எஸ்.கதிரேசன், துறையூர்.
‘சமயோசித புத்தி’க்கு ஒரு உதாரணம் சொல்லுங்களேன்?
ஒருமுறை கவியரசு கண்ணதாசன் தனது நண்பர் வீட்டுக்குச் சென்று அழைப்பு மணியை அழுத்திவிட்டு, வெளியே காத்திருந்தார். வந்திருப்பது கவியரசர் என்பதை அறியாத வீட்டுக்குள் இருந்த நண்பர், உள்ளே இருந்தபடியே ‘‘Who Is Standing Outside’’ என்று வெள்ளைக்காரன் ஸ்டைலில் கேட்டிருக்கிறார்.
பால்மனம் கொண்ட இந்த பைந்தமிழ் கவிஞர் சட்டென்று, ‘‘An Outstanding Poet is Standing Outside’’ என்றாராம்.
சமயோசித புத்தி என்றவுடன் என் புத்தியில் சமயோசிதமாய் வந்தது இந்த சம்பவம்தான்.
ரா.பிரசன்னா, மதுரை.
புன்னகையும் ஒரு மொழி என்கிறான் கவிதை கிறுக்கும் என் நண்பன். உங்கள் பதில்?
புன்னகையை வரவழைக்க ‘மொழி’ ஒரு சாதனம். அம்புடுதேன்!
படா படா சினிமா சாதனங்கள், வசதிகள் எதுவும் இல்லாத சைலண்ட் மூவீ காலத்தில் சார்லி சாப்ளின் படங்களைப் பார்க்கும்போது, நமக்குப் புன்னகையை வரவழைத்தது மொழி அல்ல; பார்த்த நம் இரு ‘விழி’!
இரா.முருகன், சென்னை.
நீங்கள் பழகிய எழுத்தாளர்களில் மறக்க முடியாதவர் யார்? ஏன்?
எண்பதுகளில் அவர் பெங்களூரில் இருந்த சமயம். என் நாடகங்களைக் காண மனைவி, மகன்களுடன் பெங்களூர் ‘சவுடையா’ ஹாலுக்கு வந்திருக்கிறார். ரொம்பவும் சந்தோஷப்பட்டு அவருக்கு முதல் வரிசையில் டிக்கெட் கொடுப்போம். ஆனால், அவரோ அதை எல்லாம் மறுத்துவிட்டு, பின்னாடி போய் உட்கார்ந்துகொள்வார். பந்தா எதுவும் இல்லாமல், தனது புகழ் வெளிச்சத்தைக் கழற்றிவிட்டு நாடகத்தை ரசிப்பார். நாடகத்தின் நகைச்சுவை அம்சங்களை எல்லாம் பார்த்து, விடாமல் சிரித்துக்கொண்டே இருப்பார். அந்த எழுத்து மேதை மழலை போல் சிரிப்பதை… மேடை படுதா கிழிசல் (நாங்கள் இதற்காகக் கிழித்தது) வழியாகப் பார்த்து பூரித்துப்போவோம்.
நாடகம் முடிந்தவுடன் ‘சவுடையா’ ஹால் வாசலில் வாட்ச்மேன் லைட்டை அணைக்கும் வரை, நாடகத்தில் ஒவ்வொரு காட்சியையும் பற்றி ‘இப்படி… அப்படி’ என்று நிறைகளையும் குறைகளையும் சுட்டியும் குட்டியும் காட்டியதை மறக்கவே முடியாது.
அவர் எழுத்தாளர் சுஜாதா!
ஒருநாள் மயிலாப்பூரில் சுஜாதா வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். உடம்பு முடியாமல் போன அவரை நான், அவர் மகன், ஆஸ்பத்திரி சிப்பந்தி மூவரும் நாற்காலியில் உட்கார வைத்து மாடியிலிருந்து கீழே தூக்கிவந்து ஆம்புலன்ஸில் சேர்த்தோம். சுஜாதா குடியிருந்த அடுக்ககத்தில் அன்று லிப்ட் மக்கர் செய்ததுதான் காரணம்.
இவரை எனக்குப் பிடிக்கும் என்பதை விட இந்த ‘ஸ்ரீரங்கம் ரெங்கராஜ’னுக்கு என்னையும், எனது நாடகங்களையும், எனது வெண்பாக்களையும் பிடிக்கும் என்பதுதான் எனக்குப் பெருமை!
எம்.வசந்தி, மயிலாப்பூர்.
ஹிஸ்டரின்னா… சரித்திரம்தானே..?
அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு?
எனக்குப் பிடித்த இரண்டு
His Storyகள்....
1. தமிழ் தாத்தா உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’.
2. கணித மேதை ராமானுஜத்தின் ‘எண் சரித்திரம்’!
கே.கோபாலன், திருவானைக்காவல்.
சிரிக்க வைக்கும் உங்களிடம் சீரியஸாக கேள்வி கேட்கக் கூடாதா என்ன? பள்ளிக்கூடங்களில் செக்ஸ் கல்வி அவசியமா?
கலவியைக் கல்வி ஆக்குவது அநாவசியம். மேலும் (பள்ளி) அறையில் நடப்பதை (பள்ளிக்) கூடத்தில் அம்பலமாக்க வேண்டுமா?
வி.ஆர்.கோமதி, திருநெல்வேலி.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. ஓ.கே சார்! செல் இல்லார்க்கு..?
‘பில்’ (செலவு) இல்லை!.
கலைச்செல்வி, சென்னை-28.
கமல் சாருக்கு வயது அறுபதாமே... வாழ்த்தினீர்களா?
வாழ்த்த வயதும் இருக்கு, வெண்பாவும் இருக்கு!
அடியேனுக்கு சினிமா என்னும் ‘கனவுத் தொழிற்சாலையின்’ சொர்க்க வாசலைத் திறந்து வைத்தவர் கமல். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்துக்கு வசனம் எழுதச் சொன்னவர், ‘வேலையை விட்டுடுங்க, ஷூட்டிங் ஸ்பாட்ல நீங்க இருக்க வேண்டி வரும்’ என்ற கண்டிஷனையும் போட்டார்.
இவர் கதை, திரைக்கதை, வசனம், டான்ஸ், எடிட்டிங், ஸ்டன்ட் என சினிமா யோகாஸனங்கள் அனைத்தையும் சேர்த்து ‘கமலஹாஸன’மாக செய்ய
வல்ல மர்மயோகி (ஸாரி... கர்மயோகி).
‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பார்கள். சுடுகாட்டில்தான் இவர் எனக்கு பழக்கமானார். ஆமாம்! இவரை நான் முதன்முதலில் செயின்ட்மேரிஸ் சுடுகாட்டில் ‘சத்யா’ பட ஷூட்டிங் நடந்தபோதுதான் சந்தித்தேன். அறுபதில் அடியெடுத்து வைக்கும் இவரோடு என்னுடைய பழக்கம் ஜென்ம ஜென்மமாய்த் தொடர அறுபத்தி மூவரை வேண்டுகிறேன்....
கமல வெண்பா!
‘பத்தாறு (அறுபது) ஆனாலும் பார்க்கப் பதினாறு
பித்தேற வைக்கும் பவுருஷமே - சொத்தாய்
சினிமாவை சேர்த்துவைத்த சாகா வரமே
இனிமேலும் நூற்றாண்(டு) இரும்’
எம்.கார்திக், கடலூர்.
கடவுள் உங்களுக்கு எதிரில் தோன்றினால் என்ன வரம் கேட்பீர்கள்?
அவர் கடவுளான வி‘வரம்’கேட்பேன்!
- இன்னும் கேட்கலாம்...
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago