மொழி கடந்த ரசனை 26: கண்களில் படரும் ஒளி மேகங்கள்

By எஸ்.எஸ்.வாசன்

இந்தியப் பாரம்பரிய இசை என்ற ஜீவநதியின் இரு கரைகளாக கர்னாடக இசையும் இந்துஸ்தானி இசையும் விளங்குகின்றன. இக்கரையில் இருப்பவர்களுக்கு அக்கரையைப் பற்றி அதிகம் அக்கறை இல்லாவிட்டாலும் இருகரைகளுமே நதியின் சீரான ஓட்டத்தை வழி நடத்துகின்றன என்பதை இரு தரப்பினரும் நன்றாக உணர்ந்துள்ளனர். திரை இசை இந்தப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

பீம்பலாஸ் என்ற இந்துஸ்தானி ராகம் (கர்னாடக இசையின் ஆபேரியின் சாயல்) தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் பல திரைப் பாடல்களின் மெட்டாக அமைந்து ரசிகர்களை மகிழ்விக்கிறது. இந்துஸ்தானி இசையில் மதியப் பொழுதிலும் முன்சந்திப் பொழுதிலும் பாடும் ராகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ராகம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கையாளப்பட்டுப் பின்னர் மதன் மோகன் இசை அமைப்பில் ராஜா மெஹதி அலி கான் எழுதிய ‘நயனா மே பத்ரா சாயே, பிஜிலி ஸீ சம்கே ஹாய்’என்று தொடங்கும் லதா பாடிய பாடலால் அதிகப் பிரபலம் அடைந்தது.

இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கு ஏன் பெரும் சோதனை என்று தொடங்கும் கே.வி. மகாதேவன் இசை அமைப்பில் டி.ஆர். மகாலிங்கம் பாடிய கண்ணதாசனின் பாடல், பி. நாகேஸ்வர ராவ் இசை அமைப்பில் ‘பாவா மராடாலு’ என்ற தெலுங்கு படத்தில் எஸ் ஜானகி பாடிய ‘நீ மேகாலாலு’என்று தொடங்கும் பாடல் ஆகியவற்றின் மெட்டாக பீம்பலாஸ் ராகம் அமைந்துள்ளது. இந்துஸ்தானிக்கும் கர்னாடக இசைக்கும் பாலமாகத் திகழும் இந்த ராகத்தில் அமைந்த ‘மேரா சாயா’ படப் பாடலின் பொருள்:

கண்களில் படரும் ஒளி மேகங்களில்

தென்படும் உணர்வு மின்னலை விஞ்சும்

இத்தகு என் காதலன் என்னைத் தழுவுவான் அவன்

கண்களில் படரும் ஒளி மேகங்கள்.

கள்ளின் மயக்கத்தில் மூழ்கின எங்கள் கண்கள்

தள்ளாட்டத்தில் ஆட்பட்டோம் நாம் இருவரும்

ஆனால் உன் இமைகளில் விழிப்புடன் இருக்கும் நம் காதல் என்னும் அந்தப் பறவை

வெட்கத்தை ஒரு கோப்பையில் உனக்குத் தரும்

நான் ஒரு காதல் பைத்தியம் கனவுகளின் ராணி

கடந்த ஜென்மத்தில்ருந்து உன் காதல் சரித்திரமாக

நடந்து வரும் எனை இந்த ஜென்மத்திலும் உனதாக்கு

கண்களில் படரும் ஒளி மேகங்களில்

தென்படும் உணர்வு மின்னலை விஞ்சும்

இத்தகு என் காதலன் என்னைத் தழுவுவான் அவன்

கண்களில் படரும் ஒளி மேகங்கள்.

சிதார் இசையின் பின்னணியுடன் சிறப்பான லேக் வியூ அரண்மனைக் கட்டிடங்களின் சூழலில் காட்சியாக்கப்பட்ட இந்தப் பாடல் காட்சி மீண்டும் மீண்டும் பார்த்து, கேட்டு ரசிக்கத் தக்க ஒன்று. லதா மங்கேஷ்கருக்குப் பெரும் புகழ் சேர்த்த இப்பாடலின் வரிகளின் சொற்கள் நுட்பமான பொருள் கொண்டவை. மொழி பெயர்ப்புக்குச் சவால் விடும் வண்ணம் ஒன்றுக்கும் மேற்பட்ட பல உள் அர்த்தங்கள் கொண்டவை.

சான்றாக இதன் இரு வரிகள்:

பாடலின் இரண்டாவது வரியாக அமைந்த

“ஐஸா மே பாலம் மோஹே கர்வா லாகே லே”

பாலம் என்ற சொல்லுக்கு காதலன் என்று பொருள்.

வாலம் (அன்புடையவர்) என்ற சமஸ்கிருத மூலச் சொல்லின் திரிபான இச்சொல் உருது, பாரசீக, இந்திக் கவிதைகளில் காதலன் என்ற பொருளில் தற்போதும் தவறாமல் இடம்பெறுகிறது. அதே போன்று, ‘கர்வா லாகே’என்ற பதம் ‘கர்வம் கொள்கிறேன்’ என்ற பொருள் தருவதாகப் பலர் கருதக்கூடும். ஆனால், தற்போது ஜார்க்கண்ட் என்று அழைக்கப்படும் பகுதியில் மட்டும் வழக்கில் உள்ள அந்தச் சொலவடையின் பொருள் ‘தழுவுதல்’, ‘கட்டி அணைத்தல்’ என்பதாகும். கலா என்றால் கழுத்து. கலே லக்ஜா என்றால் தழுவு என்று பொருள். ‘ல’ எல்லாம் ‘ஆர்’ ஆக மாறும் அங்குள்ள பேச்சு வழக்கின்படி, கலா கர் ஆகி, பின் கர்வா ஆயிற்று.

இதே போன்று அனுபல்லவியின் ஒரு வரியான ‘ஜாக்தே ரஹே ஹி தோஹே’ பல்கோ கீ பியாரி பக்கியா’ என்ற வரியின் ‘தோஹே’ போஜ்புரி மொழிச் சொல். உனது என்று பொருள். ‘பல்கோ’ என்ற சொல் இந்தி, உருது மொழிகளில் கண் இமைகளையும், இமைப் பொழுதையும் குறிக்கும். கண்களுக்குச் சாளரமாக விளங்கும் இமைகளைக் குறிப்பிடும் இந்தச் சொல் பிலிப்பனோ மொழியில் ‘பால்கனி, ‘காலரி’ என்ற பொருளைத் தருவது சிந்திக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்