் டோர்’ படமே ‘ப்ளைண்ட் சான்ஸ்’ (1981) என்னும் போலந்துப் படத்தின் மோசமான நகல் என்கிறார் அக்னியெஸ்கா ஹாலந்த் என்னும் இயக்குநர்.
ஆகவே, அசலா நகலா என்ற விஷயத்துக்குள் போகாமல் எடைபோடும்போது, தமிழில் ‘12பி’யை உருப்படியான ஓரிடத்தில்தான் நிறுத்தியிருக்கிறார் ஜீவா. ஜெர்மானியப் படமான ‘ரன் லோலா ரன்’ (1998) போன்ற படங்களைப் பார்த்து ரசிக்கும் உலகப் பட ரசிகர்களுக்கு ‘12பி’ பெரிய சுவாரசியத்தைத் தராமல் போயிருக்கலாம். ஆனால், ‘கபாலி’ போன்ற மிகச் சாதாரணத் திரைக்கதையைக் கொண்ட படங்களைத் தலையில் தூக்கிவைத்துக் கரகம் ஆடும் நமக்கு ‘12பி’ புது அனுபவத்தைத் தரக்கூடிய திரைக்கதையே. அந்தப் படம் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றாலும் வித்தியாசமான படம் குறித்து யோசிக்கும்போது அது நம் நினைவுகளில் தட்டுப்பட்டுவிடுகிறது.
காலத்தில் கரைந்த திரைக்கதை
எண்பதுகளில் வெளியானது டி. ராஜேந்தரின் ‘ஒரு தலை ராகம்’ (1980). இளம் ஆண்களும் பெண்களும் காலையில் கிளம்பி, ரயிலில் கூட்டமாகக் கல்லூரி செல்வார்கள், கல்லூரியில் காதல், கலாட்டா. மீண்டும் மாலையில் அதே ரயிலில் கும்மாளமாக வீட்டுக்குத் திரும்புவார்கள். திராவிடப் பாரம்பரியத்தில் வந்த, எதுகை மோனைக்குப் பெயர்பெற்ற டி.ராஜேந்தர் காதலனுக்கும் காதலிக்குமான உரையாடல் வசனங்களை எழுத வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. காரணம் நாயகனும் நாயகியும் பேசிக்கொள்வதே இல்லை. அப்படியான திரைக்கதை அது. இறுதியில்கூடக் கைகூடாத அந்தக் காதலிலிருந்து நாயகனை மரணம் காப்பாற்றிவிடும்.
இப்போது அந்தப் படத்தின் ஒரு காட்சியைக்கூடச் சிரிக்காமல் பார்க்க முடியாது. ஆனால், வெளியான காலத்தில் அது புதுமையான திரைக்கதை; அது ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம். அப்போது விழுந்து விழுந்து பார்க்கப்பட்ட அந்தப் படத்தை இப்போது பார்த்தால் சிரித்துச் சிரித்து வயிறு புண்ணாகிவிடுகிறதே ஏன்? கால மாற்றத்தின் முன் நிற்க முடியாத திரைக்கதை அது. ஆனால், ஒரு நல்ல திரைக்கதை உரிய விதத்தில் படமாக்கப்படும்போது அது காலத்தைக் கடந்து நிற்கும். இப்போது பார்த்தாலும் வித்தியாசமாக இருக்கிறதே என்று எப்போதும் தோன்ற வேண்டும். அப்படியான திரைக்கதையை அமைப்பதுதான் சவால்.
தொடரும் காதல்
தொண்ணூறுகளில், ரோஜா என்றாலே ஒவ்வாமை ஏற்படும் அளவுக்குத் தன் படத்தில் ரோஜாக்களைப் பயன்படுத்திய இயக்குநர் கதிரின் படமான ‘இதயம்’ (1991) வந்தது. மருத்துவராகும் ஆசையில் கல்லூரியில் சேர்ந்த மாணவர் ஒருவர் காதலால் நோயாளியாக வீட்டுக்குத் திரும்புவதைப் பயணமாகக் கொண்ட திரைக்கதை. காதலை ஏற்கக்கூட முடியாத அளவு நாயகனுடைய இதயம் பலவீனமடைந்திருக்கும். ‘ஒரு தலை ராக’த்தில் நாயகி காதலைச் சொல்லாமல் இழுத்தடிப்பாள், ‘இதய’த்திலோ அந்த வேலையை நாயகன் செய்வார். மற்றபடி பெரிய வித்தியாசமில்லை.
தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான ‘சேது’ (1999) திரைப்படமும் வணிக சூத்திரத் திரைக்கதையைத்தான் கொண்டிருந்தது. ‘ஒரு தலை ராக’த்தைப் போல ‘இதய’த்தைப் போல ‘சேது’விலும் நாயகன் ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பார். என்றாலும் அதில் பாண்டிமடம் என்ற புதிய நிறத்தைப் பூசியிருந்தார் பாலா. அதுதான் ‘சேது’வை வித்தியாசப்படுத்தியது. அத்திபூத்தாற்போன்ற திரைக்கதை என்ற மிகையுணர்வுக் கூற்றுகளைப் புறந்தள்ளிவிட்டாலும் ‘சேது’ ஒரு சுவாரசியமான திரைக்கதையே.
அதைத் தொடர்ந்து வந்த ‘காதல்’ (2004) மதுரை என்ற ஊரை மையப்படுத்தித் திரைக்கதை அமைத்துத் தப்பித்துக்கொண்டது. இது உண்மைச் சம்பவம் என்ற செய்தி வேறு இந்தப் படத்துக்குப் புதிய வண்ணம் தந்தது. இதன் சாதியக் குளறுபடிக்குள் நுழையாமல் பார்த்தால் இதுவும் நினைவுகொள்ளத் தக்க திரைக்கதையே. இதே ஆண்டில் வெளியான ‘ஆட்டோகிராஃப்’ ஒரு இளைஞனின் பல காதல்களைப் பேசியது.
மேற்கண்ட படங்கள் எல்லாமே காதலால் ஆணுக்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுமே பேசுகின்றன. ஒருவகையில் பெண்களைக் குற்றப்படுத்துகின்றன. காதலால் பெண்ணுக்கு ஏற்படும் இன்னல்களைப் பேசும் திரைக்கதை தமிழில் எழுதப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஓர் இளம்பெண்ணின் பல காதல்களைக் காட்சிகளாகக் கொண்ட இயல்பான ஒரு திரைக்கதையை உருவாக்க முடியுமா என்பது பற்றிப் புதிதாகத் திரைக்கதை எழுதுவோர் யோசிக்கலாம். இது ‘அட்டகத்தி’ யுகம். இப்போது ‘ஒரு தலை ராகம்’ வகைப் படங்களுக்குப் பெரிய வேலை இல்லை. காதலுக்கும் கல்யாணத்துக்கும் குழந்தைகளுக்கும் என்ன தொடர்பு என்பதாகக் காலம் மாறிவருகிறது. அதற்கேற்ப தன்னிச்சையாகத் திரைக்கதையின் வெளிப்பாடும் மாறுபடுகிறது.
மாறுபடும் திரைக்கதைகள்
புத்தாயிரத்தில் திரைக்கதையின் மாறுபாட்டுக்கு உதாரணமாக ‘சுப்ரமணியபுரம்’ (2008) படத்தைச் சொல்லலாம். அதில் எண்பதுகள் என்ற காலகட்டத்தையே திரைக்கதையின் ஒரு அங்கமாக்கினார் சசிகுமார். எண்பதுகளின் சம்பவங்களை இரண்டாயிரத்தின் பார்வையுடன் அணுகிய படம் அது. நட்பு, காதல், உறவு போன்றவற்றின் நாளங்களில் பாயும் துரோக அரசியலை அநாயாசமாக வெளிப்படுத்திய திரைக்கதை அது. சமூகம் பற்றிய, சக மனிதர்கள் பற்றிய அவதானிப்பை உள்ளடக்கிய அப்படத்தின் எளிய காட்சிகள் ஆழ்மனதில் உருவாக்கிய அதிர்வுகள் முன்னுதாரணமற்றவை. அதுதான் ‘சுப்ரமணியபுர’த்தின் அடையாளம். ஆனால், அதற்குப் பின்னர் சசிகுமாரின் எந்தத் திரைக்கதையும் இதன் அருகில்கூட வர முடியவில்லை.
இதன் பின்னர் 2013-ல் வெளியான ‘சூது கவ்வும்’ படத்தின் திரைக்கதை சம காலகட்டத்துக்கான திரைக்கதை. ஒரு பெரிய பாரம்பரியத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்ட திரைக்கதை அது. அந்தப் புதிய ஜீவனில் அதன் முன்னோரின் சாயலைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. மரபில் கால் பதிக்காமல் பண்பாட்டு வரலாற்றின் புழுதி படியாமல் எழுதப்பட்ட திரைக்கதை அது. ‘ஆரண்யகாண்டம்’, ‘பீட்சா’ போன்ற படங்களிலும் திரைக்கதைக்குப் பிரதான இடமிருந்தது. இரண்டாயிரத்துக்குப் பின்னர் தொழில்நுட்பத்தின் உதவியால் வித்தியாசமான திரைக்கதைகளை எளிமையாகத் திரையில் காட்ட முடிந்தது. ஆகவே, மாறுபட்ட திரைக்கதைகளால் தமிழ்ப் படங்கள் முன்னைவிட வீரியமாக எழுந்திருக்க வேண்டும். ஆனால், அந்த அளவு திரைக்கதைகள் எழுச்சி பெறவில்லை என்பதே யதார்த்தம்.
தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago