மலையாளத்தில் வெற்றிபெற்று, ஊடகங்களின் பாராட்டுகளையும் அள்ளிய 'சாப்பா குரிசு' படத்தின் தமிழ் வடிவம்தான் புலிவால். தொழில்நுட்பத்தின் பிடியை உதற முடியாத நவீன வாழ்க்கை முறையில் இருக்கும் ஆபத்துகளைச் சித்தரித்திருக்கும் படம்.
ஒரு பல்பொருள் அங்காடியில் சேல்ஸ் பாயாக வேலை செய்யும் காசி (விமல்), குடிசைப் பகுதியில் வசிக்கிறான். அவன் கையில் கார்த்திக் (பிரசன்னா) என்னும் பணக்கார இளைஞன் தவறவிடும் விலையுயர்ந்த 'ஐ போன்' கிடைக்கிறது. பதற்றமடையும் கார்த்திக் பதைபதைப்புடன் தொலைத்த கைபேசிக்கு போன் செய்கிறான். காசி கார்த்திக்கை அலையவிடுகிறான்.
அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்பதற்கு இன்றைய இளைஞர்கள் பலரிடம் இருக்கும் ஆபத்தான விளையாட்டுத்தனங்களில் பதில் இருக்கிறது. அது என்ன ஆயிற்று என்பதற்குப் படத்தின் இரண்டாம் பாதியில் பதில் இருக்கிறது.
ஒரு த்ரில்லர் படத்துக்கான அட்டகாசமான கதையாகத் தோன்றினாலும், காட்சிப்படுத்திய விதம், சோதிக்கிறது. குறிப்பாக முதல் பாதியில் காமெடி, காதல், திரில்லர், பாட்டு என அடுத்தடுத்து இருந்தாலும் எங்கேயும் நம்மால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.
விமல் எப்படிப்பட்டவர்? அவர் சைக்கோவா, அல்லது இயல்பிலேயே கெட்டவரா? இதையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்ள எந்த அடிப்படையும் இல்லை.
விமல் அந்த போனைத் தன்னிடமே வைத்துக்கொள்வதற்கு வலுவான காரணம் சொல்லப்படவில்லை. போனை வைத்துக்கொண்டு இரண்டாம் பாதியில் அவர் செய்யும் அட்டகாசம் எரிச்சலைத் தருகிறது. பிரசன்னா போன் செய்யும் ஒவ்வொரு முறையும் விமல் அருகில் இருக்கிறார். போன் வைப்ரேட்டிங் மோடிலும் இல்லை. தன்னுடைய ரிங்டோனைக் கூடவா பிரசன்னாவால் கண்டு பிடிக்க முடியாது?
இரண்டாம் பாதியில் இருக்கும் பதற்றத்தைப் படம் முழுவதும் பரவ விட்டிருக்கலாம்.
விமலுக்கு வித்தியாசமான வேடம் கிடைத்தும் வழக்கமான நடிப்பைத்தான் தந்திருக்கிறார். ஆனால் கடைசி இருபது நிமிடங்கள் விமலும், பிரசன்னாவும் கதிகலங்க வைக்கிறார்கள். ஓவியா கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
கதை வேகமெடுத்த பிறகு கதாபாத்திரங்களின் வேகத்துக்கு ஓடும் போஜன் கே. தினேஷின் கேமரா நம்மைக் கதைக் களத்துக்குள் உலவவிடும் ஜாலத்தைச் செய்கிறது. என்.ஆர் .ரகுநந்தனின் பாடல்கள் கேட்கும்படி உள்ளன. அவற்றைப் படமாக்கிய விதத்தில் கவனிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் போஜன் கே. தினேஷ்.
தொழில்நுட்பத்துக்கும் வாழ்க்கை முறைக்குமான ஓட்டப் பந்தயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற செய்தி சொன்னதற்காக சபாஷ் போடலாம். ஆனால் மொத்தப் படத்துக்கு..?